பாரம்பரிய விவசாயத்தில் களைக் கட்டுபாடு
பாரம்பரிய விவசாயத்தில் டன் கணக்கில் சாணஎரு பயன்படுத்துகிறோம். சாண எருவில் களைகளின் விதைகள் லட்சக் கணக்கில் உள்ளன. இவை ஆறு வருட காலம் வரை செயலற்ற நிலையில் உயிருடன் இருக்கக் கூடியவை, இதனால சாணஎரு போட்டுவிட்டால் களைகள் 6 வருடம் வரை வளருகின்றன.
சுபாஷ் பாலேக்கர் விவசாயத்தில் நாம் சாணஎரு பயன்படுத்துவதில்லை எனவே களைகள் கட்டுப்படுத்தப் படுகின்றன. களைகளை கட்டுப்படுத்த மூடாக்கு போடுவது அவசியம் ஆகும்.
களைகளின் விதைகள் முளைக்கும் அவை ஒளிச சேர்க்கை செய்வதற்கு சூரியஒளி தேவைப்படுகிறது, மண்ணின் மேல் மூடாக்கு போட்டு மண்ணை மூடும்போது களைகளுக்கு சூரிய ஒளி கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடுக்கப்பட்டு களை மடிகின்றன.
களைகளின் விதைகள் காற்று வழியாகக் பரவி முளைக்கின்றன, மூடாகின் மீது களைகளின் விதைகள் விழும்போது அவற்றால் முளைக்க முடிவதில்லை.
சிலவகை பூச்சிகளும் களைகளைத் தின்று அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.
மீதி உள்ள களைகளை கையால் பிடுங்க வேண்டும் அல்லது ஊடுபயிர் சாகுபடி செய்து களை வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
களைக்கும் பயிருக்கும் உணவுக்காக போட்டி உள்ளது என்று விஞ்ஞானிகள் சொன்னாலும் அது சரியல்ல. எந்த ஒரு தாவரத்தை எடுத்துக்கொண்டாலும் அவைகளுக்குள் ஊட்டசத்தில் போட்டி இல்லை. காடுகளில் பெரிய மரங்களுக்கு கீழ் நடுத்தர மரங்கள், நடுத்தர மரத்திற்கு கீழ் புதர்கள், புதர்களுக்கு கீழ் செடிகள், செடிகளுக்கு கீழ் கொடிகள் என இருக்கின்றன, எனினும் ஒவ்வொரு தாவரத்திலும் கனிகள் இருக்கின்றன அல்லவா!
எனவே உணவுக்காக போட்டி இல்லை என்பதே இல்லை, ஆனால் களைகளுக்கும் பயிருக்கும் இடையே உள்ள கூட்டுவாழ்வு தன்மையைப் பொறுத்து வளர்ச்சி நிர்ணகிக்கப்படுகிறது.
இருவித்திலை களைகளில் வேர்கள் அதிகபட்ச நுண்ணூட்டங்களை பெற்றுள்ளன. இருவித்திலை களைகளில் முதிர்ந்த இலைகள் ஊயிர் மூடாக்காக மண்ணை மூடுகின்றன, அவை மக்கும் போது நுண்ணூட்ட சத்துக்கள் கிடைக்கிறது.
பல களைகள் பயறுவகை குடும்பத்தை சேர்ந்த தாவரங்கள் (லெகுமினேசி/ பேப்பிலினோசி) இவற்றின் வேர்களில் வேர் முடிச்சுகள் உள்ளன. இவற்றில் ரைசோபியம் நிலைப்படுத்தும் பேக்டீரியா இருக்கிறது. அவை காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்து அருகில் உள்ள பயிரின் வேர்களுக்கு கொடுப்பதோடு நைட்ரஜனை மண்ணிலும் சேர்க்கிறது. இந்த களைகளில் cassia tora. Cassia utilata. Cassia glandiflora போன்றவை முக்கியமானவை.
பல கொடிக்களைகள் மிக வேகமாக வளர்ந்து மண்ணை மூடுகின்றன. இவை மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன.
பல களைகள் நன்மை செய்யும் பூச்சிகளை அதிக அளவில் ஈர்க்கின்றன. இந்த நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துகின்றன,
பல களைகள தேனீக்களை அதி அளவில் ஈர்க்கின்றன, இந்த தேனீக்கள் பயிரின் மலர்களில் மகரந்த சேர்க்கை செய்வதால் விளைச்சல் அதிகரிக்கிறது, எனவே பழத்தோட்டங்களில் களைகள் பழமரங்களின் நண்பர்கள் ஆகும்.
பயிருடன் களைகள் ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளிக்காக மட்டும் போட்டியிடும், மண்ணை மூடாக்கால் மூடும்போது மண்ணின் ஈரப்பதத்தை சேமிக்கிறோம், அதனால் ஈரப்பதத்திற்கான போட்டி ஏற்படுவதில்லை.
சூரிய ஒளிக்கான போட்டியை கட்டுப்படுத்த நாம் அவ்வபோது களைகளை வெட்டி மூடாக்காக மாற்ற வேண்டும். மேலும் பழ மரங்களில் தரை அருகில் உள்ள கிளைகளை களைகளை மூடிவிடாதவாறு களைகளை வெட்டிவிடவேண்டும்.
நிரந்தரமான களைகளை பழத்தோட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். பழத்தோட்டத்தில் களைகளை வெட்டுவதற்கு பல ப்ரஷ் கட்டர்கள் உள்ளன. குறுகியகால பயிர்களுக்கு தொடர்ந்து மூடாக்கு செய்ய இயலாது என்பதால் ஊடுபயிர்கள் செய்து அவ்வப்போது கைக்களை எடுக்க வேண்டும்.
மானாவாரி விவசாயத்தில் மண்ணில் ஈரப்பதத்தை சேமிப்பது மிகவும் முக்கியம். எனவே ஊடுபயிர் செய்வது அவசியம்.
*இலைதழை மூடாக்கு*
சருகின் விளக்கம்: உயிரினங்களில் இறந்த உடல்கள் சருகுகள் என்கிறோம், இதில் தாவர உடல். பூச்சி உடல். நுண்ணுயிர்களின் உடல், மண் விலங்குகளில் உடல் போன்றவையாகும். சருகு மூடாக்கு போடுவதற்காக இலைதழைகளை வேறு மரத்தில் இருந்து எடுக்கக்கூடாது ஏனெனில் எந்த ஒரு மரத்தில் உதிர்ந்த இலைகள் அந்த மரத்திற்கான ஊட்டசத்தாகும். நாம் வேறு மரங்களில் இருந்து எடுக்கும் போது அந்த மரத்திற்கு சத்துக்கள் கிடைப்பதில்லை எனவே ஏதோ ஒரு மரத்தில் இருந்து விழும் இலைகளை பயன்படுத்த வேண்டாம்.
இலைதழை கழிவுகளை யாராவது தோட்டத்திற்கு வெளியே வீசினால் அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், கோவில்களில் பழைய மலர்கள் மற்றும் தேங்காய் கழிவுகள் நிறைய கிடைக்கும் அதையும் பயன்படுத்தலாம்.
கரும்புச்சாறு கடைகளில் வீசும் சக்கையை வாங்கி அதையும் பயன்படுத்தலாம். இரசாயன முறையில் விளைந்த கரும்புச் சக்கை என்றால் அதில் நிறைய ஜீவாமிர்தம் தெளித்து பயன்படுத்தலாம்,
உழவர் சந்தையில் காய்கறி கழிவுகளை பெற்று மூடாக்காக பயன்படுத்தலாம். அரிசி கடைகளில் பழைய சாக்குப் பைகள் இருக்கும் அதை வாங்கி பயன்படுத்தலாம். பழைய பருத்தித் துணிகள் சிறந்த மூடாக்காகும். ஆகாயத்தாமரை போன்ற ஈரமான தாவரத்தை உலரவைத்து பயன்படுத்தலாம். செய்தித் தாள்களை பயன்படுத்தலாம், சவுக்கு தாவரம் பயன்படுதலாம், யூகலிப்டஸ் இலை பயன்படுத்தக் கூடாது,
*மூடாக்கின் உயரம்*
இலைதழை மூடாக்கை 4.5 அங்குலம் உயரம் இடுவது அவசியம். இதைவிட அதிகமாகவும் வேண்டாம், குறைவாகவும் வேண்டாம். 4.5 அங்குலத்திற்கு மேல் இருக்கக்கூடாது சூரிய ஒளி அதன் உள் .நுழைந்து செல்ல வேண்டும். அப்போதுதான் மூடாக்கின் அடியில் உள்ள நுண்ணுயிர்களுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைக்கும்.
*மரங்களுக்கு மூடாக்கு எங்கு இடவேண்டும்*
மரக்குடை நிழல் நன்பகலில் எங்கு விழுகிறதோ அந்த எல்லையில் இருந்து மூன்று அடி உள்நோக்கி மூடாக்கு போட்டால் போதும், தண்டுவரை போடவேண்டாம்.
*இரண்டு அடுக்கு மூடாக்கு*
ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் மூடாக்கு போடவும், மழைக்காலத்தில் மழை துவங்கும் போது மூடாக்கின் ஊடே 3 அடி இடைவெளியில் துளைகள் இட்டு அதில் தட்டைப்பயறு, வெள்ளரி, தர்பூசனி போன்ற விதைகளை ஊன்றவும், மழை நீரின் ஈரப்பத்தினால் விதைகள் முளைத்து வளர்ந்து விடும். அடியில் இலை தழை மூடாக்கும் மேலே உயிர் மூடாக்கும் இருக்கும் இது இரண்டு அடுக்கு மூடாக்காகு எனப்படும்.
பழத்தோட்டதில் நாம் மூடாக்கு போடும் போது மூலப்பொருள் தயார் செய்ய வேண்டும். முதல் மழைக்கு பின்பு தட்டை, கொள்ளு, நரிப்பயறு, கொடி அவரை, வெள்ளரி, பாகற்காய், தர்பூசணி விதைகளை பீஜாமிர்தத்தால் விதைநேர்த்தி செய்து இந்த விதைகள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அடி இடைவெளியில் வரிசையாக ஊண்றவும்.
ஒரே மாதத்தில் மண் முழுவதும் உயிர் மூடாக்கால் மூடப்பட்டிருக்கும் களைகள் தானாகவே கட்டுப்படுத்தப்படும் மண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். ஒவ்வொரு அங்குல நிலத்தில் இருந்தும் விளைச்சல் கிடைக்கும், அறுவடையின் போது ஒரு செடியை மட்டும் அப்படியே விட்டுவிடவும் அதை அறுவடை செய்யவேண்டாம் அது முதிரட்டும், முதிர்ந்தபின் காய்ந்து விதைகள் தானாகவே வெடித்து மண்ணில் விழும், அவ்விதைகள் மீண்டும் வளரும்.
ஊடுபயிர்களில் அறுவடை செய்தபின் அதன் பாகங்களை வெட்டாமல் அப்படியே வைத்திடுங்கள், அது காய்ந்து மூடாக்காக மாறும், அதாவது உயிர் மூடாக்கு காய்ந்து இலைதழை மூடாக்காக மாறிவிடும். ஈரப்பதம் இருந்தால் அந்த சருகுமூடாக்கின் மீது விதைகளை ஊண்றுங்கள்.
இந்த ஊடுபயிர்களின் விதைகள் மழைக்காலத்தில் முளைவிட்ட பின் இரண்டு செடிகளுக்கு இடையே இருக்கும் வெற்றிடங்களில் சிறுதானியங்களின் விதைகளை விதைக்கவும். தானிய அறுவடைக்குப்பின் அதையும் மூடாக்காக்கலாம்.
வெற்றிடம் உள்ள இடங்களில் முருங்கை, உரக்கொன்றை, அகத்தி போன்ற மரங்களை நடவு செய்தால் அவற்றில் இருந்து கிடைக்கும் இலைதழைகளால் தொடர்ந்து மூடாக்கு கிடைக்கும். இவற்றை வெட்டி வெட்டி வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.
கிளைரிசிடியாவில் 3.6 சதவீதம் நைட்ரஜன் உள்ளது (C:N) கார்பன் நைட்ரஜன் விகிதம் சரியாக உள்ளது இதன் கிளைகளை வெட்டி மூடாக்காக போட்டால் நல்ல மக்கு உருவாகும். கிளைரிசிடியா மற்றும் முருங்கையின் மீது மிளகுக் கொடியையும் படரவிடலாம்.
*உயிர் மூடாக்கு*
உயிர் மூடாக்கு என்பது ஒருத்திலை அல்லது இருவித்திலை தாவர ஊடுபயிர்கள், முக்கிய பயிர்களுடன் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக இருக்கும். இவை பழத்தோட்ட மரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும்.
உயிர் மூடாக்கிற்கு கொடிக் காய்கறிகள் சிறந்தவை, இந்த ஊடுபயிர்கள் மண்ணை வேகமாக மூட உயிர் மூடாக்காக செயல்படும்.
*துலுக்க சாமந்தி ஊடுபயிர்*
பழமரங்களில் வேர்களில், காய்கறி, பருத்தி செடிகளின் வேர்களிலும் சில வேர்முடிச்சுகள் தோன்றும், இவை நைட்ரஜன் வேர்முடிச்சு அல்ல இவை நூற்புழுக்கள். இப்புழுக்ள் தாவரத்தை பாதித்து விளைச்சலைக் குறைக்கும்.
அப்லா டெர்தோநைல் என்ற ஆல்கலாய்டு நாட்டு துலுக்க சாமந்தியின் வேர்களில் உள்ளது. நூற்புழுக்களை கட்டுப்படுத்த சாமந்தி மலர்களை ஊடுபயிர் செய்ய வேண்டும். மேலும் இம்மலர்கள் நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைக்கின்றன, இந்த நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது. துலுக்க சாமந்தி கிளைகளை வெட்டி நடவு செய்யலாம்.
*சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி*
*ஈஷா விவசாய இயக்கம் – 8300093777*
*06.02.2019 / Evening*