பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க
கன ஜீவாமிர்தம்
மூன்று வகையான கனஜீவாமிர்தம் உள்ளன.
*1. தொழுஉரத்தை அடிப்படையாக கொண்டது
200 கிலோ காய்ந்த சலித்தெடுத்த தொழு உரம் எடுத்துக் கொண்டு அதை பரப்பி வைத்து 20 லிட்டர் ஜீவாமிர்தத்தைத் தெளிக்கவும். 10:1 என்ற விகிதத்தில இருக்க வேண்டும் மண்வெட்டிக் கொண்டு நன்றாக கலக்கவும். அந்த குவியலாக நிழலில் வைக்கவும். 48 மணி நேரத்திற்கு அப்படியே நொதிப்பதற்கு வைத்திருங்கள்.
இதில் சூரிய ஒளி மற்றும் மழை நீர் படக்கூடாது. 48 மணி நேரம் கழித்து அதை தரையில் பரப்பி சூரிய ஒளியில் காயவைக்கவும். ஒரு நாளுக்கு மூன்று முறை புரட்டி விட்டு துகள்கள் அனைத்து நன்கு காயும்படி செய்யவேண்டும். நன்றாக காய்ந்த பின் மர சுத்தியலால் தட்டினால் தூளாக மாறும் அந்த கனஜீவாமிர்தத்தை சாக்குப்பையில் போட்டு கட்டி வைக்கவும். மழைநீர் படாதவாறு நிழலில் பாதுகாத்து வைக்கவும்.
அதை மண்தரையின்மேல் வைக்க வேண்டாம். மண்ணில் வைத்தால் மண்ணில் உள்ள ஈரத்தை உறிஞ்சி பூஞ்சை வளர்ந்து விடும். இந்த மூட்டைகளை மரப்பலகைகளில் மேல் சேமித்து வைக்கவும். கனஜீவாமிர்தம் ஒரு முறை தயார் செய்து விட்டால் வருடம் முழுவதும் பயன் படுத்தலாம். இந்த அளவு மானாவாரி நிலத்திற்கு ஒரு ஏக்ருக்கு போதுமானது.
2. புதிய பசுஞ்சாணத்தை அடிப்படையாகக் கொண்டது
100 கிலோ நாட்டு மாட்டு சாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது 50 சதம் நாட்டு மாட்டு சாணம் மற்றும் 50 சதம் நாட்டு எருது சாணம் பயன்படுத்தலாம். ஆனால் நாட்டு எருது சாணத்தை தனியாக பயன்படுத்த வேண்டாம். ஒரு கிலோ நாட்டு சர்க்கரை தூளையும் சேர்க்கவும் அல்லது ஒரு கிலோ இனிப்பான பழக்கூழ் சேர்க்கவும், மேலும் ஒரு கிலோ பயறு மாவு சேர்கக்வும்.
இதில் 2 லிட்டர் வளர்ச்சி ஊடகமாக இரண்டு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து மண்வெட்டிக் கொண்டு நன்றாக கலந்து குவியலாக நிழலில் வைத்திடுங்கள். மழைநீரும் சூரிய ஒளியும் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை 48 மணி நேரம் நொதித்தலுக்கு அப்படியே வைத்திருங்கள். பிறகு அதை பரப்பி வைத்து நன்பகலில் நன்கு காயவைக்கவும். ஒரு நாளுக்கு மூன்று முறை புரட்டிப் போட்டு அதன் துகள்கள் அனைத்தும் நன்கு காயும்படி வைக்கவும். நன்கு காய்ந்த பிறகு மரசுத்தியல் கொண்டு நன்கு தூளாக்கி கோணிப்பையில் எடுத்து கட்டிவைக்கவும். பிளாஷ்டிக் பை பயன்படுத்த வேண்டாம். எந்த நிலையிலும் பிளாஷ்டிக்பை பயன்படுத்த வேண்டாம். பலகையில் அடுக்கிவைத்து சேமிக்கவும். ஒரு ஏக்கருக்கு இந்த அளவு போதுமானது இதைஒரு முறை தயார் செய்து விட்டால் வருடம் முழுவதும எந்த சமயத்திலும் பயன்படுத்தலாம்.
3. சாணஎரிவாயு கழிவை அடிப்படையாகக் கொண்டது
சாண எரிவாயு கலனில் இருந்து வெளிவரும் கழிவை வெய்யிலில் காய வைக்கவும். அது நன்கு காய்ந்த பிறகு அவற்றை மரசுத்தியால் அடித்து தூளாக்கி அவற்றை சேமித்து வைக்கவும். அதில் இருந்த 50 கிலோ தூளை எடுத்துக் கொண்டு 50 கிலோ நாட்டுமாட்டு சாணத்தை சேர்க்கவும். 1 கிலோ நாட்டுச் சர்க்கரை தூளைச் சேர்க்கவும் அல்லது இனிப்பு பழக்கூழைச் சேர்க்கவும். அதில் ஒரு கிலோ பயறுமாவு சேர்க்கவும். அதில் இரண்டு லிட்டர் ஜீவாமிர்தைத்தை வளர்ச்சி ஊடகமாக சேர்க்கவும். அவற்றை நன்றாக மண்வெட்டிக் கொண்டு கலக்கி நிழலில் குவியலாக வைக்கவும். 48 மணி நேரத்திற்குப் பிறகு அதை வெய்யிலில் பரப்பி நன்கு காயவைக்கவும், காயும் போது கனஜீவாமிர்தத்தை ஒரு நாளுக்கு மூன்று முறை புரட்டிப் போடுங்கள். காய்ந்த பின் மரசுத்தியால் அடித்து தூளாக்குங்கள்.
இதை தூளாக்கி வைத்துக்கொண்டால் விதைக்கும் நேரத்தில் பயன்படுத்துவது சுலபமாக இருக்கும். இதை சாக்குப்பையில் கொட்டி கட்டி வைக்கவும் நிழலில் மழைநீர் படாதவாறு மரப்பலகையில் மீது சேமித்து வைக்கவும். இது ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.
கனஜீவாமிர்தம் மானாவாரி நிலத்திற்கு உகந்தது, இதை மூன்று விதங்களில் பயன்படுத்த முடியும்.
1. தூவிவிடுதல்
2. விதையுடன் சேர்த்து ஊன்றுவது
3. கையால் எடுத்து செடிகளுக்கு வைப்பது
மண்ணை உழும்போது கடைசி உழவுக்கு முன் கனஜீவாமிர்தத்தை தூவவேண்டும். மண்ணை உழும் போது பயன்படுத்த முடியவில்லை என்றால் விதைக்கும் போது போடலாம். 100 முதல் 200 கிலோ கனஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு பயிர் பூவிடும் சமயத்தில் பயன்படுத்த வேண்டும். நீர்பாசனம் செய்யும் நிலத்தில் அல்லது பழத்தோட்டங்களில் நாம் கனஜீவாமிர்தம் மற்றும் ஜீவாமிர்தம் இரண்டையும் பயன்படுத்தலாம்.
விதைநேர்த்தி / பீஜாமிர்தம்
நாம் விதைநேர்த்திக்கு சிறந்த அற்புதமான மருந்தைக் கண்டறிந்துள்ளோம் அது பீஜாமிர்தம். பீஜாமிர்தம் என்பது விதைகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் அருமையான இயற்கை இடுபொருளாகும். விதைகளை பவிஸ்டின் போன்ற இரசாயன (பூஞ்சைக் கொல்லி) மருந்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது நன்மை செய்யும் பூங்சையும் அழிகிறது. அதனால் பவிஸ்டின் போன்ற ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம். நமக்கு பீஜாமிர்தம் இருக்கிறது.
இரு விதமான பூஞ்சைகள் உள்ளன. ஒன்று நன்மை செய்யும் பூஞ்சை டிரைக்கோடெர்மா போன்றது. இரண்டாவது தீமை செய்யகூடியது பைட்டோப்தோரா போன்றது. பைப்டோப்தோரா கேடு விளைவிக்கும் பூஞ்சை பழமரங்களில் வேர்களை அழுகச்செய்கிறது. பாதிக்கப்பட்ட மரத்தின் தண்டில் இருந்து பசை போன்ற சுரப்பு வெளிவரும் இது கம்மோசிஸ் நோயின் அறிகுறியாகும், இந்தநோய் தாக்குதலால் மரம் இறந்தும் விடும். ஆனால் இந்த பூஞ்சையைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா என்னும் நன்மை செய்யும் பூஞ்சை உதவிசெய்கிறது.
மேகமூட்டமான இருக்கும் போது ஈரப்பதம் அதிகரிக்கிறது, வீசும் காற்றுடன் நோயூக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வருகின்றன. அவை விதையில் மேல்பரப்பில் ஒட்டிக்கொள்கின்றன. விதை நேர்த்தி செய்யாமல் விதைகளை அப்படியே விதைத்தால் தீமை செய்யும் பூஞ்சை மற்றும் பேக்டீரியாக்கள் மண்ணில் நுழைகின்றன. மண்ணில் அவை பல்கி பெருகுகின்றன. அவை வேர்களில் நுழைந்து தாவரம் முழுவதும் பரவுகின்றன. தாவரம் நோயினால் பாதிக்கப்படுகிறது. இந்த மாதிரியான நோய்களை விதையினால் பரவும் நோய்கள் என்கிறோம். (Seed born diseases)
விதையால் பரவும் நோய்கள் விதைகளை பீஜாமிர்தம் கொணடு விதை நேர்த்தி செய்தால் இந்த கேடு விளைவிக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா அழிகின்றன.
சோயாபீன், வேர்கடலை, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, உளுந்து, பீன்ஸ் விதைகளை விதைக்கும் போது சில நாட்களுக்கு பிறகு சில செடிகள் கீழை விழுவதை நாம் பார்போம். நாம் அந்த செடியை நாம் பிடுங்கிப் பார்த்தால் அந்த வேர்கள் அழுகி இருக்கும். இதை செய்வது ப்யூசேரியம் என்ற பூஞ்சையாகும். நாம் பீஜாமிர்தம் கொண்டும் விதை நேர்த்தி செய்யும் போது இந்த அழுகல் நோயில் இருந்து தாவரத்தை காப்பாற்றுகிறது.
பீஜாமிர்தம் மண்ணை சுத்திகரிக்கிறது. விதைகளை தூய்மை படுத்துகிறது. வேர்களையும் முளைகளையும் பாதுகாக்கிறது. கேடுவிளைவிக்கும் பூஞ்சை மற்றம் பாக்டீரியாவை அழிக்கிறது. விதையின் முளைப்பை தடுக்கும் நொதிகளின் செயல்களைத் தக்கிறது. பீஜாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது Aflotoxin நொதியின் செயல் தடுக்கப் படுகிறது இதனால் 90 சதவீத விதைகள் முளைப்புத் திறனைப்பெறுகின்றன.
பீஜாமிர்தம் தயாரிப்பு
10 கிலோ விதைகளை விதைநேர்த்தி செய்ய 2 லிட்டர் தண்ணீருடன் அதில் 500 மிலி நாட்டு பசுங்கோமியத்தை சேர்க்கவும், 500 கிராம் நாட்டு பசுஞ்சாணம், சிறிதளவு சுண்ணாம்பு சேர்க்கவும், வளமான மண் சிறிதளவு சேர்க்கவும். கரைசலை கோணிப்பை அல்லது துணி கொண்டு முடிவைக்கவும், இரவு முழுவதும் வைக்கவும். அடுத்த நாள் காலை பீஜாமிர்தம் தயாராகிவிடும். இதை ஏழுநாட்கள் வரை வைத்திருந்து விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தலாம்.
ஒருவித்திலை தாவரம் விதைநேர்த்தி
பீஜாமிர்தம் கொண்டு எப்படி விதை நேர்த்தி செய்வது, தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் விதைகள் அனைத்துக்கும் நெல், கோதுமை, சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு மற்றும் பிற தானியங்கள், புல்களில் விதைகள், ஒரு வித்திலை தீவனப் பயிர்களின் விதைகள், பருத்தி, ஆளிவிதை, சூரியகாந்தி மற்றும் பிற ஒரு வித்திலை எண்ணை விதைகள் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம்.
விதைகளை பரப்பி வைத்து அதன்மேல் பீஜாமிர்த்தை சிறிதளவு தெளியுங்கள். பின்னர் இரண்டு கைகளையும் பயன்படுத்தி விதைகளின் மேல் தேய்த்து அவ்விதைகளை நிழலில் காயவைக்கவும். இரண்டு மூன்று முறை புரட்டிப் போடுங்கள். ஒரு மணி நேரத்தில் அது காய்ந்து விடும்.அதன் பின் விதைகளை விதைத்திடுங்கள்.
இருவித்திலை விதைகளை விதைநேர்த்தி செய்யும்முறை
உதாரணமாக பயறுவகைகள், பச்சைப்பயறு, தட்டைப்பயறு, சோயாபீன், துவரை, வேர்கடலை போன்ற பல்வேறு தாவரங்க இருவித்திலை தாவரங்களாகும். இவை முளைக்கும் போது இரண்டு வித்திலைகளைக் கொண்டிருக்கும்.
விதைக்க விரும்பும் தாவரத்தின் விதைகளை பரப்பிவைத்து விதைகள் மேல் தோராயமாக பீஜாமிர்தம் தெளித்திடுங்கள். கையால் விதைகளை கண்டிப்பாக தேய்க்கக்கூடாது என்பதை கவனத்தில் வைக்கவும். அப்படித் தேய்த்தால் விதைத்தோல் உறிந்துவிடும். விரல்களினால் லேசாக புரட்டினால் போதுமானது. விதைகளை நிழலில் உலர்த்தவும்.
கிழங்குகளை விதை நேர்த்தி செய்யும் முறை
கரும்பு கரணைகள், வாழைக் கட்டைகள், மஞ்சள், இஞ்சி, உருளைக் கிழங்கு இவற்றில் எதை பயிர்செய்ய விரும்புகிறீர்களோ அதை முங்கில் கூடையில் எடுத்துக்கொண்டு அந்த முங்கில்கூடையை பிஜாமிர்தத்தில் ஒருமுறை அழுத்தி எடுத்துவிடவேண்டும்.
காய்கறிகள்
ஒரு வித்திலைத் தாவர விதைகளை பீஜாமிர்தம் தெளித்து கைகளால் தேய்த்து விதை நேர்த்தி செய்யலாம். இருவித்திலை காய்கறிகளை விதை நேர்த்தி செய்யும் போது கைவிரல்களால் புறட்டிவிட்டால் போதுமானது. பழமர விதைகளுக்கும் இவ்வாறே செய்து கொள்ளலாம்.
நாற்றுகளை விதைநேர்த்தி செய்யும் முறை
நெல், துளுக்க சாமந்தி, மிளகாய், கத்தரி போன்ற எதை சாகுபடி செய்தாலும் விதை நேர்த்தி செய்து விதையுங்கள், வளர்ந்த பின் பிடுங்கி எடுத்து நாற்றின் வேர்களை ஒரு சில வினாடிகளுக்கு பீஜாமிர்தத்தில் முக்கி எடுத்து நாற்றை நடவு செய்யவேண்டும்.
போத்து மற்றும் குச்சிகளை விதை நேர்த்தி செய்யும் முறை
முருங்கை, மரவள்ளி, மிளகு, வென்னிலா, திராட்சை, மாதுளை போன்ற போத்துகள், தண்டுகள் மூலம் பயிரிடும் துண்டுகளை மூங்கில கூடைகளில் எடுத்துக்கொள்ளுங்கள் இவற்றை மூங்கில் கூடையுடன் பீஜாமிர்தத்தில் ஒரு சில வினாடிகள் முக்கி எடுத்து நடவு செய்யுங்கள்.
ஒட்டு மா, மாதுளை, தென்னை, பாக்கு, சீதாப்பழம், சப்போட்டா, முந்திரி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் பிற மரங்களில் நாற்றுக்களை பிளாஸ்டிக் பையை நீக்கி விட்டு அதன் வேர்மண்ணில் பீஜாமிர்தம் ஊற்றவேண்டும். நடும் குழியில் மேலேயே செய்வது சிறந்தது.
பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க கடையில் இருந்து எந்த மூலப்பொருளும் வாங்க வேண்டியதில்லை. பயறு மாவு ஊடுபயிர்கள் மூலமாக நமக்கு கிடைத்துவிடும். சர்க்கரைக்கு பழமரங்களையும் வளர்த்து கொள்ளலாம், சுபாஷ் பாலேக்கர் விவசாயம் செலவைக் குறைக்கும் விவசாயம்.
சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்