தற்சார்பு விவசாயி-4 காற்றாடி

தற்சார்பு விவசாயி – அத்தியாயம் 4 காற்றாடி 

நிலத்தை புதிதாக வாங்கியவரும், பாகப்பிரிவினை பெற்றவரும், ஒத்திகைக்கு எடுத்தவரும் பாசனத்துக்காக தண்ணீரை இரைத்து பாய்ச்சுவது எப்படி? வட்டக்கிணறு கிணறு, ஆழ்துளைக்கிணறு அல்லது கால்வாயில் தண்ணீர் இருந்தாலும் அதை வெளிக்கொணர மின்மோட்டார் அல்லது டீசல் “கம்பிரசர்” எந்திரங்கள் கண்டிப்பாக வேண்டும். மின்சாரத்தை பெறுவதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும். வருடங்கள் காத்திருக்கவேண்டும். டீசல் அல்லது மண்ணெண்ணெய் எஞ்சினை உடனே வாங்கிவிடலாம். ஆனால் ஒரு மணிக்கு ஒரு லிட்டர் டீசல் செலவாகும். நடப்பு விலையில் கட்டுபடியாகாது.

சோலார் போடவும் சில லட்சங்கள் பிடிக்கும். மானியமென்பார்கள். மென்மையான அதை இரவும் பகலும் பாதுகாப்பது யார் ? காவலாளியை போடவேண்டும். போனவாரம் கூட குடிகார திருடர்கள் வந்தார்கள். வேலியை தாண்டி அதுங்கிய அலுமினிய காப்பி பாத்திரத்தைக்கூட நெளித்து எடுத்துக்கொண்டு கொண்டுபோனார்கள். மோட்டாரை சிதறு தேங்காய் போல உடைத்து தாமிர கம்பியை கொண்டுபோவார்கள். சோலார் பேனலை உடைப்பதற்கு தூரத்திலிருந்து வீச ஒரு கல் போதும். அதுவல்ல பிரச்சனை.

சோலார் 15 வருடம் உத்தரவாதம் என்பார்கள். மொத்த பணத்தையும் வாங்கிவிடுவார்கள். எலக்டிரானிக் பொருட்கள் 3 வருடத்துக்கு மேல் வராது. உங்கள் செல்போன், கணினி, மின் விசிறி, மிக்ஸி, தொலைகாட்சி இவைகளுக்கு வயசென்ன ? சொட்டை வெயிலிலும், மழையிலும் அப்பளமாக காயும் சோலார் பேனல் என்னைப்பொறுத்தவரை 3 வருடம் வந்தால் அதிசயம். பழுதானால் நாய் கூட சீந்தாது.

ஆகவேதான் காற்றாடி என்று முடிவானது. முதலில் காற்றை அளக்க வேண்டும் என்று நினைத்தேன்.

2013ம் ஆண்டு, முதன் முதலில் நான் வாங்கியது ஒரு அளக்கும் கருவி. அதன் பெயர் “அனிமோமீட்டர்”. வாங்கி கொடுத்தவுடன் என் நண்பன் அதை உடனே செலவில்லாமல் ஒரு சவுக்கு கட்டையால் கோபுரம் கட்டி ஏற்றிவிட்டான் (படம்). இங்கேதான் கிராமப்புற தொழில் நுட்பம் கைகொடுக்கும்.

காலையும் மாலையும் இதில் ஏறி அங்கு உள்ள மீட்டரை பார்த்து ரீடிங் சொல்லவேண்டும். செய்தார்கள். இப்படி இந்த சின்ன காற்றாடி 15.06.2014 வரை 315 நாட்கள் ஓடிய தூரம் 23985 கிலோமீட்டர்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புள்ளி வைத்து கணினியில் கோலம் போட்டால் இந்த படம் கிடைக்கும். இந்த புள்ளிகள் மேலே சென்றால் காற்றின் வேகம் அதிகம். கிடைமட்டத்தில் இடதுபுறம் தொடக்கம். வலதுபுறம் கடைசி புள்ளி 315வது நாள். வலப்புறம் செல்ல செல்ல, சில மாதங்களில் காற்று மெதுவாக வீசுவதை காணலாம். குழப்பிக்கொள்ள வேண்டாம்.

களத்தில் ஆராய்ந்து தெரிந்து கொண்ட, கடைசியில் கண்டுபிடித்த ஒரு அறிவியல் ரகசியம் சொல்கிறேன். “அதாவது காற்றாடி இயங்குவதற்கும் காற்றின் வேகத்துக்கும் சம்பந்தமில்லை” என்பதுதான் அது. (மேலதிக விளக்கம் கீழே). வலப்புறம் தெரியும் புள்ளிகள் ஒரு நொடிக்கு 1 மீட்டர் வீதம் வீசும் வேகம்தான் என காட்டுகிறது . ஆனால் அப்போதுதான் உண்மையில் பேய்க்காற்று வீசிக்கொண்டிருந்தது. பெரிய காற்றாடி கட்டுக்கடங்காமல் சுற்றிக்கொண்டிருந்தது. அதை நிப்பாட்ட 5 ஆட்கள் வேண்டும்.

அனிமோமீட்டரை கழற்றி மூலையில் கிடாசினோம் !!!.

ஒரு சில மாதங்களில் புரிந்து போனது. ஒரு பெரிய “ரிஸ்க்” எடுத்தேன். அதாவது எந்திரமுறை காற்றாடிக்கு ஆர்டர் கொடுத்து வாங்கி மாட்டியும் விட்டேன். மும்பையில் ABS என்ற கம்பெனியார் இதை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆரோவிலியிலும் செய்கிறார்கள். அனால் அது விலை கூடியது (5 – 7 லட்சம்)

இது கரண்டு எடுக்காது. நேரடியாக விசையை சைக்கிள் பம்பு போல அடித்து தண்ணீரை இறைக்கும். சுமார் 160 அடி வரை சுலபமாக இறைக்கும். கோபுரத்தின் எடை 1 டன். உயரம் 9 மீட்டர் (30 அடி). மின்சாரம் இல்லாத காலத்தில் அமெரிக்கா முழுவதும் இதைத்தான் உபயோகித்து வந்தார்கள். 2 லட்சம் செலவு ஆனது. இரவும் பகலும் ஓடிக்கொண்டே இருக்கும். (வீடியோ). ஒரு நாளைக்கு 5000 லிட்டர் இறைக்கும்.

இந்த முறையில் முழுவதும் இயற்கையின் சக்தியை மட்டுமே உபயோகித்து வாழை போட்டு பல முறை எடுத்தும் இருக்கிறோம். (படம்). நஞ்சில்லாத இயற்கை அங்கக
வேளாண்மையென்பதால் குருவிகள் கூட வாழைக்குலைக்குள் வீடுகட்டி வாழ்கின்றன. காற்றாடி கோபுரத்தில் மைனா வீடு காட்டியிருக்கிறது.

காற்றாடி முழுவதும் அசையும் இயக்கமுறை எந்திரமாதலால் காற்றின் திசை தாறுமாறாக மாறும்போது பைப்புகள் கழன்றுகொள்ளும். கிரீஸ் போட்டு சரியாக வைக்கவேண்டும். (நல்ல வடிவமைப்புதான். ஆனால் டவர் கட்டும்போது ஒரு தவறை செய்துவிட்டோம். வந்த நபருக்கு இந்திதான் தெரியும். நமக்கு தமிழ்தான் தெரியும் ! இருவருக்கும் இதுதான் முதல் காத்தாடி.).

ஆழ்துளை குழாய்களை அடிக்கடி கழற்றி மாட்டி பழகிவிட்டது. கூலி செலவாகும். முதலில் சலிப்பு கொண்ட என்னுடைய விவசாய குழு, இப்போது காத்தாடிமீது காதல் கொண்டுவிட்டது. காத்தாடியை புரிந்து கொண்டது. சைக்கிள் போல “கர்ச்சா” இல்லாமல் ஓடும். காத்தாடி இந்த ஏரியாவில் பிரசித்தம். பளபளவென்று ஓடும் காத்தாடியை அண்ணாந்து பார்த்தவாறே புல்லட்டில் வந்த ஒரு நபர் குளத்து சரிவில் இரங்கி விழுந்த வரலாறும் உண்டு.

5 ஏக்கரில் விவசாயம் செய்ய ஒரு காற்றாடி மட்டும் போதுமா ?எங்கள் ஊரில் காற்று இல்லையே. ஓடுமா ? நம்பி வாங்கலாமா ? எவ்வளவு ஆற்றல் பெறமுடியும் ? யாரை கேட்கவேண்டும் ? சரி, காத்தாடி மூலம் நீர் இறைத்தாயிற்று. அதை மேலும் வயலுக்கு பாய்ச்ச, சொட்டு நீர் போட முடியுமா ?

— வளரும்.
#தற்சார்புவிவசாயி (alwar narayanan)

அத்தியாயம் ஒன்று 
அத்தியாயம் இரண்டு 
அத்தியாயம் மூன்று 

மேலதிக விளக்கம்: திடமாக நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து உங்கள் மீது மோதுகிறான். நீங்கள் விழவில்லை. இன்னொரு தடித்த மனிதன் உங்கள் முன்பு அருகில் நின்றுகொண்டு உங்களை தள்ளுகிறான். விழுந்து விடுவீர்கள்.

ஒரு அறையில் மேசை மின் விசிறி அதி வேகமாக சுற்றுகிறது. உங்கள் தோலின் மீது காற்று தெரிகிறது. ஆனால் பொருட்கள் அடித்து செல்லப்படவில்லை. இதே அளவு காற்று மாடியில் வெளிக்காற்றில் வீசினால் உங்களை தள்ளிவிடும். பார்க்க ஆழமான அமைதியான மெதுவாக ஓடும் நதிகள் ஆபத்து கொண்டிருப்பதும் இதனால்தான்.

இந்த இரண்டிலும் காரணம் காற்றுக்கு “விசை” இருக்கவேண்டியதில்லை. “எடை” இருக்கவேண்டும். உங்கள் ஊரில் மரத்தின் இலை அசையுமளவு காற்று இருந்தால் போதும் காற்றாடி ஓடும் என்று தெரிகிறது .