வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா

வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா
Pamayan.

காலையே கலசப்பாக்கம் தோழர் இராசேந்திரன் அவர்களின் கவனிக்கப்படாத அழைப்பைப் பார்த்தேன்.

பயணத்திற்கு கிளம்பும் அவசரம். ஏதேனும் ஒரு கட்டுரை பற்றியோ அல்லது இது குறித்து எழுதுங்கள் என்று கூறவோ இருக்கும் என்று நினைத்து, பேருந்தில் பயணிக்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

பேருத்தில் படிக்க சம்பரானில் காந்தி புத்தகத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டிருந்த போது இராசேந்திரனிடம் பேசிய பின் படிக்கலாம் என்று பயணத்தின் போது அழைத்த பேசிய பின் மனது கனத்துப் போனது.

இன்னுமொரு மூத்த அறிஞரை, முன்னேர் ஒன்றை இழந்து விட்டோமே என்று பெரும் சோகம் அப்பியது மனதில்.

தமிழறிஞராக, தமிழ் கணக்கியல் அறிஞராக, தொல்லியலாளராக, விதை சேமிப்பாளராக ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் இயங்கிக் கொண்டிருந்த வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா நேற்று இரவு இயற்கையெய்திய சேதி தான்.

செங்கம் வெங்கடாசலம் ஐயா என்று தான் என் மனதில் நிற்கிறார் வளையாம்பட்டு வெங்கடாசலம் அவர்கள்.

முதலில் எப்போது சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் கண்ணிற்குள் இருப்பது கருத்த இராகி இரகம் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அது விளையும் மலைப் பகுதி, விளைவிக்கும் பழங்குடி மக்கள் என விளக்கியது மட்டும் மனக்கண்ணில் இன்றும் நிற்கிறது.

ஏறத்தாழ 40 இராகி வகைகள் என்று நினைக்கிறேன். எல்லாம் தமிழ் நாட்டு இரகங்கள். இராகியில் இத்தனை இரகங்களா என்ற என் முதல் வியப்பை முறியடிக்கும் வகையில் அடுத்து அவர் காட்டியது நெல் இரகங்கள்.

இதெல்லாம் தமிழகத்து சொத்து என்று விளக்கினார் மிகுந்த குதூகலத்துடன்.

அப்போதெல்லாம் இந்தப் பெருமை மிகு பாரம்பரியத்தின் மீது பெருமை ஏது?

இந்த நிகழ்வு அநேகமாக 1990 களின் மத்தியில் என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் இன்றும் நம் கவனம் நெல்லின் மீது தான். சிறு தானியங்கள் மீதல்ல. ஆனால் நெல்லுக்கு நிகராக சிறு தானியத்தையும் சம அக்கறையுடன் பாதுகாக்க முயன்ற முதல் தமிழர் இவரே. இத்தனைக்கும் இவர் தமிழகம் முழுமைக்கும் அலைந்து திரிந்து சேகரித்தவை அல்ல. இவர் காட்டிய இராகி, திணை மற்றும் நெல் இரகங்கள் தான் வாழும் திருவண்ணாமலைப் பகுதி மற்றும் பொறியாளராகப் பணி புரிந்த பகுதிகளிலிருந்து சேகரித்தவை.

இவரது விதைகள் மீதான அக்கறையும் கவனிப்பும் நம்மாழ்வாரை ஈர்த்ததில் வியப்பில்லை. நம்மாழ்வார் பல சந்தர்ப்பங்களில் வெங்கடாசலம் பற்றி சிலாகித்து பேசியதுண்டு .

பொறியாளரான இவரது இன்னொரு தணியா ஆர்வம் கணக்கியல். தமிழர் கணக்கியல் மேதை. தமிழரின் தொன்மம் குறித்த இவரது ஆய்வுகளும் கட்டுரைகளும் இன்றைய இளைஞர்களுக்கு தேவையானது. திணையில் குறித்த பார்வை சிறப்பானது.

மூன்று மாதங்கட்குப் முன் கலசப்பாக்கத்தில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு தலைமை இவரே. மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடந்த சந்திப்பு. பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அவருக்கு. நா தழுதழுக்க,”எப்படி இருக்கீங்க செல்வம், நிறைய சுத்தறீங்க, உடம்பையும் பாத்துக்கனும்,” என்ற போது ஒரு மூத்த இளைஞனின் அன்பும் அக்கறையும் கவ்விக் கொண்டது.

தளர்ந்திருந்தார். குரலும் அப்படியே.

என்ன வயதாயிற்று என்றேன். 94 என்றார். ஆனால் அப்படி தெரியவில்லையே என்றேன். 80 களின் ஆரம்பத்தில் இருப்பார் என்று நினைத்தேன். இந்த வயதில் தலைமை உரையை எழுந்து நின்று பேச விரும்பினார். எங்களின் வற்புறுத்தல்கள் தாண்டி நின்றபடியே பேசினார்.

சிறு(அருந்) தானியங்கள் வளர்த்த உடல் அல்லவா!!!

தமிழர்களின் பெருமைகளை, தொன்மங்களை, சிந்து வெளியோடு இருந்தத் தொடர்புகளையெல்லாம் பேசியும் எழுதியும் வந்தவர். இதற்காக “நன்னன்” என்ற பெயரில் இதழ் நடத்தினார். அதில் தமிழர்களின் கணக்கியல், தொன்மை குறித்தெல்லாம் எழுதினார்.

ஐயா அவர்களுக்கு செய்ய வேண்டிய்இறுதி மரியாதையை செய்ய இயலா நிலை கூடுதல் வருத்தத்தை அளிக்கிறது.

மிகுதியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவர். இருப்பினும் தனக்குப் பின் இந்த வேலைகளை எடுத்துச் செல்லும் (விதைகள் தளத்தில்) அடுத்த தலைமுறையை, இரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார். தன் வேலைகள் கவனிக்கப்படாமல், மதிக்கப்படாமல் இருக்கிறதே என்ற ஏக்கமின்றி மறைந்திருக்கிறார்.

வெங்கடாசலம் ஐயாவின் இறுதிப் பயணத்திற்கு பங்கேற்க இயலாமை பயணம் முழுதும் இருக்கும். உங்களின் பிள்ளைகளுடன் தொடர்ந்து இயங்கப் பலரும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையாவது இச்சமூகம், அடுத்த இரு தலைமுறைகள் தந்திருப்பது சற்றே மகிழ்வு தான்

உங்களது நீநீநீநீநீண்ட பயணத்தை முடித்துக் கொண்டீர்கள்.

நாங்கள் தொடர்ந்து நடப்போம். நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் நம்மாழ்வார், நீங்கள். போன்றவர்களின் பணியை சுமந்து கொண்டு ….

தமிழ் சமூகம் அடைய வேண்டிய தூரம், தமிழக விவசாயிகள் செய்திட வேண்டிய காரியங்கள் மிக நிறைய உள்ளன.

உங்களையொத்தவர்கள் அக்கறைப்பட்ட காரியங்களுக்கான பயணத்தை தொடர்வோம் என்ற நம்பிக்கையை உங்களுக்கு கொடுக்க முடிந்தது சற்றே மகிழ்ச்சி தான்.

நன்றிகள் ஐயா. தொழுது வணங்குகிறேன்.

பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும்? தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா? அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா?

Continue reading

புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற

அன்புள்ள விவசாய சொந்தங்களே

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்க்கு அவசியம் முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ.எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும் விடவும். இது புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.

வேப்பங்கொட்டை கரைசலை 15 நாட்களுக்கொருமுறை தெளிப்பாக அளிக்கவும். புகையான் மற்றும் பல்வேறு தாக்குதலில் இருந்து பயிரைக் காப்பாற்ற உதவும்.

தேமோர் கரைசலை பூக்கும் 7 நாட்களுக்கு முன் தயாரித்து உரிய நாளில் தெளிக்கவும். 6 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் முறை கொடுப்பது சிறப்பு.

பூத்து பால்பிடிக்கத் துவங்கும் நாளில் தண்ணீர் பற்றாக்குறை இன்றி தெளிப்பிலாவது தண்ணீர் கொடுப்பது வேண்டும்.நீர் இருப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு இஞ்ச் உயரத் தண்ணீராவது க்கி வைப்பது சிறப்பு.

பூக்கும் போது தேமோர் கரைசல் இல்லை எனில் பஞ்சகாவியா அல்லது இ.எம் இரு முறை தெளிக்கலாம்.

அளவுக்கதிகமான அடர் பச்சை நெல் தாளில் இருந்தால் தழைச்சத்து தருவதைக் குறைக்கவும்.இது நோய் மற்றும் பூச்சிகளிடமிருந்து காக்கும். விளக்குப் பொறி ஏக்கருக்கு 4 வைக்கலாம்.

சரியாக விளைச்சலைத் தராத நிலத்தில் வாரம் ஒரு முறை பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், இ.எம்,மீனமிலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தரைவழி தரலாம். 15 நாட்களுக்கொருமுறை மட்டும் தெளிக்கலாம்

மாதமொருமுறை சூடோமோனாஸை ஏக்கருக்கு 1 லிட் வீதத்தில் தரைவழியும் 10 லிட்க்கு 50 மி.லிட் எனத் தெளித்தும் அவசியம் விடவேண்டும்.

பிரிட்டோராஜ்

விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங்

விவசாயிகள் தோல்வி என்ன? , விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங் ?

செந்தில் சின்னசாமி

1 . விவசாயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் , அதாவது எந்த தொழிலும் கிடைக்க வில்லை என்பதால் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக உண்டு .. படித்தவர்கள் , கொஞ்சம் அறிவாளிகள் அதிக லாபம் வரும் தொழிலுக்கு மாறி கொள்கிறர்ர்கள்

2 . எந்த சூழல் ,என்ன விவசாயம் செய்யலாம் என்ற பொது அறிவு சுத்தமாக இல்லை .., இந்த விவசாயிகளுக்கு பொதுவாகவே சொந்த புத்தியும் இருக்காது , சொல்லு புத்தியும் இருக்காது, தானே அறிவாளி என்ற மட்டமான புத்தி .

3 . அந்த ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் மாணவர்களை போல பக்கத்தில் இருப்பவர் என்ன விதைக்கிறர்ர்களே, பயிர் செய்கிறர்ர்களோ அதையே பயிர் செய்வார்கள் .

4 விவசாயத்தில் ஒரு பிளான் என்பதே சுத்தமாக இல்லை . மனம் போன போக்கில் விவசாயம் , செய்த் வேலையவே திருப்பி திருப்பி செய்யும் மன நிலை , ஒரு சிஸ்டம் அவர்களிடம் இல்லை

5 . என்ன முதலீடு போடுகிறோம் , என்ன வரும் என்ற வியாபார யுத்தியும் இல்லை , அதை யாருக்கு விற்க போகிறோம் , எப்பொழுது விற்க போகிறோம் என்ற அறிவு சுத்தமாக இல்லை .

6 .தனக்கு தெரிந்ததையே திருப்பி திருப்பி விவசாயம் செய்யும் மனநிலை . கொஞ்சமும் மாற்றி யோசித்து விளைச்சலை பெருக்கும் மன நிலை இல்லை , யாரவது ஏதாவது சொன்ன அதையவே பிடித்து கொள்வது , தட்ட முட்ட விவசாயிகள்

7 . மழை அதிகமாக பெய்தால் என்ன பண்ணுவேன் , மழையே பெய்யாவிட்டால் என்ன பண்ணுவேன் , என்ற தொலை நோக்கும் பார்வை இல்லை . கண்டதையும் விவசாயம் செய்ய வேண்டியது, கடைசியில் குறை சொல்வது …, உதாரணத்திற்கு தீபாவளி நேரத்தில் மழை வரும் , மார்கழியில் பனி வரும் இதையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை .

8 . தான் என்ன செலவு செய்தேன் என்ற கணக்கு சுத்தமாக இல்லை , எழுதி வைப்பதும் இல்லை , விவசாய முதலீட்டுக்கு இருக்கும் பணத்தை வேறு ஏதாவ்துக்கு செலவு செய்வது ,அப்புறம் கடன் வாங்கி பயிரிடுவது , ஏதாவது இயற்கை சீற்றம் வந்தால் மொத்தமும் போச்சு என்று நிவாரணத்துக்கு ஏங்குவது ..

9 , அரசாங்கம் அளிக்கும் மானியங்ககளை கேட்டு பெறுவது இல்லை , அதை யாரிடம் வாங்குவது என்ற அறிவும் இல்லை , அல்லது தெரிந்து கொள்வதும் இல்லை , பொத்தாம் பொதுவாக கிடைக்காது என்று ஒதுங்கி விடுவது . அல்லது படிக்க வில்லை என்று சொல்வது !! சாதரண விஷயம் இதுக்கு எதுக்கு படிப்பெல்லாம் – சரி ஏன் படிக்க வில்லை ?

10 . பக்கத்துக்கு தோட்டத்து காரர்களிடம் எப்பவும் சண்டை , வாய்க்காலுக்கும் , வரப்புக்கும் சண்டையோ சண்டை . ஒற்றுமை குணம் இல்லாத விவசாயிகள் , பொறாமை குணம் அதிகம் உள்ளவர்கள் தொழில் விவசாயம

11 , உரம் ஏன் போட வேண்டும் , எதுக்கு போடவேண்டும் , அதற்க்கு ஏதாவது மாற்று உண்டா என்ற அடிப்படை அறிவு கூட இல்லை . உரத்தை , பூச்சி கொல்லியும் வாங்கி கொட்ட வேண்டியது .. தற்காலிக வருமானத்தை பார்த்து அனுபவித்து விட்டு காணாமல் போய் விடுவது ..

12 , பல விதமான பயிர்களை வைத்து விவசாயம் பண்ணுவதில்லை , ஒன்று போனாலும் ஒன்று கிடைக்கும் , மொத்தமாக ஒரே பயிரை போட வேண்டியது வந்தா பெரிய லாபம் , இல்லாட்டி நாட்டமே .. ஆடு , மாடு , கோழி என்று பலவிதமான வருமானங்களை பெற வேண்டும் .

13 .மார்கட்டிங் , விற்பனை யுத்திகளை படித்து கொண்டே இருக்க வேண்டும் , வாய்ப்பு கிடைக்கும் போது தரமான பொருட்களை நேரடியாக மக்களிடம் விற்கலாம் , அது என்னோட வேலை இல்லை என்று ஒதுங்கி கொள்வது

14 , ஒவ்வொருவரும் ,விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களிடம் ட்ரைனிங் எடுக்கவேண்டும் , அதே போல தோல்வி பற்றியும் விவாதித்து அறிந்து கொள்ளவேண்டும் , முடிந்த அளவு ஆட்களை குறைந்து கொண்டு , இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். கடுமையா உழைப்பத்ற்கு பதில் , தந்திரமாகவும் ,ஸ்மார்ட்டாகவும் உழைக்க வேண்டும். – இதெல்லாம் யாரும் செய்வதில்லை ..

15 . பெரும்பாலான விவசாயிகள் பொறுப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் , கோவில் க்கு போகிறேன் , மலைக்கு போறேன் , பண்டிகை , பெரியப்ப வீட்டில் இலவு , சித்தப்பா வீட்டில் கல்யாணம் , மாமனார் வீட்டில் கிடா விருந்து இப்படி பெரும்பாலான நாட்கள் வீணடிக்ககிறார்கள் , விவசாயம் பற்றிய அறிவுக்கு ஒரு நிமிடம் கூட செலவு செய்வது இல்லை .

16 . நல்ல படிப்பவர்க்ள டாக்டர் என்ஜினீயர் , அதைவிட கொஞ்சம் கம்மி வக்கீல் ,அறிவியல் , அதைவிட சுமார் தொழில் தொடுங்குறேன் , பேங்க் , கவர்மெண்ட் எக்ஸாம் படிக்கிறேன் னு போயிடுறீங்க ….
எங்கேயும் போக தெரியாதவன் அல்லது சோம்பேறிகள் மட்டும் விவசாயத்துக்கு வந்தா எப்படி விவசாயம் ஜெயிக்கும் .. அவனும் , வீடு , நாடு மொத்தமும் நாசமாக போனதற்கு காரணம்..

டாக்டர் , என்ஜினீயர் , வக்கீல் அரசியில் வாதி , சினிமாக்காரன் தங்கள் பிள்ளைகளை அதே தொழிலில் வைக்கிறான் , பிச்சைக்காரன் கூட தன பிள்ளையை பிச்சை கரண் ஆக்குகிறான் , ..

விவசாயி தன பிள்ளையை விவசாயி ஆக்க ரெடி இல்லை … .

என்னை பொறுத்தவரை …
விவசாயத்தில் நாட்டம் இல்லாமல் , உரம் பூச்சி கொல்லி மருந்து அடிக்காமல் தரமான விவசாயம் செய்ய முடியும் , கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் , சுமாரான லாபம் பார்க்கலாம் .
உழைப்பை விட அறிவு மட்டுமே மூலதனம்

பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ?

வணக்கங்க 🙏
பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள், அதை பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ? 🤔

கொஞ்சம் வித்தியாசமான பதிவு.
எனக்கு தெரிந்ததை, படித்து புரிந்ததை இங்கே கொடுக்கிறேன்.

உங்களுக்கு ஒரு அதிசயமான உண்மையை முன் வைக்கிறேன்.

ஒரு தாவரம் தன் வாழ்நாளில் தனக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்து 4% அளவுக்கே எடுத்துக் கொள்கிறதாம். மீதமுள்ளவைகளை தண்ணீர், காற்று, சூரிய ஒளி மூலம் அது பெற்றுக்கொள்கிறதாம். 🙄

சரிங்க, விஷயத்துக்கு வருவோம்.
பயிருக்கு தேவையான சத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.

1. அதிக அளவில் தேவையான சத்துக்கள். (பேரூட்டச்சத்துகள்)

2. குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்கள். ( நுண்ணூட்டச்சத்துகள்)

N P K என சொல்லப்படும் பேரூட்டச்சத்துகள் மண், நீர், காற்று, சூரிய ஒளி மூலம் பயிருக்கு கிடைக்கிறது.

ஆனால் நுண்ணூட்டச்சத்துகள் மண்ணில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

பயிரின் விளைச்சலில், காய்கள், பழங்கள், தானியங்கள், எல்லாம் நமது தேவைக்கு போக மீதி சந்தைக்கு சென்று விடும் தானே?

அதில் உள்ள சத்துக்கள் மண்ணைவிட்டு வெளியேறிவிடுகிறது. பேரூட்டச்சத்துகள் பெரும்பாலும் மற்ற காரணிகள் வழியாக வந்து விடுகிறது (காற்று, நீர், சூரிய ஒளி)
ஆனால் நுண்ணூட்டச்சத்துகள் திரும்புவதில்லை.

மண்ணில் சத்துக்கள் நிறைய இருந்தாலும் நெடுங்காலமாக பயிர் செய்யப்படுவதால் இந்த சத்துக்கள் குறைந்து கொண்டே போய் பற்றாக்குறை வரும் வாய்ப்பு உள்ளது.

இதை எப்படி தடுப்பது? 🤔

JADAM method of agriculture பற்றி சிறிது படித்தேன்.
இந்த நிலை பற்றி தெளிவாக பேசுகிறது.

நிறைய செய்திகளை அது கொடுத்து கொண்டே இருந்தது.
அது குறித்தும் பேசுவோம்.
இந்த நுண்ணூட்டச்சத்துகளை எப்படி நிலைநிறுத்துவது பற்றியும் சொல்கிறது.

ஒரு சின்ன விளக்கம் கொடுத்து வழி காட்டுகிறது.
உலகத்திலேயே எல்லா சத்துக்களையும் சமச்சீராக கொண்டுள்ளது தாய் பால் மட்டுமே.
அதே போன்ற அனைத்து சத்துக்களும் உள்ளடிக்கியிருப்பது கடல் நீர் மட்டுமே.

அதனால் குறைந்த அளவில் நீர் பாசனத்தில் கலந்து விட சொல்கிறது.

அதாவது நுண்ணுயிர்கள் கலவை தயாரிக்கும் போது 100 ml கடல் நீர் அல்லது 100 கிராம் உப்பு சேர்க்கலாம் என வழி சொல்கிறது.
200 லிட்டர் கலவையில் 100 கிராம் உப்பு சேர்க்கலாம்.
இது காலப்போக்கில் தீர்ந்த சத்துக்களை நிறைவு செய்யக் கூடும் என நம்பிக்கை கொடுக்கிறது.

நாம் நுண்ணுயிர்கள் கலவைகளை பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் தயாரிக்கிறோம் தானே?
அப்படி பட்ட நிலையில் வளரும் நுண்ணுயிர்கள் தோட்டத்தில் எப்படி வளரும்?
அதனால் தோட்டத்து தட்பவெட்ப நிலையில் தயாரியுங்கள். அப்படி வளரும் நுண்ணுயிர்கள் மட்டுமே மண்ணில் நிலைபெறும் என சொல்கிறது.

எதுவுமே முழுமையானது அல்ல, தொடர்ந்து தேடுதல் வேண்டும்.

எனக்கு தெரிந்த வரை சொல்லிவிட்டேன், இதை மேலும் மெருகேறும் பணி உங்களுடையது.

வாழ்த்துகள்.

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?!
========================
இது இயற்கை விவசாயத்தில் மிக முக்கியமான செயல்பாடு.

அடிப்படையில் மண்ணில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது.
என்ன பிரச்சனை என்றால் அது பயிர் நேரிடையாக எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

என் தந்தை சொல்லுவார், நிலத்தை கொஞ்சம் ஆறப்போடனும் என்று.

அந்த வயதில் எனக்கு ஏன் என்று கேட்கவும் தோன்றவில்லை.

பின்னாளில் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்.

மதியம் சாப்பாட்டுக்கு அம்மா முன்கூட்டியே சமைக்க தொடங்குவார்கள். அப்படிதான் இதுவும். நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை மெதுவாக சமைத்து பயிர் எடுக்கும் வகைக்கு கொண்டு வருகிறது. அதுதான் அப்பா, ‘நிலத்தை ஆறப்போடு’ என சொன்னார்

எல்லா பயிர்களும் மண்ணில் இருந்து ஒரே மாதிரி சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை. சில பயிர்கள் சில சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும். சில பயிர்கள் அந்த சத்துக்களை குறைவாக எடுத்துக் கொள்ளும்.

அதிகமாக ஒரு சத்து எடுத்துக் கொள்ளும் வேளையில் மண்ணில் அந்த சத்து குறைபாடு தற்காலிகமாக இருக்கும். அந்த சத்து மீண்டும் நுண்ணுயிர்களால் உயார்ப்பிக்க சிறிது காலம் தேவை படும்.
இந்த காலத்தில் அதே பயிரை மீண்டும் பயிரிட்டால் அந்த சத்து குறைவாகவே கிடைக்கும் நிலை ஏற்படக்கூடும்.

வேறு ஒரு பயிர், அந்த சத்து குறைவாக தேவைப்படும் பயிர், செய்யும்போது அந்த சத்து குறைவாகவே மண்ணில் இருந்து எடுக்கப் படும். அந்த காலத்தில் அந்த சத்து மீண்டும் மண்ணில் நிலைபெறும்.
இதுதான் அந்த சூட்சுமம்.

இதனால் மண்ணில் சத்துக்கள் சமநிலை உறுதி படுகிறது.

அடுத்து பயிர்கள் தனக்கு வேண்டிய சத்துக்களை மண்ணில் இருந்து தான் எடுத்துக் கொள்ளுகிறதா, அவை எப்படி பயிர்களுக்கு கிடைக்கிறது என்பது குறித்து தொடர் பதிவில் பார்க்கலாம்.

சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி

மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு

☫ *இன்று ஒரு தகவல்* ☫

*மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு*

தமிழகத்தில் அதிகளவில் மானாவாரி நிலங்கள் தான் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி மழையை பற்றி பேசுவதும், கவலைப்படுவதும் ஆண்டு தோறும் நிகழ்வது வழக்கமான ஒன்று.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மழை கட்டாயம் கிடைத்தாலும் பல நிலப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு நிர்மாணித்தல், கசிவு நீர்க்குட்டை, பண்ணைக்குட்டை, கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழுஉரம் இடல் சரிவுக்கு குறுக்கே உழவு, ஆழச்சால் அகலப்பாத்தி, வறட்சி தாங்கும் தானிய விதைப்பு, பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, விதைகளை கடினப்படுத்துதல், வேர்விட்ட நல்ல குச்சிகள் நடுதல், வறட்சி தாங்கும் மரக்கன்றுகள் நடுதல் என அனைவரும் அறிந்ததே.

மானாவாரி தீவனம்
இறவை பாசனம் செய்யும் விவசாயிகளின் வரவு செலவினை ஒப்பிட்டு எதுவும் செய்யாதிருந்து பெரும் நஷ்டத்தை அடைவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பல ஏக்கர் தரிசாக விடும் விவசாயிகள் மாற்று வழி யோசித்து, தங்களது பகுதிக்கேற்ற மரங்களை தேர்வு செய்யலாம். கால்நடைகள் வளர்க்க உறுதுணையான பல தீவன மரங்கள் வறட்சி தாங்கி வளரும் என்பது அறியாமல் உள்ளனர். நமது பகுதியில் வளர்ந்த மரங்களை கூர்ந்து கவனித்து கூட நல்ல முடிவு எடுக்கலாம்.
குறிப்பாக மரத் தீவனத் தழைக்காக கருவேல், வெள்வேல், வாகை, மந்தாரை, கல்யாண முருங்கை, சூபாபுல், வாத நாராயணன், பெருமரம், வேம்பு, பூவரசு, பலா, இலந்தை, கிளைரிசிடியா, அரசு, ஆல், ஆச்சா, மலைவேம்பு இன்னும் பலவகை வரம் தரும் மரங்கள் உள்ளன. மரத்தழைகளில் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, ஊட்டச்சத்து மற்றும் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. அவற்றின் செரிப்புத்திறன் அதிகமாக உள்ளது.

முளைப்பாரி தீவனம்
மானாவாரி களர், உவர் நிலங்களில் வில்வ மரம் நன்கு வளரும். அவற்றை ஆடுகள் விரும்பி உண்ணும்.
இவை தவிர வாதாங் கொட்டை மரம், இலுப்பை மரம், கொடுக்காப்புளி, இலவம் மரம், செடி முருங்கை, மர முருங்கை, அகத்தி, அத்திமரம், மகிழம்பூ மரம், புளியமரம் ஆகியவை மூலம் நாம் நிறைய தழைகள் பெறலாம்.
எனவே மானாவாரி பகுதியில் உள்ள விவசாயிகள் இவற்றை தனது தோட்டத்தில் நட்டு பசும்புல் கிடைக்காததால் மாடு வளர்க்கவில்லை என்று கூறாமல் குறைந்த நீர் கொண்டு டிரே முறையில் தீவனச் சோளம், முளைப்பாரி, ராகி முளைப்பாரி மற்றும் பார்லி, கோதுமை, முறைத்த இளஞ்செடிகள் உற்பத்தியும் செய்து கால்நடை வளர்க்கலாம். வாய்ப்புள்ளவர்கள் வளர்த்து விற்பனையும் செய்யலாம். பலவகை மரங்களின் பூக்கள், காய்கள் மற்றும் பழங்கள், உலர்த்திய தழைகள், ஊறுகாய்வற்றல் எனும் சைலோ உத்திகள் மூலமும் வருமானம் ஈட்டலாம். மரக்கன்றுகள் மானிய விலையில் பெற்றிட, மானாவாரியில் அவற்றை பராமரித்திட, விபரங்களுக்கு ர.வினோத்குமார் 98422 0 8001 ,உதவி வேளாண்மை அலுவலர் அவிநாசி; நன்றி..