முக்கோண முறையில் வாழை சாகுபடி

முக்கோண முறையில் வாழை சாகுபடி

முக்கோண முறையில் வாழை சாகுபடி

சாதாரணமாக சதுர நடவு முறையைவிட இந்த முக்கோண நடவு முறையில் அதிகமான வாழையை நடவு செய்ய முடியும். அதாவது 30 சதவீதம் வரை கன்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழை வரிசைகள் 4.5 அடி இடைவெளியுடனும், கன்றுக்கு கன்று 6 அடி இடைவெளியும் இருக்கும். கன்றுகள் குறுக்கும் மறுக்குமாக (Zig Zag) நடப்படுவதால் மரத்திற்கு மரம் 6 அடி இடைவெளி இருக்கிறது.

உள்ளூர் சந்தையில் நேரடியாக விற்பதற்கேற்ப உள்ளூர் சந்தையில் அதிக மதிப்புடைய நாட்டு ரகத்தை தேர்ந்தெடுத்து நடவு செய்யவேண்டும். தொடர்ந்து வாழைப் பழங்கள் கிடைக்க வேண்டுமெனில், முழு நிலத்திலும் ஒரே நேரத்தில் நடவு செய்யாமல், ஒரு ஏக்கர் நிலத்தை ஆறு பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாத இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இதனால் தேவைக்கேற்ப அறுவடை செய்யமுடியும், நியாயமான விலையும் கிடைக்கும், தொடர் வருமானம் கிடைப்பதோடு விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கமும் பாதிக்காது.

வட்டக்குறியிட்ட இடங்களில் வாழையை நடவு செய்ய வேண்டும். நட்சத்திரக் குறியிட்ட இடத்தில் துவரை, சோளம் அல்லது பப்பாளி நடவு செய்ய வேண்டும். துவரை நைட்ரஜன் கொடுக்கும். மூடாக்கு தேவையையும் நிறைவேற்றும், பருப்பையும் கொடுக்கும். புள்ளியிட்ட இடங்களில் மழைக்காலத்தில் நடப்படும் தட்டை, கொள்ளு, பச்சைப்பயறு போன்றவையும் நைட்ரஜனை நிலைப்படுத்தும். துவரை மூன்று மாதத்திற்கு பிறகே நைட்ரஜனை நிலைப்படுத்துவதால் இந்த ஊடுபயிர்கள் மிக அவசியம். குளிர் காலத்தில் கொண்டைக் கடலை, பட்டாணி போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.

வாழையும் பப்பாளியும்

ஊடுபயிராக துவரைக்கு பதில் பப்பாளி நடவு செய்யலாம். பப்பாளி நடவு செய்யும் போது வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியும் கன்றுக்கு கன்று 8 அடி இடைவெளியும் விடவேண்டும். வாழை நடுவதற்கு 4 மாதங்களுக்கு முன்பே பப்பாளி கன்றுகளை நடவு செய்துவிடவேண்டும். வாழை மிதமான ஒளிவிரும்பும் தாவரம் என்பதால் பப்பாளியின் நிழலில் வாழை நன்றாக வளரும். வாழைக்கு மிதமான ஒளி (அசையும் நிழல் / Dancing shadow) பப்பாளி மூலம் கிடைக்கிறது. நான் இந்த முறையை செய்து பார்த்ததில் வாழை மற்றும் பப்பாளி இரண்டும் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. நீங்களும் சிறிதளவு செய்துபார்த்து பின்னர் பெரிதாக செய்யலாம். துவரைக்கு பதிலாக முருங்கையும் வைக்கலாம். எனினும் முருங்கை மரத்தின் அடிக்கிளைகளை தொடர்ந்து கவாத்து செய்யவேண்டும்.

உழவு மற்றும் நாற்று நடவு

பருவமழைக்கு முந்தைய மழைத் துவங்கும்போது களைகளின் விதைகளை முளைக்கவிடவும், களைகள் முளைத்து மண் பச்சையாகும்போது மீண்டும் உழவுசெய்வதினால் 60 சதவீதம் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. முந்தைய பயிரின் கழிவுகளை சேமித்து மூடாக்காக பயன்படுத்த ஒரு ஓரத்தில் குவித்து வையுங்கள் அல்லது ரோட்டவேட்டர் ஓட்டி பயிர்க்கழிவுகளை சிறு துண்டுகளாக வெட்டி மண்ணுடன் கலந்துவிடுங்கள்.

ஏக்கருக்கு 400 கிலோ கனஜீவாமிர்தம் வயல் முழுவதும் சரிசமமாக தூவி கடைசி உழவு செய்யவும். கடைசி உழவு சரிவுக்குக்கு குறுக்காக இருக்க வேண்டும். அதன் பிறகு குறுக்காக 4.5 அடி அகலம் விட்டும், நெடுக்காக 3 அடி அகலம் விட்டு கோடுகள் போடவும். வாழை வரிசைகளுக்கு இடையே சரிவுக்கு எதிராக வாய்க்கால் (வடிகால்) இருக்க வேண்டும். இது 2 அடி அகலமும், 1.5 அடி ஆழமும் இருக்க வேண்டும். மூடாக்கு செய்வதற்கு தேவையான சருகுகள் இருந்தால் ஒரு வாய்க்கால் விட்டு ஒரு வாய்க்காலில் மூடாக்கு இடவும். ஆரம்ப காலத்தில் இந்த மூடாக்கு மிக அவசியம்.

நடவு

வாழை விதைக் கிழங்கிற்கு ஏற்ப 1.5 அடி நீள அகல ஆழத்தில் குழி எடுக்கவும், கிழங்குகள் சிறியதாக இருந்ததால் 9 அங்குல நீள அகல ஆழமுள்ள குழியே போதுமானது. பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நடவு செய்யவும். துவரை அல்லது மக்காச்சோள அல்லது கம்பு விதைகளை பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்து ஊன்றவும். படத்தில் காட்டியபடி வாழை மற்றும் துவரைக்கு நடுவில் மிளகாய் நாற்று நடவு செய்யவும், மிளகாயின் இருபுறமும் துலுக்க சாமந்தி நடவேண்டும்.

புள்ளிகள் இருக்கும் இடத்தில் பயறு வகைகளை நடவு செய்யவும். தட்டை, பச்சைபயறு, உளுந்து, கேழ்வரகு போன்ற விதைகள் மழைக்காலத்தில் விதைக்க உகந்தவை. குளிர்காலத்தில் கொண்டைக்கடலை, பட்டாணி கொத்தமல்லி போன்றவை நடுவதற்கு உகந்தவை. வடிகாலின் இரண்டு பக்கங்களிலும் நரிப்பயறு, கொள்ளு, வெள்ளரி, தர்பூசணி போன்ற பருவத்திற்கேற்ற கொடிவகைகளை விதைக்கவும். அட்டவணைப்படி ஜீவாமிர்தம் பாசன நீரிலும், ஜீவாமிர்தம் தெளிப்பும் செய்யவும்.

வாழை மறுதாம்பு விடுதல்

வாழையில் பூ வருவதற்கு முன்னர் வளரக்கூடிய பக்க கன்றுகளை வெட்டிவிட்டு மூடாக்காக போட வேண்டும். வாழை பூ விட்டபின் எந்த திசையில் முதல் குலை வருகிறதோ அந்த திசைகுக்கு எதிர்புறமுள்ள ஒரே ஒரு கன்றை மட்டும் மறுதாம்பாக வளர விடவேண்டும், மற்ற பக்க கன்றுகளை வெட்டி மூடாக்காக போடவும்.

வாழை முற்றி குலையை வெட்டியபின் வாழை மரத்தை வெட்ட வேண்டாம், அதை அப்படியே விட்டுவிடுங்கள், அது மறுதாம்பு கன்றுக்கு சிறந்த ஊட்டசத்தை அளிக்கும் தாயாகும். குலை வெட்டியபின் பச்சை அல்லது காய்ந்த இலைகளை வெட்டி மூடாக்குங்கள். பக்கக்கன்று வளர வளர தாய் தண்டின் பருமன் குறையத்துவங்கும். பக்க கன்றில் பூவரும் சமயத்தில் தாய் மரத்தில் இருந்து உணவு முழுவதும் சேய் கன்றிற்கு கொடுக்கப்பட்டபின்னர் தாய்மரம் காய்ந்து விழுந்துவிடும்.

இரண்டாவது முறையாக (இரண்டாவது கட்டை) மறுதாம்பு விடும் போது இரண்டு பக்கக் கன்றுகளை வளர விடுகிறோம். முதல் மறுதாம்பின் குலை எந்த திசையில் வந்திருந்ததோ அதற்கு வலது மற்றும் இடது பக்கமாக பக்கத்திற்கு ஒரு கன்று என இரண்டு கன்றுகளை விடவேண்டும். தென் திசையில் குலை இருந்தால் கிழக்கு மற்றும் மேற்கு பக்கமாக இரண்டு கன்றுகளை விடவேண்டும்.

தாய்மரத்தின் தண்டை வெட்ட வேண்டாம்

தற்போதும் குலை வெட்டியபின் தண்டை வெட்டவேண்டாம். பச்சை மற்றும் காய்ந்த இலைகளை மட்டும் வெட்டி மூடாக்காக்க வேண்டும். அடுத்த ஆண்டில் எதிர்திசையில் பக்கக் கன்றுகளை விடவேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பக்கம் கன்று இருந்திருந்தால் அடுத்த வருடம் வடக்கு தெற்கு என இரண்டு கன்றுகளை வளர விடவேண்டும். இரு கன்றுகள் விடுவது லாபத்தை இரட்டிப்பாக்கும் நுட்பமாகும்.

வாழை அறுவடைக்கு முன்பே வாழை மரத்தில் இருந்து இலைகளை வெட்டக்கூடாது. முதிர்த்து பழுத்த இலைகள் அதன் சத்துக்களை துளிர்த்து வரும் இளம் இலைகளுக்கு கொடுக்கிறது. மேலும் முதிர்ந்த இலைகளில் இருந்து பொட்டாஷ் போன்ற நுண்சத்துக்கள் வேர்களில் சேமிக்கப் படுகிறது. வாழைத் தண்டில் 90 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது, காய்ந்து பழுத்த இலைகள் தண்டை மூடி அதிக வெப்பம் மற்றம் சூடான காற்றில் இருந்து தண்டை பாதுகாக்கிறது.

 

இலைப் பரப்பும் உணவு உற்பத்தியும்

சாதகமற்ற சூழ்நிலைகளின் போது வேர்களில் இருந்து இலைக்கு சத்துக்கள் கிடைக்காது அப்போது முதிர்ந்த இலைகளில் இருந்து காப்பர், ஜீங்க், மெக்னிசியம், கால்சியம், போரான் போன்ற நுண்சத்துக்கள் இளம் இலைகளுக்கு கடத்தப்படுகிறது. நாம் காய்ந்த இலைகளை குலையை வெட்டுவதற்கு முன்பே வெட்டினால் இலைகளுக்கு நுண்ணூட்ட பற்றாக்குறை ஏற்படும். முதிர்ந்த இலைகள் நுண்ணூட்டங்களின் வங்கிகள்.

ஒரு சதுர அடி பரப்பளவுள்ள பச்சை இலை 4.5 கிராம் உணவை உற்பத்தி செய்கிறது, இந்த 4.5 கிராம் உணவில் நமக்கு 2.25 கிராம் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. எனவே குலையை வெட்டும் முன் பச்சை வாழை இலைகளை வெட்டினால் சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளும் பச்சை இலை பரப்பு குறைவதால் விளைச்சலும் குறையும். எனவே குலைவிடும் முன் இலைகளை வெட்டக்கூடாது.

ரசாயன முறைப்படி விளைந்த வாழையை அறுவடை செய்தபின் அதிக நாட்கள் சேமிக்க முடியாது, பழங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போதும் அதிக சேதம் ஏற்படும், இயற்கை முறையில் விளையும் பழங்கள் அதிக நாட்கள் தாங்கும். ரசாயன முறையில் விளைந்த வாழையை விரைவாக பழுக்கவைக்க கார்பைடு கல் பயன்படுத்துவார்கள், ஆனால் இயற்கையாக விளைந்த வாழை தானாகவே பழுக்கும். வாழைப்பழம் திரட்சியாக வளர்ந்து குலையின் அடிப்பக்கமிருக்கும் பழம் மஞ்சள் நிறமாக மாறும்போது வழைக்குலையை அறுப்பதற்கான சிறந்த நேரமாகும். வாழைத் தோட்டத்தில் மூடாக்கு எந்த அளவிற்கு மக்கியுள்ளதோ, அந்த அளவுக்கு தண்டின் பருமன் அதிகமாகும், குலையும் பெரிதாகும்.

சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்