சீத்தா பழம்

சீத்தா பழம்
Agriwiki.in- Learn Share Collaborate

தமிழகத்தில் விவசாய நிலங்களை ஒட்டியிருக்கும் சிறுகாடுகள் மற்றும் கரடுகளில் சீத்தா மரங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா பழ விளைச்சல் அதிகம்.

ஆடியில் மொட்டுவிடும் சீத்தா, பிஞ்சாகி காயாகி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இனிக்க இனிக்க விற்பனைக்கு வந்து விடுகின்றன.

மத்த பயிர்களை மாதிரி சீத்தாவை யாரும் நட்டுவச்சு உருவாக்குறதில்லை. வவ்வால் மாதிரியான பறவைகள், அணில், குரங்கு எல்லாம் தின்னுட்டு போடுற விதை அதுவாவே முளைச்சு வந்து பலன் கொடுக்குது.

உரமோ, பூச்சி மருந்தோ இல்லாம விளையக்கூடிய பழம் இது. அதனால, இதை சாப்பிடுற யாருக்கும் எந்தக் கெடுதியும் வர்றதில்லை.

கூழ் மாதிரி மிருதுவான சதை இருக்குறதால பல் இல்லாத வயசானவங்க கூட சீத்தா பழத்தை விரும்பிச் சாப்பிடுறாங்க. சென்னை, கேரளாவுலயெல்லாம் விதையை நீக்கிட்டு, பழக்கூழை மட்டும் பதப்படுத்தி ஐஸ்கிரீம்ல பயன்படுத்துறாங்களாம்.

சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.

இந்தப் பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

காய்ச்சலை குணப்படுத்தும். செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் நீங்கும். இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.இதில் கால்ஷியம் சத்து இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள் வலுப்பெறும் .

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து இதோடு சிறிதளவு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு மறைந்துவிடும்.

சீத்தா மரத்தை வேலிப்பயிராக வைக்கலாம். குறிப்பாக கிளுவை மாதிரியான வேலிகள் அமைக்கும்போது, கிளுவைக்கு இடையில் அங்கங்கே சீத்தா விதைகளைப் போட்டு வைத்தால் தானாக முளைத்து விடும்.

இதன் இலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடாது. இந்த இலைகள் இயற்கை விவசாயத்தில் பூச்சிக் “கொல்லி”யாகப் பயன்படுத்துவார்கள்.

சீத்தா பழ இலை மற்றும் விதையிலிருந்து தயாரிக்கும் கரைசல் ஏறத்தாழ பூச்சிகளைக் கொன்று விடும். அதனால் இதைப் பூச்சிவிரட்டி என்பதற்கு பதிலாக பூச்சிக் கொல்லி என்றே சொல்லலாம்.

இதை தெளிப்பதால் மனிதருக்கோ, பயிருக்கோ எந்த ஆபத்தும் இல்லை. இந்தக் கரைசலைத் தயாரிக்க சீத்தா இலையை இடித்து அல்லது சிதைத்து, இலையுடன் சமஅளவு மாட்டுச் சிறுநீர் கலந்து, உலோகம் அல்லாத பாத்திரத்தில் போட்டு, இலைகள் மூழ்கும் அளவுக்கு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இலைகளை ஏதாவது மெல்லியத் துணியில் கட்டி, அதில் சிறிய கல்லை வைத்து பாத்திரத்தில் போடுவது நல்லது. இல்லாவிட்டால் இலை தண்ணீரில் மிதந்தபடியே இருக்கும்.

இலை நன்றாக ஊறிய பின், அந்தக் கரைசலை, 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து, பயிர்களுக்குத் தெளிக்கலாம். இதனால் பூச்சிகள் சாகும்.

அதேபோல இதன் விதை கடுமையான விஷத்தன்மை கொண்டது. இதை இடித்து, சம அளவு மாட்டுச் சிறுநீருடன் தண்ணீரில் ஊறவைத்து, 10 லிட்டருக்கு 100 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்