மரக்கிளைகளில் அமைக்கப்படும் கோள வடிவ வீடுகள்
நகர வாழ்க்கையின் பரபரப்புக்கு அனைவருமே பழகி விட்டாலும், அவ்வப்போது இயற்கையின் அழகில் மகிழும் உள்ளுணர்வு ஏற்படுவதை பலரும் உணர்ந்திருப்பார்கள்.
குறிப்பாக, பறவைகள் அல்லது அழகிய வன உயிரினங்கள் போல பசுமையான சூழலில் இயற்கையோடு இணைந்து வாழும் ஆசை பெரும்பாலானோருக்கு உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் கால்பந்து வடிவ வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கனடா போன்ற நாடுகளில் விடுமுறைக்கால குடில்களாகவும் அவை உபயோகத்தில் உள்ளன.
கோள வடிவ வீடு
அதாவது, பறவைகளைப்போல மரங்களில் கூடுகளில் வாழும் வாழ்க்கையை, இயற்கையோடு இணைந்து வாழ்தல் (Living With Nature) என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. காடுகளில் உள்ள மரங்களின் கிளையில் பொருத்தப்பட்ட கோள வடிவ வீடு போன்ற ஒரு கூண்டில் சில காலம் வசிப்பது சில மேல் நாடுகளில் வழக்கத்தில் இருப்பது அறியப்பட்டுள்ளது. மரங்களுக்கு இடையில், முற்றிலும் இயற்கை சூழ்நிலையில் மரத்தில் பிணைக்கப்பட்ட ஒரு கூடு போன்ற வீட்டில் வசிப்பது மனதில் ஒரு வகை புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று அவற்றில் வசித்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
சூழல் பாதுகாப்பு
‘சுதந்திர உணர்வுள்ள கோளம்’(Free Spirit Spheres) என்று சொல்லப்படும் இவ்வகை கூடுகள், அன்றாட நகர வாழ்வில் வெளியேற்றப்படும் ‘கார்பன்’ அளவை விட, மிகவும் குறைந்த ‘கார்பன்’ வெளியேற்றத்தை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டவை. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஒரு சிறு வகையிலாவது காரணமாக உள்ள இவ்வகை கூடுகளில் நிரந்தரமாக குடியேறுவது சாத்தியமில்லை என்றாலும், எப்போதாவது ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ள அமைந்த கட்டுமானமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
நவீன வசதிகள்
பறவையின் கூடுபோல அமைந்திருந்தாலும், இன்றைய நவீன வாழ்க்கை வசதிகளில் பெரும்பாலும் அந்த கூட்டில் அமைக்கப்பட்டிருக்கும். படுக்கை வசதி, நவீன சமையலறை, தொலைக் காட்சி மற்றும் பிரிட்ஜ் என்று வசதிகள் செய்யப்பட்ட இந்த கோள வீடு, உறுதியான மரக்கிளையில் இரும்பு கைப்பிடிகள் அமைத்து அதில் தொங்குவது போல அமைக்கப்பட்டிருக்கும்.
பெரிய மரம்
பெரிய வலிமையான மரத்தை ஒட்டியபடி படிக்கட்டுகளும், அதிலிருந்து கூட்டுக்குச் செல்ல தொங்கும் பாலமும் இருக்கும். கூட்டுக்கு உள்பகுதியில் கோள வடிவத்தில் சுவர்களும், உள் கூரையும் தனித்தனியாக இல்லாமல் ஓரே அமைப்பில் இருக்கும். கூட்டின் மொத்த அகலம் சுமாராக 11 அடி இருக்கலாம். காடுகளில் இவ்வகை கூண்டு வீட்டை அமைக்க வசதியான பெரிய மரம் கச்சிதமாக தேர்வு செய்து அமைக்கப்படும்.
இரவு நேர வானம்
தேவைப்பட்டால் கூட்டுக்கு உள்ளே வரவேற்பறை, டைனிங் ஹால் போன்றவற்றையும் அமைத்துக்கொள்ளலாம். பெரிய ஜன்னல்கள் வழியே மணிக்கணக்கில் இயற்கையை பார்த்து ரசிப்பதோடு, 2 அடி அகலம் கொண்ட மேற்கூரை ஜன்னல் வழியாக இரவில் நட்சத்திரங்களையும் கண்டு மனம் மகிழலாம். மின்சாரம், பிளம்பிங் இணைப்புகள் ஆகிய வசதிகள் இருப்பதால் குளிர் காலங்களில் தண்ணீரை சூடாக்கி பயன்படுத்தலாம்.
வேண்டிய இடத்தில் பொருத்தலாம்
குறிப்பாக, கூடு போன்ற இந்த கோள வீட்டை எளிதாக கழற்றி எடுத்து, எந்த ஒரு மரத்திலும் அமைத்துக்கொள்ளலாம். அடித்தளம் ஏதும் இல்லாமல், மரத்தின் மீது அமைக்கப்படும் கோள வீடுகள் காற்றில் மிதமாக அசைந்து கொண்டிருக்கும். இரவில் பேட்டரி மின் விளக்குகளை அணைத்து விட்டு, பெரிய கால் பந்து வடிவ வீட்டில் இருந்தவாறு, வெளியே காட்டின் இருட்டையும், அமைதியையும் கவனிப்பது வித்தியாசமான அனுபவம் என்று அதில் வசித்த பலரும் தெரிவித்துள்ளனர்
Thanks: நம்மாழ்வாரின் காணொளிகள் குழு