கொசு விரட்ட பச்சைக் கற்பூரம் Natural mosquito repellent
ஜீரோ வாட்ஸ் பல்ப்பை எரிய வைத்து அதன் மீது சிறிய உலோக தட்டின் மேல் பச்சைக் கற்பூரத்தை வைத்துவிட வேண்டும். கற்பூரம் இளகி வரும் வாசம்.கொசுவை விரட்டி விடும்
”சுதந்திரமாக வெட்டவெளிகளில் சுற்றிக்கொண்டிருந்த பூச்சிகளை எல்லாம், வீட்டுக்குள் வரவழைத்த பெருமை நம்மையே சாரும். ஆம், நவீனமயம் என்கிற பெயரில் வாழ்வதற்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவிட்டோம். அப்படி செய்துவிட்டு, இப்போது பூச்சிவிரட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறோம்” என்று சிரித்தபடியே தொடங்கினார்… தமிழக அரசின் வேளாண்மை அலுவலர் நீ.செல்வம். இவர், கோவில்பட்டியில் இருக்கும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இயற்கையாக கொசுவை விரட்ட பல முறைகள் உள்ளன.
”உதாரணமாக…
கதவு, ஜன்னல்களை மூடி வைத்தல்
கொசுவானது அதிகாலை மற்றும் சூரியன் மங்கும் மாலை வேளைகள்தான் அதிகமாக வீட்டுக்குள் படையெடுக்கும். அந்த நேரங்களில் வீட்டுக் கதவு, ஜன்னல்களை மூடி வைத்தாலே போதும்… பாதி கொசு நடமாட்டம் குறைந்து போகும்.
பச்சைக் கற்பூரம்
கொசுவை விரட்ட, ஜீரோ வாட்ஸ் பல்ப்பை எரிய வைத்து (கொசுவிரட்டி மேட் பயன்படுத்துவதற்காக தரப்படும் மின்சாதன கருவியையும் பயன்படுத்தலாம்), அதன் மீது சிறிய உலோக தட்டு ஒன்றை வைத்து, அதில் பச்சைக் கற்பூரத்தை வைத்துவிட வேண்டும். பல்பின் உஷ்ணம் காரணமாக கற்பூரம் இளகி அதில் இருந்து வெளிப்படும் வாசம்… கொசுவை அறவே விரட்டி விடும்.
வேப்பிலை
காய்ந்த வேப்பிலையை சிறிது கொளுத்தி, பின்பு அணைத்து, அந்தப் புகையை வீட்டில் பரவவிட்டால், அந்த வாசனைக்கும் கொசு அண்டாது.
வெள்ளைப்பூண்டு சாறு
நசுக்கிய வெள்ளைப்பூண்டு சாறு ஒரு பங்கு, தண்ணீர் ஐந்து பங்கு என கலந்து, வீட்டின் அறைகளில் ஸ்பிரே செய்ய, கொசு ஓடிவிடும்”
நீ.செல்வம்