சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார்

நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை அரிசியிலும், வெயிலும் மழையும் கலந்து இருக்கிறது. அரிசியில் மட்டுமல்ல, காய்கறிகள், பழங்கள், நீர் என இயற்கையின் அனைத்து கொடையிலும் வெயில் இருக்கிறது; மழை இருக்கிறது. நாம் இதனைதான் அள்ளி பருகுகிறோம், உண்கிறோம். ஆனால், மோசமான அரசு நிர்வாகம் வெயிலையும், மழையையும் நமக்கு அந்நியமாக்கிவிட்டது, எதிரியாக்கிவிட்டது. மழையை, வெயிலை தூற்றத் துவங்கிவிட்டோம்.

உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்த குழந்தைகள் கூட, வீடு வரைய சொன்னால் மரத்துடன்தான் வீடு வரைகின்றன. இந்த பண்பு, அதன் மரபில் படிந்து இருக்கிறது. ஆனால், வளர்ந்த நாம்தான் மரத்தை மறந்து விட்டோம்.

“மழையும், வெயிலும் சரியான விகிதத்தில் இருந்தால் மகிழலாம், இரு கரம் நீட்டி வரவேற்கலாம். ஆனால், நிதர்சனம் அப்படி இல்லையே…” என்னும் சாமான்யனின் வாதத்தையும் புறம்தள்ளிவிட முடியாது. ஆம், காலநிலை மோசமாக மாறி இருக்கிறது. நாம் இயற்கையை வரம்பு மீறி சுரண்டிவிட்டோம். அது தன்னை புதுப்பித்துக் கொள்ள அதிக மழையையும், வெயிலையும் தருகிறது. பருவ நிலை மோசமாக ஆனதற்கு யார் காரணம் ? அரசுகள் மட்டும்தானா ? தனி மனிதனின் பொறுப்பின்மை, அலட்சியம் காரணம் இல்லையா ? சீரழிந்த சூழலுக்கு நாம் அரசுகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. அரசு நிர்வாகம் பிரதான காரணமென்றாலும், அரசு மட்டும் காரணமில்லை. ஒவ்வொரு தனி மனிதனின் கரங்களிலும் கறை இருக்கிறது.

நாம் ஒரு பக்கம் மணற் கொள்ளை, கனிம வளக் கொள்ளையை பற்றிப் பேசுகிறோம். இன்னொரு பக்கம், பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நம் தேவைக்கு அதிகமாக பல மாடி கட்டடங்கள் கட்டுகிறோம், கிரானைட் கல் பதிக்கிறோம். அதாவது ஒரு பக்கம், ஒரு குற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டே, நாம் இன்னொருவர் மீது பழி சுமத்துகிறோம். இது முரண் இல்லையா ? மணற் கொள்ளை, கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும். இதில் மாற்று கருத்தில்லை. ஆனால், அதே நேரம் நாமும் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் தங்கும் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம்.

 

வீடெனப்படுவது யாதெனில்…

நமக்கு வீடு என்றவுடன் உடனே நினவுக்கு வருவது என்ன…? அண்மையில், ஒரு தினசரியில் வந்த 2BHK house, starts from 35 lakhs, 3BHK house starts from 40 lakhs என்ற விளம்பரம் அல்லது சென்னைக்கு அருகே, மிக அருகில் 200 கி.மீ தொலைவில் என்று வீடு வாங்க பரிந்துரைக்கும் சின்னதிரை நடிகை. இவை நம் நினைவுக்கு வந்தால், நாம் உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்தவராய் இருக்கலாம் அல்லது கால சுழற்சியில் நமது வேர்களை தொலைத்தவராக இருக்கலாம். ஆனால், உலகமயமாக்கலுக்கு பிறந்த குழந்தைகள் கூட, வீடு வரைய சொன்னால் மரத்துடன்தான் வீடு வரைகின்றன. இந்த பண்பு, அதன் மரபில் படிந்து இருக்கிறது. ஆனால், வளர்ந்த நாம்தான் மரத்தை மறந்து விட்டோம். சரி விஷயத்திற்கு வருவோம்.

அகிலனின் வரிகளில், “வீடெனப்படுவது யாதெனில், பிரியம் சமைக்கிற கூடு…..”.

வீடு கட்டுவதற்கு வாங்கிய தவணை கடன் கழுத்தை நெரிக்கும்போது எப்படி பிரியம் சமைக்க முடியும் என்கிறீர்களா? ஆம் நிஜம்தான். கடன் என்பதையெல்லாம் தாண்டி, இப்போது எங்குமே வீடுகள் பிரியம் சமைக்கிற கூடுகளாக இல்லை. வெப்பம் கக்கும் கான்கரீட் சிலுவைகளாக மட்டுமே இருக்கிறது. வீடுகள் தன் பன்முகத் தன்மையை, நம் மண்ணிற்குரிய தன்மையை இழந்து, சுயத்தை இழந்து வெறும் கூடாக நிற்கிறது. இந்த வீடுகள் நம் சூழலை சிதைக்கிறது. மோசமான நம் உடல் உபாதைகளுக்கு நாம் தங்கி இருக்கும் வீடுகளும் ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நாம் வீட்டில் வசிக்கிறோமா அல்லது கல்லறையிலா…?

நாம் வசிப்பது நிச்சயம் வீட்டில் அல்ல… கல்லறையில். அதிர்ச்சியாக இருக்கிறதா… ஆம். பொக்கலைன்களின் இயந்திர கைகள், பெரும் வெறிகொண்டு பாறைகளை கொன்று ஜல்லி சமைத்து, சாத்தான் வண்டிகள் ஆற்றின் மடியை சுரண்டி, கோடரிகள் பெரும் வெறிகொண்டு மரங்களை வெட்டி எழுப்பிய வீடு எப்படி வீடெனப்படும், அது நிச்சயம் கல்லறைதான். மலைகளின், மரங்களின், ஆற்றின் கல்லறை.

முட்டாள் தனமாக யோசிக்காதே…. மண் அள்ளக் கூடாது, பாறையை வெட்டக்கூடாதென்றால் பிறகு எதைக்கொண்டு வீடு கட்டுவது… எங்குதான் வசிப்பது என்பது உங்கள் கேள்வியா? வீடு கட்ட மண் தேவை, கல் தேவை, மரம் தேவைதான். ஆனால் அது எந்த மண், எந்த கல், எந்த மரம் என்பதில்தான், சூழலியலுக்கான மொத்த விஷயமும் இருக்கிறது. நாம் எங்கு வசித்தோம் என்ற தேடலில்தான், நாம் எங்கு வசித்தல் நலம் என்ற பதிலும் இருக்கிறது.

தொடரும்….
ஹரி

சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் Part 2