எந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி

எந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி
Agriwiki.in- Learn Share Collaborate

எந்த நிலத்தில்… என்ன பயிர் சாகுபடி?

ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து விதைப்பது மட்டும் போதாது.

நிலத்திற்கு ஏற்ற பயிர்களை விதைத்தால் லாபம் அடையலாம்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த ஐக்கிய விவசாயிகள் சங்கத்தலைவர் வையாபுரி என்றால், எல்லோருக்கும் தெரியாது. ‘பயிர்வாரி முறை வையாபுரி’ என்றால், எல்லோருக்கும் தெரியும்.

கடந்த 50 ஆண்டுகளாக பயிர் வாரி முறையைப் பற்றியே பேசி வருகிறார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போது கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் சரி இந்த பயிர்வாரி முறையை செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக பல போராட்டாங்களையும் முன்னெடுத்துள்ளார். இப்படி இவர் மூச்சுக்கு முன்னூறு முறை பயிர்வாரி முறை பற்றியே வலியுறுத்தி வந்துள்ளார். அப்படி என்னதான் இந்த பயிர்வாரி முறையில் இருக்கிறது என்று அவரிடம் கேட்டோம். ஆர்வமாக அவர் பேசியதிலிருந்து,

என்னதான் இந்த பயிர்வாரி முறையில் இருக்கிறது

“இன்றைக்கு விவசாயம் பாதாளத்தை நோக்கிப் போவதற்கு காரணம் நகர மயமாக்கல், பெருகி வரும் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவம் தப்பிய மழை என பல காரணங்களைச் சொன்னாலும், பயிர்வாரி சாகுபடி முறையை கைவிட்டதுதான் முக்கிய காரணம்.

ஐவகை நிலங்கள்

நம் சங்க காலத் தமிழர்கள் நமது நிலப்பரப்பை அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப ஐவகை நிலங்களாகப் பிரித்து சாகுபடி செய்து வந்தனர். மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும்,

வறட்சியான பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். மலையும் மலை சார்ந்த நிலம் குறிஞ்சி எனவும், காடும் காடு சார்ந்த நிலம் முல்லை எனவும், வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த நிலம் நெய்தல் எனவும், மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலம் பாலை எனவும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவ காலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, முல்லை நிலம் பசுமை இல்லாமல் வறண்டு இருக்குமானால் அப்பகுதியை, ‘பாலை‘ என்றும் வகைப்படுத்தினர்.

நீரை நிலத்தில் தேடாதே வானத்தில் தேடு

ஆனால், அதையெல்லாம் மறந்து இன்றைக்கு நாம் மனம் போனப்போக்கில் விவசாயம் செய்து வருகின்றோம். இதுவே நம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்குக் காரணம். நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே பயன்பாட்டுக்கு உரிய நீராக உள்ளது. அதிலும் மூன்றில் இரண்டு பங்கு பனிப் பாறைகளில் மற்றும் துருவப் பகுதிகளில் உறைந்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொகைப்பெருக்கம், இயற்கைக்கு முரணான விவசாய முறைகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஆறுகளில் மாசு கலத்தல், நச்சுப்புகைகளின் வெளிப்பாடு என பூமிப்பந்தையே நெருப்புக்கோளம் சூழ்ந்தது போன்ற நிலை.

இப்படிப்பட்ட சூழலில் நம் பாரம்பரிய பாசன முறைகளை விடுத்து, கிணறு-போர்வெல்களை அமைத்து நிலத்தடி நீரையும் மொட்டையடித்துக்கொண்டு வருகிறோம். நம்மாழ்வார், ‘நீரை நிலத்தில் தேடாதே வானத்தில் தேடு’ என்று சொல்வார்.

பயிர் வாரி முறை சாகுபடி

நமது அரசாங்கங்கள் நிலத்தடி நீரின் இழப்பை குறித்து கவனம் செலுத்தும் அளவு, பயிர் வாரி முறை சாகுபடி பற்றி கவனமே செலுத்துவதில்லை. விவசாயி ஏற்கனவே அறியாமையில் கடனாளியாகிக் கிடந்து தவிக்கிறான்.

அரசுகள் அவர்களை விட கைபிசைந்த நிலையில் அறியாமையில் உழல்கின்றன. இயற்கை விவசாய முன்னோடிகள் ஆர்வலர்களை மதிப்பதே இல்லை.

உதாரணமாக, காவிரி நீர் பாயும் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் சிறுதானியமான கேழ்வரகு தான் அதிக பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. நெல்லை விட, கேழ்வரகில் நல்ல லாபம் எடுக்க முடியும்.

இதை தவிர்த்துவிட்டு, தண்ணீர் உள்ளது என்று சிலர் நெல், வாழைக்கு மாறி நஷ்டப்படுகிறார்கள். தமிழக டெல்டா மாவட்டங்கள் நன்செய் பயிர் சாகுபடிக்கு ஏற்றவை.

அதேவேளையில், மத்திய தமிழகப் பகுதிகளான மணப்பாறை, துறையூர், அரியலூர், பெரம்பலூர், சின்னசேலம், ஆத்தூர், சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகள் முல்லை நிலத்துக்குரிய குணம் பொருந்தியவை.

இங்குள்ள கிராமங்களில், சிறுதானியங்கள், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை சாகுபடி செய்து லாபம் பார்க்கலாம். ஆனால், அதை விடுத்து, போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சியெடுத்து ஊருக்கு ரெண்டு பேர் மட்டும் நன்செய் சாகுபடி செய்து வாழ, நீராதாரத்தை இழந்த மற்ற குடும்பங்கள் படாத துயரங்களை அனுபவிக்கிறார்கள்.

அவர்களில் பலர் சமையல் வேலை, கட்டட வேலை எனப் போய் அவஸ்தைப்படுகிறார்கள்.

பயிர் வாரிமுறையை அரசாங்கம் முறைப்படுத்தினால், உணவு, தண்ணீரில் நாடு தன்னிறைவை அடையும். நிலமும் வளம்பெறும். மின்சாரத் தேவையும் குறையும்.

இத்தனை ஆயிரம் தென்னை மரங்கள் தோப்புத் தோப்பாகக் காய்ந்து போகும் நிலை வந்திருக்காது. இந்த ஆண்டு கூட தமிழகம் முழுவதும் நல்ல மழை என்றாலும் மத்திய தமிழகம் காய்ந்துதான் கிடக்கிறது.

பயிர்வாரி முறையைப் பற்றிச் சொல்லுங்களேன்…

நஞ்சை நிலத்தில் நஞ்சை பயிர் செய்யணும், புஞ்சை நிலத்துல புஞ்சைப் பயிர் பண்ணணும்னு சொல்றதுதான் பயிர்வாரி முறை. தமிழ் மக்களால் தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்பட்ட இயற்கை வழிச் சாகுபடி முறைதான் இது. ஆறு, ஏரி, கண்மாய் மூலம் நல்ல நீர்ப்பாசன வசதியுள்ள நஞ்சை நிலத்தில், நெல், வாழை, கரும்பு பயிரிடலாம். இப்படி எந்தப் பாசன வசதியும் இல்லாத, வானம் பார்த்த பூமியான புஞ்சையில் அதே பயிர்களைப் போட்டால் தண்ணீர்த் தட்டுப்பாடு வரத்தானே செய்யும்.

இந்தப் பிரச்சினையின் தொடக்கப்புள்ளி எதுவென்று நினைக்கிறீர்கள்?

நாமெல்லாம் வறட்சி பூமி என்று சொல்கிற ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுக்கடுக்காகக் கண்மாய்களையும், நீர்ஏந்தல்களையும் வெட்டிவைத்தார்கள் சேதுபதி மன்னர்கள்.

மழைநீரை நீர்நிலைகளில் சேமித்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் திறமையாகப் பயன்படுத்தினார்கள். கூடவே, ‘குடிநீருக்காக மட்டுமே கிணறு வெட்டலாம்; எக்காரணம் கொண்டும் கிணறு தோண்டி விவசாயம் செய்யக் கூடாது’என்றும் கட்டுப்பாடு விதித்தார்கள்.

அவ்வாறு விவசாயம் செய்தால், வறட்சிக் காலத்தில் குடிநீர்ப் பிரச்சினை வந்துவிடும் என்பதாலேயே இந்தக் கட்டுப்பாடு. அந்த உன்னதமான தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல், ஆளாளுக்குக் கிணறு வெட்டியும், ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் எடுத்ததுதான் பிரச்சினையின் தொடக்கம்.

மின்சாரம் வந்தபிறகு, நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.

 

மின்சாரம் விவசாயத்துக்கு உதவிதானே செய்கிறது?

1936-லேயே சேலம் – ஈரோடு எலெக்ட்ரிசிட்டி கம்பெனி வந்தது. கூடவே, மின்சார பம்பும் வந்தது. ஆனால், பம்பு செட் மோட்டார் பயன்பாட்டால், மாட்டை வைத்து இறைக்கிற விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்று 40 அடிக்குக் கீழே குழாய் இறக்கி தண்ணீர் எடுக்கக் கூடாது என்று வெள்ளைக்காரர்கள் சட்டம் போட்டார்கள்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்கூட, ஒரு விவசாயக் கிணற்றுக்கு மின் இணைப்பு பெற வேண்டும் என்றால், அந்தக் கிணற்றில் இருந்து 1,200 கஜம் தூரத்துக்குள் வேறு விவசாயக் கிணறு இருக்கக் கூடாது என்று விதி வைத்திருந்தார்கள்.

1971-ல் திமுக ஆட்சியில் யார் இணைப்பு கேட்டாலும் கொடுக்கலாம் என்று விதியைத் தளர்த்தினார்கள். இலவச மின்சாரம் கொடுத்தார்கள். ஆழ்துளைக் கிணறுகளும் பெருகின. இப்போது நிலை என்ன?

இந்தக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டால், விவசாயத் தொழில் மேலும் நசிந்துவிடாதா?

இயற்கை விவசாயம் பற்றிப் பேசுகிறவர்கள், நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உரிஞ்சுவதற்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். நான் வேளாண் உயர்மட்டக் குழு உறுப்பினராக இருந்தபோது, தமிழ்நாட்டில் குடிநீர்த் தேவைக்குத் தவிர, எதற்காகவும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் எம்ஜிஆரிடமே வலியுறுத்தினேன். அப்போது அது ஏற்கப்படவில்லை. இனியும் செய்யவில்லை என்றால், குடிக்கக் கூடத் தண்ணீர் இருக்காது.

நடந்தது போகட்டும்.. தீர்வு இருக்கிறதா?

கிராமம்தோறும் நஞ்சை, புஞ்சை கணக்கு அரசிடம் இருப்பதால், பயிர்வாரி முறையைக் கண்டிப்புடன் செயல்படுத்தலாம். நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுக்கச் சட்டம் வேண்டும். அனைத்து நதிகளையும் நாட்டுடமை ஆக்குவது காலத்தின் தேவை.

பாசன முன்னுரிமை

உள்ளூர் நதிகளில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகள் வரையில் கடைமடைப் பகுதிக்கு வழங்க வேண்டிய பாசன முன்னுரிமையை நிலைநாட்ட வேண்டும். வனவிலங்குகளின் நலன் கருதி, மலை மற்றும் வனப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளுக்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.

சி.வையாபுரி ஐயா

அடுத்த பதிவுகளில், மாவட்ட வாரியாக பயிர்வாரி சாகுபடி , பருவங்கள், மண் போன்ற விடயங்களை பதிகிறோம். கலந்தாலோசிப்போம்.

தற்சார்பு வேளாண்மை

– – எஸ்.கதிரேசன், முகநூல் பகிர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.