அசோலா ஓர் அற்புதமான தீவனம்

அசோலா ஓர் அற்புதமான தீவனம் azolla-pinnata
Agriwiki.in- Learn Share Collaborate
அசோலா ஓர் அற்புதமான தீவனம் ..!!!

கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்கக் கூடிய விஷயம் கால்நடைக்கான தீவனம்தான்.

பசுமாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என அனைத்து வகை கால்நடை வளர்ப்புத் தொழில் லாபம் அடைய வேண்டுமென்றால், தீவனத்திற்கான செலவினை குறைக்க வேண்டும்.

மாற்றுத் தீவனங்கள் குறைவான விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மட்டுமே தீவனத்திற்கான செலவினைக் குறைக்க இயலும்.

இந்த மாற்றுவகை தீவனத்தில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதும் ஆன அசோலா தண்ணீரில் மிதக்கக் கூடிய தாவரங்களில் பிரதான இடத்தை வகிக்கின்றது. மிக எளிதாக உற்பத்தி செய்து பயன்படுத்தக்கூடிய இந்த அசோலா தற்போது பல்வேறு தொழில்நுட்ப அறிவுமிக்க கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்பட்டு கால்நடை தீவனத்துடன் உணவில் சேர்க்கப்படுகின்றது.

தற்போது கால்நடை தீவனத்திற்கானது எனப்படும் அசோலா ஆரம்பத்தில் நெற்பயிருக்கான உரமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தழைச்சத்து நெற்பயிரின் வளர்ச்சிக்கு இன்றியமையாது. இரசாயன உரங்களினால் கிடைத்த தழைச்சத்தை, விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கக் கூடியதும், சூழலுக்கு மாசு விளைவிக்கக் கூடிய ரசாயன உரத்தின் தவறான பயன்பாட்டை மட்டுப்படுத்த, இயற்கையிலேயே நெல் வயல்களில் வளரக்கூடிய நுண்ணுயிர்கள் மூலமும், சில தாவரங்கள் மூலமும் கிடைக்கச் செய்ய அதிக அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அசோலா (Azolla Pinnala) எனும் நீரில் மிதந்து வளரும் தாவரத்தை நெல் வயல்களிலேயே நேரடியாக வளர்க்கலாம் என கண்டறியப்பட்டது.

அசோலா பெரணி (Floating Water Fern) என்ற தாவர இனத்தை சேர்ந்தது நெல் வயல்களில் வளரக்கூடிய நீர் தாவரம். இது மிகமிகச் சிறிய இலைகளையும், மெல்லிய வேர்களையும் கொண்டது. அசோலா நெல் வயல்களில் இருக்கும் தண்ணீரில் மிதந்து காற்றில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நெற்பயிருக்கு கொடுக்கின்றது.

பெரும்பாலும் நல்ல பச்சை நிறத்திலும், அபூர்வமாக லேசான பழுப்பு நிறத்தில் காணப்படும் அசோலாவின் இலைகளானது முக்கோன வடிவத்திலிருந்து பல கோண வடிவம் வரையும் இருக்கும். இந்த அசோலாவின் இலைகள் 1 செமீ முதல் 2.5 செமீ வரை விட்டமுடையவை. இதன் வேர்கள் 2 செமீ முதல் 10 செமீ வரையில் நீளமுடையவை. இது சிறு இலைகளை உடைய மிதக்கும் தண்டைக் கொண்டது.

தண்டின் இரண்டு பக்கங்களிலும் ஒன்றன் மீது ஒன்றாக இலைகள் மாற்று வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இலையும் மேற்புறம், கீழ்புறம் என இரண்டு பாகங்களை உடையது. இலைகளின் மேல்புறம் தழைச்சத்தை சேகரித்து பசுமையாக இருக்கின்றது. கீழ்ப்புறம் பச்சையம் அற்றும் நீரில் அமிழ்ந்தும் காணப்படுகின்றது. இலையில் மேற்புறத்தின் உட்பகுதியில்தான் தழைச்சத்தை கிரகிக்கும் அனாபினா அசோலே (Analaena Azollae) எனும் நீலப் பச்சைப்பாசி காணப்படுகின்றது. இது தழைச்சத்தை கிரகித்து அசோலாவிற்கு அளிக்கிறது.

அசோலா அதிக அலைகளில்லாத, அதிக நீரோட்ட வேகம் இல்லாத அமைதியான நீர் நிலைகளில் வளரக் கூடியவை. குளங்கள், சிறு ஓடைகள், நெல் வயல்களில் வளரக்கூடிய அசோலா மிதக்கும் வகைத் தாவரம்தான் என்ற போதிலும் வயலில் சேற்றுடன் கலந்த மண் பரப்பிலும் வளரும் தன்மையுடையது. அசோலா பிலிக்குலாய்டஸ் எனும் ரகம் 10-15 செமீ ஆழமாக வேர்விட்டு மண்ணில் சத்துக்களை உறிஞ்சிக் கொடுக்கும்.

அசோலா வகைகள்:

அசோலாவில் பல வகைகள் உள்ளன.

அசோலா பின்னேட்டா
அசோலா மெக்சிகானா
அசோலா பிலிக்குலாய்டஸ்
அசோலா கரோலினியானா
அசோலா மைக்ரோபில்லா
அசோலா நைலோட்டிகா.

தமிழகத்தில் மிகப் பரவலாக காணப்படுவது அசோலா பின்னேட்டா ரகம்தான். இந்த ரகம் அதிக தழைச்சத்தைக் கிரகித்து அதிக வெப்பநிலையைத் தாங்கி நன்கு வளரும் இயல்புடையது.

அசோலாவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன:

21 – 24% புரதச்சத்து (crude protein)
9 – 21% நார்ச்சத்து (crude fibre)
2.5 – 3% கொழுப்பு (ஈதர் எக்ஸ்ட்ராக்ட் – ether extract)
10 – 12% சாம்பல் (Ash)
1.96 – 5.30% தழைச்சத்து N
0.16 – 1.59% மணிச்சத்து P
0.31 – 5.9% சாம்பல் சத்து K
0.45 – 1.70% சுண்ணாம்புச் சத்து
0.22 – 0.73% கந்தகச் சத்து
0.22 – 0.66% மெக்னீசியம்
0.04 – 0.59% இரும்புச் சத்து

அசோலா வளர்வது வருடம் முழுவதும் இயல்பாக நடக்கக்கூடிய செயல் என்றாலும் அதற்கான கீழ்கண்ட சூழ்நிலை நாம் உண்டாக்க வேண்டும்.

ஒளி அல்லது வெளிச்சம்:
**************************
1. பச்சையம் தயாரிப்பதற்கு சூரிய ஒளி தேவை என்றாலும் நேரடி சூரியக் கதிர் பாயாமல் நிழல் வலைக்குள் ஊடுறுவிச் செல்லும் குறைவான வெளிச்சத்தில் நன்கு வளரும்.

2. பொதுவாக அசோலாவானது 25-50% வெளிச்சத்தில் நன்கு வளரும்.

3. மிக அதிக சூரிய ஒளி அதனுடைய மென்மையான பகுதிக்கு சேதமுண்டாக்கும்.

4. மிக அதிக சூரிய ஒளியினால் பாதிக்கப்படும் அசோலா பழுப்பு, சிவப்பு நிறமாக மாறி இறந்துவிடும்.

5. அதேபோல மிகவும் இருட்டு இருந்து போதுமான சூரிய வெளிச்சமில்லையென்றாலும் வளர்ச்சி தடைபட்டு குறையும்.

தண்ணீர்:
***********
1. அசோலா வளர்ப்பிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தண்ணீரிலில்லாமல் அசோலாவை வளர்க்க இயலாது. எப்போதும் தண்ணீரின் அளவை நிலையாக வைத்திருக்க வேண்டும்.

2. 4 அங்குல உயரத்தில் தண்ணீர் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. தண்ணீரின் மட்டம் குறைவாக இருந்தால் வேர்கள் குளத்தினை தொட்டால் அசோலாவில் வளர்ச்சி குன்றும்.

வெப்ப அளவு:
***************
1. 20 c – 30 c அளவு வெப்பநிலை மட்டுமே அசோலாவிற்கு ஏற்றது.

2. 37 c க்கு மேல் வெப்பத்தின் அளவு அதிகரித்தால் அசோலாவின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும்.

3. 20 c க்கும் குறைவான வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

காற்றில் ஈரப்பதம்:

1. காற்றில் ஈரப்பதமானது 85 – 90% இருக்க வேண்டும்.

2. காற்றில் ஈரப்பதமானது 60% க்கும் கீழ் வந்துவிட்டால் அசோலா காய்ந்துவிடும்.

தண்ணீரின் தரம் – கார அமில நிலை:

1. தண்ணீரின் கார அமில நிலை pH 5 -7 வரை இருக்க வேண்டும்.

2. உப்பு நீரில் வளராது. அதிக உப்பு இருந்தால் வளர்ச்சி தடைபடும்.

3. அதிகப்படியான அமிலத்தன்மையும், அதிகப்படியான காரத்தன்மையுள்ள தண்ணீரில் அசோலா வளர்க்க இயலாது.

காற்று:

1. வேகமாக வீசும் காற்று மறைமுகமாக அசோலா வளர்ச்சிக்கு இடையூறு செய்கின்றது. காற்று வீசும்போது மிதக்கும் அசோலா எதிர்திசையில் சென்று மொத்தமாக ஒதுங்கி அங்கு நெருக்கம் உண்டாகிறது. அதிக நெருக்கடியால் வளர்ச்சி குறைகின்றது. இறப்பும் நேருகின்றது.

2. அதிக வேகமான காற்று அசோலாவில் சிதைவுகளை ஏற்படுத்துகின்றது.

சத்துகள்:

1. அசோலா தனக்குத் தேவையான சத்துக்களை தண்ணீரில் இருந்து எடுத்துக் கொள்கின்றது. அசோலா வளர்வதற்கு அனைத்து வகையான சத்துக்களும் தேவைப்பட்டாலும் பாஸ்பரஸ் எனும் மணிச்சத்து அதிக அளவில் தேவைப்படுகின்றது.

2. தண்ணீரில் கரையும் பாஸ்பரஸ் அடிக்கடி கொடுப்பதன் மூலம் அசோலாவின் வளர்ச்சி சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தண்ணீரில் 20 ppm எனும் அளவிற்கு மணிச்சத்து (பாஸ்பரஸ்) எப்போதும் இருக்க வேண்டும்.

3. நுண் ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும் துரிதப்படுத்தும்.
கால்நடைகளுக்குத் தீவனமாக கொடுக்கக் கூடிய இந்த அசோலாவை நமது தேவைக்கு எவ்வாறு வளர்ப்பது என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.

குறைந்த ஆழம் உள்ள தேங்கிய தண்ணீரே அசோலா வளர்ப்பதற்கு ஏற்றது. நமக்கு அசோலா தேவைப்படும் இடத்திற்கு அருகிலும், அடிக்கடிச் சென்று பார்வையிட வசதியான இடத்திலும், எளிதில் தண்ணீர் கிடைக்கின்ற இடத்தின் அருகாமையிலும் அசோலா வளர்க்க ஏற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

நிழலான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அல்லது நிழல் வலையைப் பயன்படுத்தி செயற்கையாக நிழல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் ஆவியாவது குறைந்தால் அசோலாவின் வளர்ச்சி நன்கு இருக்கும். தரைப்பகுதி கூரான கற்கள், முள், வேர் போன்றவைகள் இல்லாமல் நன்கு சமப்படுத்தப்பட வேண்டும். இவைகள் இருந்தால் தண்ணீரை நிறுத்த விரிக்கும் பிளாஸ்டிக் பாய் கிழிந்து தண்ணீர் கசிந்து வீணாகும்.

அசோலா வளர்ப்புத் தொட்டி கால் நடைகளின் எண்ணிக்கை தற்போது கிடைக்கும் திட, சத்துணவு, இடம் தண்ணீர் போன்றவைகளின் இருப்பு போன்றவற்றை அனுசரித்து மாறக்கூடியது.

தினசரி 2 கிலோ அசோலா உற்பத்தி செய்ய 6 அடி X 42 அடி அசோலா வளர்ப்புத் தொட்டி போதுமானது. நாம் தேர்வு செய்த நிழலான இடத்தை நன்கு சமன் செய்து கொள்ள வேண்டும்.

இடம் மிகச் சரியாக சமமாக இருப்பது மிக அவசியம். மட்டமான மரப்பலகையை வைத்து பொடி மணலை தூவி இடத்தை சமப்படுத்தி கொள்ள வேண்டும். 6X4 அளவுள்ள சற்று தடிமனான ப்ளாஸ்டிக் பாயை விரித்து அதனைச் சுற்றிலும் இரண்டு வரிசை உயரம் செங்கலை அடுக்கி, தண்ணீர் தேங்கி நிற்கும் அமைப்பை உண்டாக்க வேண்டும்.

இந்த பிளாஸ்டிக் தாளில் எந்தத் துளையோ, கிழிசலோ இல்லாமல் இருப்பது மிக முக்கியம். நிலத்தை சமப்படுத்தியபின் அதன்மேல் பழைய சாக்கு, பிளாஸ்டிக் சாக்கு போன்றவற்றைகளை பரப்பி அதன்மேல் விரித்தால் அருகிலுள்ள மரங்களின் வேர்களால் உண்டாகும் துளைகள் மட்டுப்படுத்தப்படும்.

இந்த அமைப்பில் 10 செமீ உயரத்திற்கு தண்ணீர் நிரப்ப வேண்டும். அத்துடன் மூன்று கூடை அளவிற்கு குளத்து வண்டல் மண்ணைப் பொடி செய்து தூவி, அத்துடன் போர் போடும்போது கிடைகின்ற கல்மாவை 2 கிலோ அளவில் தூவ வேண்டும். போர் மண் கிடைக்கவில்லையென்றால் 50 கிராம் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் தூவலாம். அத்துடன் 2 கிலோ பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்து அதிலுள்ள அமோனியா மீத்தேனை வெளியேற்ற அதனையும் கலக்க வேண்டும்.

இப்போது அசோலா வளர்ப்பதற்கான தொட்டி தயார். இந்த தொட்டியில் 1 கிலோ அளவிற்கு விதை அசோலாவைத் தூவ வேண்டும்.

விதை அசோலா என்பது இன்றுமொரு அசோலா வளர்ப்பவரிடமிருந்து வாங்கி வரும் பச்சை, புதிய அசோலாதான்.

இந்த அசோலா தொட்டியினுள் வெளி இலைகள் விழுந்துவிடாமலும், புழுதிக்காற்றினால் தூசு படியாமலிருக்கவும், நிழலின் அளவை சீராக்கவும், கால்நடைகள் ஆடுமாடு, கோழி, நாய் போன்றவை உள்ளே புகுந்து மிதித்து விடாமலிருக்கும்.

நிழல் வலையால் மேல் பகுதியிலும், நான்குபுறமும் மூடப்பட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

நாம் தெளித்த விதை, சுற்றுப்புற சூழ்நிலை சத்துக்களின் அளவு போன்றவற்றை அனுசரித்து அசோலாவின் வளர்ச்சி காணப்படும்.

இரண்டு அல்லது மூன்று வாரத்தில் தொட்டி முழுவதும் அசோலா படர்ந்து இருக்கும். இதனை பிளாஸ்டிக் வலைகளைக் கொண்டு சேகரிக்கலாம்.

ஒரு 6 அடி X 4 அடி அசோலா தொட்டியிலிருந்து தினசரி 2 கிலோ அசோலாவை அறுவடை செய்யலாம்.

அசோலாவை பச்சையாகவே உணவாகக் கொடுக்கலாம்.

உற்பத்தி அதிகமாக இருக்கும்போது நிழலில் உலர்த்தியும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

அசோலாவின் வளர்ச்சியில் குறைபாடு காணப்பட்டால் அதற்கு மணிச்சத்து பற்றாக்குறை, அதிக வெப்பம், அதிக வெளிச்சம் அல்லது பூச்சி தாக்குதல் காரணமாக இருக்கலாம்.

சுருண்ட வேர், குறைவான வளர்ச்சி, இலை சிறுத்துப் போதல், நிறமாற்றம் ஆகியவை மணிச்சத்து (பாஸ்பரஸ், குறைபாட்டால்) வருகின்றது. 25 சதுர அடி குளத்திற்கு 100 கிராம் பாஸ்பரஸ் உரமிட வேண்டும்.
அதிக வெயிலினாலும், வெளிச்சத்தாலும் வளர்ச்சி குறைந்தால் நிழல் வளையின் சதவிகிதத்தை 50 லிருந்து 60% அல்லது 75% க்கு கூட்டலாம். வெளியே விரைவாக வளரும் அகத்தி போன்ற நிழல் மரங்களை வளர்க்கலாம்.

அசோலாவை கால்நடைகளுக்குப் பச்சையாகவே கொடுக்கலாம். சாண வாடை அடித்தால் அசோலாவை நல்ல தண்ணீரில் அலசி எடுத்துவிட்டு கொடுக்கலாம்.

கால்நடை, கோழி போன்றவைகளுக்கான கலப்பு தீவனம் கொடுக்கும்போது அத்துடன் அசோலாவை கலந்து கொடுத்தால் எளிதில் உண்ணும். கோழி, வான்கோழி, வாத்து போன்ற வீட்டுப் பறவைகள் அசோலாவை மிகவும் விருப்பமாக உண்கின்றன. வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் சராசரியாக ஒவ்வொரு கோழிக்கும் 100-300 கிராம் அசோலா தீவனமாக கொடுக்கப்படுகின்றது. கோழி குஞ்சுகளில் தீவனத்தில் 20% அசோலா கலந்து கொடுத்தால் குஞ்சுகள் நன்கு வளர்ந்து நல்ல எடையை அடைகின்றது. அசோலாவில் அதிகப் புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் உள்ளது. மேலும் இதில் நார்ப்பொருட்கள் குறைவு.

கால்நடையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் அசோலா கொண்டுள்ளது. உப்புடன் அசோலா கலந்து பன்றிகளுக்குக் கொடுத்தால் பன்றியின் உடல் எடை விரைவில் அதிகரிக்கின்றது. அதன் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கின்றது. பன்றிகள் அசோலாவை விரும்பி உண்கின்றன. மீன்களும் மற்ற நீர் தாவரங்களை விட அசோலாவை விரும்பி உண்கின்றன.

அசோலாவானது மிக குறைந்த உற்பத்திச் செலவில் கிடைக்கக்கூடிய ஒரு உயிர் உரமும் கூட. நீலப்பச்சை பாசியுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து விரைந்து வளர்ந்து, பெருகி அதிக மகசூல் கொடுக்கிறது. அசோலாவான தனது எடையை 2-3 நாட்களுக்குள் இரண்டு மடங்காக பெருக்கும் ஆற்றலை உடையது.

20-30 நாட்களுக்குள் வளர்ந்து ஏக்கருக்கு 10 மெட்ரிக் டன் மகசூல் கொடுக்கும்.
இத்தனை அற்புத பலன்களையும், சக்தியையும் உடைய அசோலாவை கறவை மாடு வளர்ப்போர் சிறிது இடத்தை ஒதுக்கி வளர்க்கலாம். இதன் உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு.

அசோலாவை கறவை மாடுகளுக்கு தொடர்ந்து உணவாக கொடுத்துக் கொண்டு வந்தால் பால் உற்பத்தி அதிகரிக்கின்றது. அத்துடன் பாலின் தரமும் கூடும்.

அசோலாவானது கால்நடைகளுக்கு சத்துக்கள் நிறைந்த தீவன இணை உணவு. குறைந்த உற்பத்திச் செலவில் அசோலாவை உற்பத்தி செய்து கால்நடைகளுக்குக் கொடுக்கும்போது பாலின் உற்பத்தி செலவு குறைந்து லாபத்தின் அளவு கூடுகின்றது.
அசோலாச் செடி வளர்கின்ற விதத்தையும், வேகத்தையும் கவனித்தால் அற்புதமான அனுபவமாக இருக்கும். அதனுடைய கணுக்கள் உடைந்து சிறுசிறு துண்டுகளாகி ஒவ்வொரு துண்டும் வேர்கள் விட ஆரம்பித்து தனித்து வளரும். இவ்வளவு விரைவான வளர்ச்சியை வேறு பயிர்களில் காண இயலாது.

இந்தத் துரித வளர்ச்சியால்தான் 6 அடி X 4 அடி அளவுள்ள அசோலா வளர்க்கும் தொட்டியில் இருந்து தினசரி 2 கிலோ அளவிற்கு அசோலா அறுவடை செய்ய முடிகின்றது.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழுள்ள வேளாண் அறிவியல் நிலையம் அல்லது உழவர் பயிற்சி மையத்தை அணுகினால் விதைக்கான அசோலாவை எளிதில் பெறலாம். மிக எளிய தொழில்நுட்பம், குறைந்த முதலீடு, அபரிதமான மகசூல் உள்ள அசோலா வளர்ப்பு, கால்நடை வளர்ப்போருக்கு நல்லதொரு மாற்று தீவனத்தைக் கொடுக்கின்றது.

குறைந்த செலவில் உற்பத்தியாகும் இந்த தீவனத்தைப் பயன்படுத்தும்போது நமது உற்பத்திச் செலவு குறைந்து லாபத்தின் அளவு அதிகரிக்கின்றது.

நன்றி: தினமணி