*கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை – ஒற்றை நாற்று நடவு முறை*
விதைநெல்லை கையாள்வதில் தனது கண்டுபிடிப்பிற்காக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களிடமிருந்து விருதுபெற்றுள்ள இயற்கை விவசாயி, அந்த புதுமையான தொழில்நுட்பத்தையும் வழிமுறைகளையும் இங்கே விரிவாக விளக்குகிறார்!
தஞ்சாவூரில் நடைபெற்ற ஈஷா விவசாய இயக்க சேனாதிபதிகள் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு திரு.ஆலங்குடி பெருமாள் ஐயா அவர்கள் பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவர் நெல் நாற்று நடவில், ஒற்றை நாற்று நடவு முறையை ஒரு சிறந்த தொழில் நுட்பமாக உருவாக்கியவர்.
இவரது தொழில் நுட்பத்தை இயற்கை விவசாயிகள் மட்டுமல்லாது இரசாயன விவசாயிகளும் பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் கூட ஒற்றை நாற்று நடவு நுட்பம் பரவியுள்ளது. தற்போது ஆலங்குடி பெருமாள் அவர்கள் கால் கிலோ விதை நெல்லைப் பயன்படுத்தி நிறைவான மகசூல் கிடைக்கும்படி ஒற்றை நாற்று நடவு முறையை மேலும் மேம்படுத்தியுள்ளார். நம்முடன் பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்ட தொழில் நுட்பங்களையும் அவரது அனுபவங்களையும் அவரது மொழியிலேயே விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
*ஒற்றை நாற்று நடவு தொடக்க நிலை ஆய்வு*
“இயற்கை விவசாயிகளை சந்திக்கறதுல மகிழ்ச்சி, இயற்கை விவசாயிங்க பெரும்பாலும் பாரம்பரிய ரகத்தைதான் பயிர்செய்யறாங்க, இவங்களுக்கு ஒற்றை நாற்று நடவு முறை ஒரு வரப்பிரசாதமாகும். ஆரம்பத்துல நானும் மற்ற விவசாயிங்க மாதிரி ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதை நெல் பயன்படுத்தினேன், பெரும்பாலும் மழ வந்தா, முளைச்ச நாத்தெல்லாம் அழுகிப்போகும்.
ஒருமுறை பயிர்களுக்கு இடையில் இடைவெளி அதிகமா இருந்த நாத்தெல்லாம் திடமா வளர்ந்திருந்ததை தற்செயலா பாத்தேன். அதே மாதிரி நிறைய இடைவெளி விட்டு பயிர் செய்து பாக்கலாம்னு தோனுச்சு, பரிட்சார்த்தமா செய்துபார்க்க சிறிது நிலத்தை ஒதுக்கி அதுல வெவ்வேறு இடைவெளி விட்டு பயிர் செஞ்சு பார்த்தேன்.
அதுல அதிக இடைவெளி விட்ட நாத்துங்க எல்லாம் நிறைய தூர்கள் வெடிச்சு, திடமா வளர்ந்திருந்ததை கவனிக்க முடிஞ்சது. இப்படி சின்னச் சின்ன ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு அரை கிலோ விதைநெல் போதும்னு கண்டுபிடிச்சேன். 2004ம் வருஷத்திலேயே ஒரு ஏக்கருக்கு அரை கிலோ நெல் போதும்னு முடிவெடுத்தேன். பல வருஷமா படிப்படியா செஞ்ச ஆராய்ச்சிக்கு பிறகுதான் இது சரியா வந்துச்சு.
ADT 47 ரகம் ஒற்றை நெல் சாகுபடிக்கு ஏற்றதா இருந்ததால அதை வச்சே படிப்படியா ஆராய்ச்சி செஞ்சு கடைசியில் கால் கிலோ விதை நெல்லே போதும் என்ற முடிவுக்கு வந்தேன். தற்போது கால் கிலோ விதை நெல்லை வைத்தே ஒரு ஏக்கர் பயிர் செய்யறேன். சொல்லப் போனா 220 கிராம் விதை நெல்லே போதுமானதா இருக்கு.
“அட சாமி… பாத்தீங்ளாண்ணா இந்த ஐயா கண்டுபிடிப்ப?! அட வெள்ளக்கார ஆளு தலமேல ஆப்பிள் பழம் விழுந்துச்சாமுங்க, அவரு உடனே புவியீர்ப்பு விசைய கண்டுபிடிச்சுப் போட்டாருனு நாம பெருமையா பேசுறோமுங்க. ஆனா…மொத மொதல விவசாயம் செஞ்சு நாகரீகத்துல முன்னேறுனது நம்ம ஊரு ஆளுங்க தானுங்களே?! நம்ம பெருமாள் ஐயாவும் எதேச்சயா முளைச்ச நெற்பயிர பாத்துப்போட்டு, சூப்பரா ஒன்னு கண்டுபிடிச்சுப்போட்டாரு பாத்தீங்ளா? அட வாங்க முழுசா கேட்டுப்போட்டு வருவோம்!”
*ஒற்றை நாற்று நடவு – தொழில் நுட்பங்கள்.*
ஒற்றை நாற்று நடவு முறைக்கு கால் கிலோ விதை போதும்ன்னு நெனைச்சுக்கிட்டு எல்லா ரகத்துக்கும் இப்படி செய்ய முடியாது. நெல் ரகம், பயிரோட வயசு, விதையோட தரம், மண்ணோட தன்மை, பட்டம், நாத்துக்கு நாத்து இடைவெளி, எத்தனைத் தூர் வெடிக்கும், இதையெல்லாம் கவனிச்சு தான் ஒற்றை நாற்று நடவு செய்யலாமா வேண்டாமான்னு முடிவு செய்யனும்.
*நேரடி விதைத்தேர்வு*
ஒற்றை நாற்று நடவுக்கு பாரம்பரிய ரகங்கள் ஏத்தது. மாப்பிள்ளை சம்பா மற்றும் கறுப்பு கவுனி போன்ற பயிருல கலப்பு இல்லாம இருக்கனும்னு நெனச்சிங்கன்னா உங்க வயல்ல இருந்தே ஒரே ஒரு தரமான கதிரை தேர்ந்தெடுத்துகுங்க. அந்த கதுருல 300 நெல் மணிகள் வரைக்கும் இருக்கும். விதை நேர்த்தி செஞ்ச பின்னாடி 200 விதை நெல்லாவது கிடைக்கும். இந்த சுத்தமான விதை நெல்ல நாத்துவிட்டு அந்த நாத்துக்கள 50க்கு 50 செமீ என்ற இடைவெளியில் நடனும்.
இந்த பயிருல இருந்து பத்து கிலோ வரைக்கும் சுத்தமான விதைநெல் கிடைக்கும். இந்த பத்து கிலோ விதை நெல்லை பயன்படுத்தி இருபது ஏக்கர் பயிர் செய்ய இயலும். நாற்றங்கால் சுத்தமாக இருந்தால் விதைநெல்லுல கலப்பு இருக்காது. இதுக்கு நாற்றங்கால்ல நீர் பாய்ச்சி களையை எல்லாம் முளைக்க விட்டுட்டு ஒரு வாரம் கழித்து உழுதுட்டோம்னா நாற்றங்கால் கலப்பு இல்லாம சுத்தமா இருக்கும்.
*விதை நெல் சேகரிப்பு*
நல்ல தரமான 300 கதிர்களை தேர்ந்தெடுத்து அதுக்கு அடையாளம் வச்சுக்குங்க. அது முத்துனதுக்குப் பிறகு பறிச்சு கைகளாலேயே கசக்கி நெல்லை எடுங்க. கைகளாலேயே கசக்கி எடுத்தா நெல்லில் எந்த சேதமும் ஏற்படாது. இந்த விதை நெல்லில் இருந்து அரை கிலோ விதையை எடுத்துக்கோங்க.
*சன்ன ரகம் மற்றும் மோட்டா ரகம் நெல் விதைகள்*
எவ்வளவு விதை நெல் தேவை என்பதில் சன்ன ரக நெல்லுக்கும், மோட்டா ரக நெல்லுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். உதாரணமா ADT 43, ADT 47, சீரக சம்பா, பொன்னி போன்ற ரகங்கள் சன்ன ரகமாகும், இந்த ரகங்கள்ல 250 கிராம் எடைக்கு கிட்டத்தட்ட 20,000 நெல்மணிகள் இருக்கும். அதுனால சன்னரகத்துக்கு கால்கிலோ விதை நெல்லே போதுமானது. ஆனா CR 1009, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி போன்ற மோட்டா ரகங்கள்ல 250 கிராம் எடைக்கு 12,000 நெல்மணிகள்தான் இருக்கும். இதனால மோட்டா ரகத்துக்கு கால் கிலோவுக்கு மேல விதை நெல் தேவைப்படும்.
புதுசா செய்யிரவங்க அரை கிலோ விதை நெல்ல பயன்படுத்துரதுதான் நல்லது, அரை கிலோ விதை நெல்ல நாத்து விட்டா அதுல 40,000 நாத்துக்கள் கிடைக்கும், அதுல வாளிப்பான திடமான 16,000 நாத்த பிடுங்கி ஒரு ஏக்கருக்கு நடலாம்.
*விதைகளைக் காய வைத்தல்*
அறுவடை செஞ்ச விதை நெல்லுல 25 சதவீதம் வரைக்கும் ஈரப்பதம் இருக்கும், ஈரப்பதத்தை 12 சதவீதத்துக்கு காயவைக்கணும். விதை நெல்ல இளம் வெய்யில்லதான் காயப்போடனும். காலையில 9மணியில் இருந்து 11மணி வரைக்கும் காயவைக்கலாம். 11 மணிக்குமேல் காய வைக்க வேண்டாம். உச்சி வெய்யில்ல நெல்ல காயவச்சா விதைகளில் முளைப்புத் திறன் குறைஞ்சுடும்.
இப்படி இரண்டு அல்லது மூன்று நாள் காயவச்சா நெல்லோட ஈரப்பதம் 12 சதவீதத்துக்கு வந்துடும். 12 சதவீதத்துக்கு மேல ஈரப்பதம் இருந்ததுன்னா பூச்சிங்க வரும். ஒரு துணிப்பையை சாணியில் நனைத்து நல்லா காஞ்ச பிறகு அந்த பையில விதை நெல்லை போட்டு கட்டி வைச்சுக்கணும்.
*பொக்குவிதைகளை நீக்க உப்புக்கரைசல்*
விதைகளை தரமானதா தேர்ந்தெடுத்திருந்தாலும் விதை நேர்த்தி செய்யணும். இரண்டு லிட்டர் தண்ணில 100 கிராம் கல் உப்பு போட்டு நல்லா கரைச்சுக்கணும். அதிகமா உப்பு சேர்க்க கூடாது, அதிகமாக உப்பு சேத்தா நல்ல விதைங்க கூட மிதக்கும். இந்த உப்பு தண்ணில அரை கிலோ விதை நெல்ல போடுங்க, கருக்கு விதையெல்லாம் மிதக்கும்; நல்ல விதைங்க எல்லாம் அடியில் இருக்கும். நல்ல விதைங்கள தனியா எடுத்து மூன்று முறை நல்ல தண்ணீல கழுவணும்; நல்ல தண்ணில கழுவலன்னா நெல்லுல உப்பு படிஞ்சிருக்கிறதால சரியா முளைக்காது, இது முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம்.
*விதை ஊறவைத்தல்*
கால் கிலோ விதையை காலைல ஆறு மணிக்கு ஊறவச்சிருங்க; சாயந்திரம் ஆறு மணிக்கு தண்ணிய வடிச்சிட்டு ஈரத்துணியில கட்டி இருட்டுல வைச்சிடுங்க; விடிஞ்சதும் மறுபடியும் தண்ணி தெளிச்சு வைங்க; ஊறவச்சு இரண்டாவது நாள் சாயந்திரம் விதைகளை விதைச்சுரலாம்; பட்டத்தையும் கவனத்துல வச்சுங்குங்க; தாளடி பட்டத்துல மழை அதிகமா இருக்கும், அந்த நேரத்துல இரண்டு நாளுக்கு மேல ஊறவச்சா நாத்தங்கால்ல விதை அழுகி போக வாய்ப்பிருக்கு.
*விதை நேர்த்தி*
ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வரைக்கும் சூடோமோனாஸ் போடலாம், இந்த சூடோமோனாஸை அரை லிட்டர் தண்ணீல கரைச்சு விதையோட கலக்கணும். சூடோமோனாஸ் தரமானதாக இருக்கனும். பஞ்சகவ்யா அல்லது பீஜாமிர்தம் பயன் படுத்தி விதை நேர்த்தி செய்யறவங்க சரியான அளவு கோமியத்தைக் கலக்கனும், கோமியத்தோட அளவு அதிகமாயிடுச்சுன்னா விதை நெல் பாதிக்கப்படும், நான் சூடோமோனாஸ் மட்டும் தான் பயன்படுத்துறேன்.
“வித ஒன்னு போட்டா பொறவு சுர ஒன்னு முளைக்குமான்னு சொல்லி என்ற அப்பாரு அடிக்கடி பேசும்போது சொல்லுவாப்டிங்க! அதுமாறி விதைய சரியா தேர்ந்தெடுக்குறது ரொம்ப அவசியமுங்கண்ணா!”
*நாற்றங்கால்*
ஒரு கிலோ விதைக்கு 8 சென்ட் நாற்றங்கால் தேவை, 4 ஏக்கர் வரை பயிர் செய்யலாம். கால் கிலோ விதைதான் போடப்போறீங்கன்னா 3 சென்ட் நாற்றங்காலில் பரவலா தூவனும். நாற்றங்கால் எந்த அளவு தயார் செய்கிறோமோ அந்த அளவு தரமான நாற்றுக்கள் கிடைக்கும். விதைகளை நல்லா பரவலா போடணும். நெருக்கமா போடக்கூடாது! இடைவெளி நல்லா இருக்கும் போது நாத்து திடமாவும் வாளிப்பாவும் இருக்கும். 15 நாளுக்குள்ள 4, 5 தூர் வெடிச்சிரும். விதையை பரவலா போடும்போது நாத்து பறிக்கவும் எளிதா இருக்கும்.
*அடியுரம்*
வேம்பு, புங்கன் தழைகளை நாற்றங்காலில் போட்டு நன்கு மக்க வைத்து உழவு செய்யணும். களைகள் வராம இருக்க தண்ணீர் பாய்ச்சி களைங்கள முளைக்கவிட்டுட்டு அப்புறம் உழவேண்டும். நாற்றங்காலுக்கு கனஜீவாமிர்தம் 50 கிலோ தூவி இரண்டாவது உழவு செய்யலாம்.
*மேலுரம்*
மேலுரம் அவசியம் போடனும், இதுக்கு மக்கிய சாணம் 50 கிலோ, புதிய சாணம் 10 கிலோ, கோமியம் 5 லிட்டர் எடுத்துக்கோங்க. சாணியில கோமியத்த கலந்து கரைசல் மாதிரி செஞ்சுக்கோங்க. அந்த கரைசலை 50 கிலோ மக்கிய சாணத்துடன் சேர்த்து உப்புமா மாதிரி பொலபொலப்பா செஞ்சுக்கோங்க. இந்த மேலுரத்த நாத்தங்கால்ல விதைக்கிற நாளே செஞ்சுக்கனும். அப்ப செஞ்சாதான் 7வது நாள் அது தயாராகும். விதைச்ச 7வது நாளில் மேலுரமா இத போடணும். கட்டி கட்டியா இல்லாம தூவிய உடனே கரைஞ்சுபோகிற மாதிரி தூளா இருக்கணும். 15 நாள்ல நாத்து தோராயமா அரை அடி வளர்ந்துடும். இப்படி மேலுரம் தயாரிக்க முடியாதவங்க ஜீவாமிர்தம் பாய்ச்சலாம்.
*நாற்று வயது*
14-17 நாள் வயசுள்ள நாத்துங்க பிடுங்கி நட ஏத்தது, அதுக்கு மேல போகக்கூடாது, நாள் அதிகமாக அதிகமாக தூர் வெடிக்கிறது குறைஞ்சுரும். 30, 40 நாளுன்னு தள்ளி போடக்கூடாது, ஒத்த நாத்து நடவுக்கு இது சரிவராது. பெண்கள்தான நாத்த நல்லா பறிப்பாங்க, வேர் அறுந்துடாம நாத்தப் பறிக்கனும். நாத்துபறிக்கிற வேலையை பெண்களிடமே விட்டுடலாம். ஆண்கள் அந்த அளவு மென்மையா பறிக்க மாட்டாங்க. நல்லா தூர் வெடிச்சு அடிபருத்து வாளிப்பா இருக்கிற நாத்த மட்டும் பறிச்சுக்கணும்.
*நாற்றுகளின் எண்ணிக்கை*
சதுர நடவுல 50க்கு 50 செ.மீ நடணும். நாத்துக்கு நாத்து இடைவெளி 50 செ.மீ, வரிசைக்கு வரிசை 50 செ.மீ இடைவெளி இருக்கணும். இப்படி நட்டா ஏக்கருக்கு 16,000 நாத்து இருக்கும். நான் சொல்லிட்டேன்னு இப்படியே எல்லா ரகத்தயும் நட்டுடாதீங்க. நீங்க எந்த நெல் ரகத்தை பயிர் செய்றீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி இந்த அளவு மாறும். உதாரணமாக பராம்பரிய நெல்லுங்க எல்லாம் 150 நாள் பயிர்களா இருக்கும். இதுக்கு 50க்கு 50 இடைவெளி கட்டாயம் விடணும். 135 நாள் பயிர்களுக்கு 40க்கு 40 இடைவெளி விடணும். ADT40 ரகத்துக்கு 30க்கு 30 இடைவெளி விட்டா போதும்.
*நடவு முறை*
நாத்து நடும்போது நாத்து சாயாம நேரா இருக்கணும், வேர் மடங்காம நேரா வைச்சு நடணும். வேர் மடங்குச்சுன்னா வேரோட வளர்ச்சி சரியா இருக்காது. புதுசா வேர் வர்றதுக்கும் தாமதாகும். நாத்துல வேருக்கும் தண்டுக்கும் நடுவுல ஒரு வெண்மையான பகுதி தெரியும், அந்த அளவுக்கு மேல ஆழமா நடக்கூடாது. நாத்து நடும்போது நாத்து உயரமா இருந்துச்சுன்னா காத்துக்கு சாயாம இருக்க நாத்தோட கணுக்கு மேல இலையை மட்டும் கிள்ளி விட்டு நடணும்.
நாத்துகளை முதல் நாளே பிடுங்கி வைக்க வேணாம். நடும்போது பிடுங்கினாப் போதும். உடனுக்குடன் பிடுங்கி நடற நாத்துங்க பச்ச காயாம அப்படியே இருக்கும், உடனே உயிர் பிடிச்சு நிமிர்ந்துடும். முதல் நாளே பிடுங்கி நட்ட நாத்துங்க 6, 7 நாள் கழிச்சுத்தான் உயிர் பிடிச்சு வளரும்.
*சதுர நடவு*
வயல் கோணலாவும், சாய்வாவும் இருந்தா ஓரத்தை கழிச்சி சதுரமா கயிறு கட்டிக்கனும், ஒரு கயிறுல 50 செ.மீ இடைவெளி விட்டு தொடர்ச்சியா அடையாளம் வச்சிக்கணும்; கயிற அடையாளத்துக்கு நேரா வச்சி இரண்டு பேர் பிடிச்சுக்கணும்; மத்தவங்க நாத்து நடலாம். நாற்றை நட நட கயிறை மாத்தி போட்டுக்கணும்; இப்படி நட்டா வரிசை நேரா இருக்கும். நாத்து நடும்போது நட்டுட்டு பின்பக்கமா வராம, நாத்த நட்டுட்டு முன்பக்கமா நாத்த தாண்டி போகணும். இதனால நாத்து நடும்போது கால் மிதிச்ச மேடுபள்ளம் இல்லாம இருக்கும். நாத்தும் சாயாது.
“அட நட்டுவான் பிள்ளைக்கு கொட்டிக்காட்டணுமான்னு என்ற பெரிய வூட்டு ஆத்தா ஒரு சொலவட சொல்லுவாப்டிங்க. பாரம்பரியமா விவசாயம் செய்யுற ஆலங்குடி ஐயா நாத்து நடுறத பத்தி வெகரமாத்தான் சொல்றாப்டிங்க!”
*நீர் மேலாண்மை*
தண்ணி வசதி உள்ளவங்க மட்டும் நெல் சாகுபடி செய்யுங்க. பொதுவா பயிருக்கு தண்ணிய காய்ச்சலும் பாய்ச்சலுமா விடணும்னு சொல்லுவாங்க. ஆனா எப்போ பாய்ச்சல்? எப்போ காய்ச்சல்? என்று சரியா தெரிஞ்சு வச்சிருக்கணும். தூர்கட்டும் போதும், பால் பிடிக்கும் போதும் கட்டாயம் தண்ணி நிக்கணும். இந்த நேரத்தில் காயப்போட்டால் மகசூல் வராது. முக்கியமா நிலம் மேடுபள்ளம் இல்லாம சமமா இருக்கணும். நல்ல திறமையான ஆளுங்களை வச்சு நிலத்தை சமப்படுத்தி வச்சுக்கணும். மேடு பள்ளமான வயல்ல தண்ணீ பாய 3 மணிநேரமானா, சமமான நிலத்தில் 1 மணி நேரத்திலேயே பாய்ஞ்சுடும்.
*களைக் கட்டுபாடு*
நாற்று நட்டு முதல் 20 நாள் வயல்ல தரை தெரியாத அளவுக்கு தண்ணிய நல்லா நிறுத்துனா களைகள் முளைக்காது. நிலத்தை சமமா சீர்படுத்தி, தண்ணீரை குறைவாக நிறுத்தினாலே களைகள் கட்டுப்படும். அசோலாவை படர விட்டாலும் களைகள் குறையும். இடைவெளி அதிகமா இருக்கிறதால கோனா களை கருவி பயன்படுத்தி களையெடுக்க முடியும். கோனா வீடர் ஓட்டுறதால வேர்கள் நல்லா கிளம்பும்.
*மகசூல்*
இந்த முறையில் பயிர் செய்யும்போது ஒரு குத்துல 120 கதிர்வரைக்கும் வரும். ஒரு கதிர்ல 400 நெல்மணிங்க கிடைக்கும், தோராயமா ஒரு குத்துக்கு கால் கிலோ நெல் இருக்கும். ஒரு ஏக்கருக்கு 4000 கிலோ அறுவடை கிடைக்கும், மெஷின் அறுவடைன்னா 3,800 கிலோ கிடைக்கும். வேளாண் அதிகாரிங்க என்னோட வயலுக்கு வந்து இதையெல்லாம் பாத்திருக்காங்க. 2004ல நம்மாழ்வார் ஐயா என் தோட்டத்துக்கு வந்து, ஒற்றை நாற்று நடவு முறையில் நான் பயிர் செய்யறத பார்த்து என்ன பாராட்டி விருது எல்லாம் கொடுத்துருக்காரு.
கடைசியா நான் சொல்றது என்னன்னா, ஒத்தை நாற்று நடவு முறை உங்க வயலுக்கும், மண்ணுக்கும் பொருத்தமா இருந்தா அத செய்யறது லாபமானது. விதை நெல்லு செலவு குறையும்; நடவு செலவு குறையும்; இடைவெளி அதிகமா இருக்கிறதால கோனா வீடர் ஓட்ட முடியும்; எலி வெட்டு குறையும்; பயிறுக்கு காற்றோட்டம்; சூரிய ஒளி நல்லா கிடைக்கறதால பூச்சி தாக்குதல் குறையும் மகசூல் நல்லபடி கிடைக்கும்; இப்படி பல நன்மைகள் இருக்கு”
“நகத்த வெட்டுறதுக்கு கோடாரிய கொண்டுவந்த கதையா பலபேர் இதைய கேட்டுப்போட்டு உடனே ஒற்றை நாற்று முறைய செய்ய ஆரம்பிச்சுருவாங்க இல்லீங்கோ?! அதானுங்க ஐயா முன்கூட்டியே சொல்றாரு, நம்ம வயலுக்கு பொருத்தமா இருக்குதான்னு பாத்துக்கோணுமுங்க!”
ஒற்றை நாற்று நடவு குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட திரு. ஆலங்குடி பெருமாள் ஐயா அவர்களுக்கு ஈஷா இயற்கை விவசாயிகள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு
ஆலங்குடி திரு. பெருமாள் : 9486835547
தொகுப்பு
ஈஷா விவசாய இயக்கம் : 8300093777