விவசாய பழமொழிகளும் விளக்கங்களும் :
பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம். விவசாய பழமொழிகளும் அவற்றின் விளக்கங்களும் கீழே காணலாம்
ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்
நமது முன்னோர்கள் தமது அனுபவத்தால் எப்படி நிலத்தில் உழவு செய்ய வேண்டும் என்பதை,
*‘‘ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்’’*
என்று பழமொழியாகக் கூறுகின்றனர். நிலத்தில் அகலமாக உழுதால் பெய்யும் மழைநீர் நிலத்தில் தேங்கும், மண்ணரிப்பும், நிலத்தில் மேல் உள்ள சத்துக்களும் அடித்துச் செல்லப்படமாட்டாது என்ற உழவின் தொழில் நுட்பத்தை இப்பழமொழியில் எடுத்துரைக்கின்றனர். தற்போது வேளாண் விஞ்ஞானிகள் சரிவுக்குக் குறுக்கே உழவேண்டும் என்று கூறுவது அகல உழுவதையே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும்
மேலும் நிலத்தில் மாட்டை ஏரில் பூட்டி உழும்போது ஒன்றன் பின் ஒன்றாகவே உழுதல் வேண்டும். அதனைவிட்டுவிட்டு நான்கு ஏர்கள் உழுகின்றதெனில் வரிசையாக உழுதல் கூடாது என்ற முறைமையை,
*‘‘முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும்’’*
என்ற பழமொழி விளக்குகின்றது.
*‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’*
நெல், கரும்பு, சோளம் என ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உழுதல் வேண்டும். எள் விதைப்பதற்கு முன்னர் நிலத்தை ஏழு முறை உழுதல் வேண்டும். அப்போதுதான் எள் நன்கு முளைத்து வளர்ந்து பலனளிக்கும். இல்லை எனில் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறையும். இத்தொழில் நுட்பக் கருத்தினை,
*‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’*
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
பருவத்தே பயிர் செய்
காலத்தோடு, காலத்திற்கேற்ற பயிர்களைப் பயிரிட வேண்டும். அவ்வாறு பயிரிட்டால் தான் நன்கு விளைச்சலைப் பெருக்க இயலும். பருவம் தவறி விதைத்தால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியாது. இதனை,
*‘‘பருவத்தே பயிர் செய்’’*
*”ஆடிப்பட்டம் தேடி விதை’’*
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. ஆடி மாதத்தில் விதைப்பதே விதைப்பதற்குச் சரியான காலகட்டமாகும்.
உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்
மேலும், விவசாயம் செய்கின்றபோது விவசாயம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது பலனை மட்டும் எதிரபார்த்தல் கூடாது. இக்கருத்தை,
*’‘உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்’’*
அனைவரும் வயலில் பயிரிடுகின்றபோது நாமும் பயிரிடவேண்டும். அப்போதுதான் அது விளையும். இல்லையெனில் அஃது பாழ்பட்டுப் போய்விடும். மேலும் உழவுத் தொழிலில் கவனம் செலுத்துதல் வேண்டும் என்பதையும் இப்பழமொழி நன்கு விளக்குகின்றது.
நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட
ஒவ்வொரு பயிரையும் அதற்குரிய தொழில் நுட்பத்திற்குத் தகுந்தாற்போல் நடவு செய்தால் அப்பயிர் நன்கு விளைச்சலைத் தரும். அவ்வாறு செய்யவில்லையெனில் விளைச்சல் குறையும். பயிர் நடவு செய்யும் இத்தொழில் நுட்பத்தை,
*’‘நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட
*”தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட’’*
எனத் அனுபவ மொழியாகக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் ஒரு நண்டு போகும் அளவிற்கு இடைவெளிவிட்டு நடவேண்டும் என்று இப்பழமொழி குறிப்பிடுகின்றது. இதனை இன்று ஒரு மிதிவண்டியின் டயருக்குள் 17 குத்துக்கள் இருப்பதைப் போல் நெற்பயிரை நடவு செய்தல் வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் இன்று இதனை செம்மை நெல் சாகுபடி என்றும் குறிப்பிடுகின்றனர்.
வாழைக் கன்றை நடவு செய்கின்றபோது ஒரு மாட்டு வண்டி போகுமளவு இடைவெளிவிட்டு நட வேண்டும். தென்னைக்கு ஒரு தேர் ஓடுமளவிற்கு இடைவெளி விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பயிரையும் எவ்வாறு நட்டால் பயிர் அதிக விளைச்சலைத் தரும் என்பதை பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர் நமக்குக் கூறியுள்ளனர்.
வலுத்தவனுக்கு வாழை; இளைச்சவனுக்கு எள்ளு
யார் யார் எத்தகைய பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும் என்பதையும் பழமொழிகளில் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்ப் பாசன வசதி, பிற செலவுகள் செய்வதற்குரிய பணம் ஆகியவற் வாய்ப்பிருப்போர் வாழையைப் பயிரிடலாம். நீர் வசதி பிறவோ இல்லாதவர்கள் எள்ளைப் பயிரிட்டுப் பயன் பெறலாம் இதனை,
*’‘வலுத்தவனுக்கு வாழை;* *இளைச்சவனுக்கு எள்ளு’’*
என்ற பழமொழி மொழிகின்றது. வாழை பயிரிடுவோர் காற்றினால் மரம் சாய்ந்து விடுகின்றபோது அதனால் பாதிப்படையாமல் அவ்விழப்பைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி இருக்க வேண்டும். மேலும், எள்ளிற்கு அதிக அளவு நீர் தேவைப்படாது. சிறிதளவே நீர் தேவைப்படும் காற்றடித்தாலும் எள் செடியானது பாதிப்படையாது. இதனால் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படாது என்பதை இப்பழமொழி குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
எருப்போட்டவன் காடுதான் விளையும்
பயிர் நடவு செய்துவிட்டால் மட்டும் பயிர் விளைச்சலைத் தராது. அதற்குத் தேவையான உரமிடுவது அவசியமானதாகும். நமது முன்னோர்கள் இயற்கை உரத்தையே பயன்படுத்தினர். செயற்கை உரத்தைப் பயன்படுத்தினால் உணவுப்பொருளில் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனை உண்ணும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் பெரும்பாலும் இயற்கை சார்ந்த வேளாண்மையையே அதிகம் செய்தனர். தற்போது போல் அதிகமாக செயற்கை உரத்தைப் பயன்படுத்தவில்லை. தொழு எரு போட்டு பயிர்களின் விளைச்சலைப் பெருக்கினர். இன்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறிப்பிடுவது போன்று இயற்கை சார்ந்த உரங்களை அதிகம் பயன்படுத்தினர்.
எருப் போடாது, மற்றவருடைய வயலைப் பார்த்து பொறாமைப் படுவதால் எதுவும் விளையாது. மேலும் நடமாடும் வங்கியான ஆட்டின் புழுக்கை அன்றைக்கே உரமாகப் பயன்படும் மாட்டுச் சாணம் மட்க வேண்டும். அப்போதுதான் அது நன்கு பயனைத் தரும். மேலும் மாட்டிலிருந்து பெறப்படும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை ‘பஞ்சகவ்வியம்’ என்பர். இத்தகைய இயற்கையான உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை,
*‘எருப்போட்டவன் காடுதான் விளையும்;*
*குண்டி காய்ஞ்சவன் காடு விளையாது’’*
(குண்டி காய்ஞ்சவன்-பொறாமைப்படுபவன்)
*‘‘ஆட்டுப் புழுக்கை அன்றைக்கே!*
*மாட்டுச் சாணம் மக்குனாத்தான்!’’*
என்ற பழமொழிகள் விளக்குகின்றன.
முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும்
ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு முறையில் வளர்க்கவேண்டும். அவ்வாறு வளர்த்தால் அம்மரம் நமக்கு அதிகம் பலனைத் தரும். மர வளர்ப்பு முறையில் கவ்வாத்து செய்தல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முருங்கை, கொய்யா போன்ற மரங்களை ஆண்டிற்கு ஒரு முறை கவ்வாத்து செய்தால் புதிய கிளைகள் வந்து அதிக பலன்களைத் தரும். இத்தகைய கவ்வாத்து முறையை,
*‘முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும்*
*பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்’’*
*‘‘ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்*
*அடிச்சு வளர்க்காத பிள்ளையும் உருப்படாது’’*
என்ற பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவரைக் கொடியும் பெண்ணும் ஒண்ணு
ஒவ்வொரு செடியும், கொடியும் வெவ்வேறு நிலைகளில் வளரும் தன்மை கொண்டன. சில தரையிலும், சில மேலேயும் படரும் தன்மை கொண்டன. அவரை வளராதது போன்று தெரிந்தாலும், விரைவாக வளரும் தன்மை கொண்டது. அதுபோன்று பீர்க்கங்கொடி வேகமாக வளரும் தன்மை கொண்டது. இவ்விரண்டு கொடியையும் பெண், ஆண் குழந்தைகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடுவர். இதனை,
*‘‘அவரைக் கொடியும் பெண்ணும் ஒண்ணு*
*பீர்க்கங்கொடியும் பையனும் ஒண்ணு’’*
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இவ்வாறு இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த நமது முன்னோர்கள் தமது அனுபவ அறிவால் பெற்ற கருத்துக்களை பழமொழிகள் வாயிலாகத் தொழில் நுட்பக் கருத்துக்களை உணர்த்தியுள்ளனர். இவை நமக்கு நலமுடனும், வளமுடனும் வாழ்வதற்கு வகைசெய்பவையாக அமைந்துள்ளன.
மேலும் சில விவசாய பழமொழிகளும் விளக்கங்களும் …..
இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையா?
வளர்கின்ற குழந்தையையும், வளர்கின்ற பயிரையும் ஒப்பிடும் முறையை வேளாண் பழமொழிகளில் காணலாம்.
*இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையா?”*
என்று கேட்டுச் சமாதனம் அடைகின்ற நிலையை இப்பழமொழி மூலம் அறியலாம்.
இடுகின்ற விதைகளெல்லாம் நல்ல பயிராக வளர்ந்து பயன்தருவதில்லை. அதுபோல் தான் பெற்ற பிள்ளைகளெல்லாம் பெற்றோர் கடமையைச் செய்வார்களென்ற நிலையைக் காண்பது அரிது என்பதே இதன் பொருளாகும்.
மேலும்,
*காட்டு வேளாண்மையையும்
வயிற்றுப் பிள்ளையையும்
எப்படி மறைக்கிறது*
என்ற பழமொழி மூலம் சமுதாய மக்களிடம் சாதாரணமாக இவ்வொப்பீடு நடைமுறையில் வழங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது.
சிறிய வயதில் அனுபவமற்ற முறையில் பிள்ளைகள் செய்யும் காரியம் முழுப்பயனைத் தருவதில்லை.
*“சிறு பிள்ளை இட்ட வெள்ளாமை
வீடு வந்து சேராது”*
என்ற பழமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது.
இஞ்சி இலாபம் மஞ்சளிலே
வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுபவர்க்கு இலாபம், நஷ்டம் ஏற்படுவது இயல்பு. சோர்ந்து போகாமல் மாற்றுப் பயிரை விளைவித்து இலாபம் பெறும் வழிவகையை,
“இஞ்சி இலாபம் மஞ்சளிலே”*
என்ற பழமொழி மூலம் அறிய முடிகின்றது.
உழுதவன் கணக்குப் பார்த்தால்
ஓயாமல் உழைத்தாலும் பொருள் வரவு குறைவாகவே இருக்கும் நிலையை,
“உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கால் தடியுங்கூட மிஞ்சாது”*
என்ற பழமொழி எடுத்துக் காட்டுகின்றது.
கூளை குடியைக் கெடுக்கும்
வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கருவிகள் சரியாக இருக்குமானால் விவசாயிகளுக்குத் தகுந்த பயனைத் தரும். இல்லையென்றால் நிலம் வீனாகிவிடும் என்ற நடைமுறை உண்மையை,
“கூளை குடியைக் கெடுக்கும்
குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்”
என்ற பழமொழி மூலம் அறியலாம்.
சீரைத் தேடின் ஏரைத் தேடு
நிலத்தைப் பாதுகாக்கும் முறையையும் விதைகளையிட்டுப் பயிர் விளைவிக்கும் முறையையும் மறைத்து வைக்காமல் எல்லோரும் பயன்பெரும் வகையில் கிராம விவசாயிகள் எடுத்து கூறினர்.
“சிரைத் தேடின் ஏரைத் தேடு”
“களை பிடுங்காத பயிர் கால் பயிர்”*
*அடர விதைத்துச் சிதறப் பிடுங்கு*
“உழுகிற நாளில் ஊருக்குப் போனால்
அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை”
ஆகிய பழமொழிகள் வேளாண்மைத் தொழில் நுணுக்கங்களை வெளிப்படுத்துகின்றன.
கிராமப்புற மனிதனின் எல்லாச் செயல்களிலும் அவன் பெறும் அனுபவங்களே அவனுடைய வாழ்க்கையைச் சீராக்க வழிவகை செய்கிறது. மனித வாழ்வோடு பிரிக்கவொண்ணா நிலையைப் பழமொழிகள் பெற்றுள்ளன.
கொங்கு நாட்டு வேளாண்மை தொடர்பான பழமொழிகளையும், அப்பழமொழிகள் கிராமப்புற விவசாயிகள் வாழ்வில் பெற்றுள்ள சிறப்பிடத்தையும் ஆராய்ந்ததன் மூலம் கொங்குநாட்டு மக்களின் வாழ்க்கை முறையினைச் சிறப்பாக அறிய முடிந்தது உண்மை.