ஆழ்துளை கிணறு மற்றும் நீர்முழ்கி மோட்டார்

ஆழ்துளை கிணறு மற்றும் நீர்முழ்கி மோட்டார். borewell

ஆழ்துளை கிணறு மற்றும் நீர்முழ்கி மோட்டார்.

நிலத்தடி நீர் (Ground Water)

புதுவீடு கட்ட தொடங்கும் ஒவ்வொருவரும் செய்யும் முதல்வேலை ஆழ்துளை கிணறு அமைப்பதுதான். ஏனென்றால் தண்ணீர் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது. அதே நேரம் எல்லா இடத்திலும் தேவையான அளவு நீர் கிடைத்து விடுவதில்லை. சில இடங்களில் 1000 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தும் குடிபதற்கே பற்றா குறையான நீர் கிடைப்பது இயற்கை நமக்கு விடும் சவால் என்றே தோன்றுகிறது.

சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பொருளாதார இழப்பை தவிர்ப்பதுடன் நமக்கு தேவையான நீரினை மிக எளிதாக பூமியில் இருந்து எடுத்து பயன்படுத்தமுடியும்.

மழை பெய்யும் போது பூமிக்குள் உள்ள இடைவெளியில் மழை நீர் இறங்கி பூமியின் ஈர்ப்பு விசையால் பாறைகளின் இடையில் சேமிக்கப்படும் நீரே நிலத்தடி நீர். இதில் குறிப்பிட்ட இடத்திலுள்ள பாறையை பொறுத்து அதில் கலந்துள்ள சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்ற உப்புகள் கலந்து விடுவதால் நீரில் உப்புத்தன்மை அதிகமாகி விடுகிறது.

300 முதல் 600 PPM (Parts Per Million) அளவு வரை குடிநீருக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் மனிதர்களுக்கு எந்த பதிப்பும் இல்லை. அதே நேரம் சில இடங்களில் 1500 PPM முதல் 4000 PPM வரை உப்புகள் கலந்திருப்பதால் அதை குடிக்கும் அல்லது நுகரும் எந்த மனிதருக்கும் சிறுநீரகம், கல்லீரல் வியாதிகள் வருவதற்கு மிக அதிக வாய்புகள் உள்ளது. எனவே 750 PPM இக்கும் அதிகமான உப்புகள் கலந்த நீரை சவ்வூடு பரவல் தொழில்நுட்பத்தில் (Reverse Osmosis) இயங்கும் சுத்திகரிப்பானை கொண்டு உப்பு நீரை குடிநீராக்கி குடிப்பது உங்கள் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

அதே நேரம் ரசாயனக் கழிவுநீரை வெளியிடும் பெரிய ஆலைகளுக்கு அருகில் குடியிருப்பவர்கள் முடிந்தளவு நிலத்தடி நீரை தவிர்த்து தூரத்தில் சுமார் 4 KM – க்கு அப்பால் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து வரும் நீரை குடிப்பதற்கு பயன்படுத்தினால் நச்சுகளின் பாதிப்பை ஓரளவு குறைக்கலாம்.

முடிந்த வரை 200 அடிக்குள் கிடைக்கும் நீர் ஓரளவு குறைந்த உப்புகளுடன் இருக்கும். அதற்கும் கீழிருந்து கிடைக்கும் நீர் பெரும்பாலும் உவர்ப்பு தன்மையுடையதாகவே இருக்கும். இதுவும் பாறைகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

கிணற்றின் ஆழம்

அனேக மக்களின் மிகப்பெரிய சந்தேகம் குறைந்த ஆழத்தில் அமையும் ஆழ்துளை கிணற்றில் குறுகிய காலத்தில் நீர் வற்றிவிட்டால் என்ன செய்வது என்பதே. ஒன்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஊரின் நிலத்தடி நீர்மட்டம் எத்தனை அடியில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதைவிட 200 அடி ஆழம் அதிகமாக அமைத்துவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு கவலைப்பட தேவையில்லை.

அதே நேரம் இதிலும் ஒரு போட்டி உள்ளது. நாம் 300 அடி கிணறு அமைத்திருந்தால் அடுத்த வீட்டு மனையில் 800 அடி வரை போர்வெல் அமைத்து அதில் 600 அடிவரை மோட்டார் பொருத்தி அதிக அளவு நீரை இறைத்தால் உங்கள் கிணறு வற்றிப் போக சாத்தியம் உள்ளது. அதே நேரம் அதே போர்வெல்லில் தினமும் வெறும் 2000 லிட்டர் நீரை மட்டும் அவர் எடுத்தால் உங்களுக்கு நிச்சயம் நீர் கிடைத்துவிடும். எனவே எவ்வளவு ஆழம் போடவேண்டும் என்பதை எச்சரிக்கையாக இருந்து வறட்சியான இடங்களில் 500 முதல் 600 அடிவரையும், நல்ல நீர்பிடிப்பு பகுதிகளில் 200 அடிவரையும் அமைத்துக் கொள்ளவது எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.

சிலர் 120 அடி ஆழத்தில் நல்ல நீர் கிடைத்து விட்டது என்று 200 அடியில் நிறுத்திவிட்டால் வறட்சியான சமயங்களில் சிக்கல் வந்துவிடும். அதையும் 500 அடிவரை போட்டு விடுவது பாதுகாப்பானது. ஏனென்றால் திரும்பச் செய்யும் வேலையல்ல இது.

சிறந்த வகை மோட்டார்

பொதுவாக வீடுகளின் நீர்தேவை குறைந்த அளவே 2000 லிட்டர் முதல் 5000 லிட்டர் வரை இருப்பதால் வீட்டு ஒரு முனை மின்சாரத்தில் (Single Phase) இயங்கும் மோட்டார்களே போதுமானது.

இவை தற்போது மூன்று முக்கிய வடிவமைப்பில் கிடைகின்றன. அவை,
ஜெட் பம்புகள் ( JET PUMPS)
கம்ப்ரசர்கள் (COMPRESSORS)
நீர் மூழ்கி மோட்டார்கள் ( SUBMERSIBLE PUMPSETS)

ஜெட் பம்புகள் (jet pumps)

1970 முதல் 1985 வரை ஜெட் பும்புகளே மிக அதிகம் ஆழ்துளை கிணற்று நீரை இறைக்க பயன்பட்டன. அதாவது உயர் அழுத்தத்தில் செலுத்தப்படும் நீரானது ஒரு ஜெட்டின் (JET) வழியே வெளியேறும் போது உருவாகும் நீர்ம அழுத்த வேறுபாடு (Vacuum pressure) நீரினை மேல்நோக்கி தள்ளுகிறது. இதனால் தொடர்ந்து நீர் வெளியேறுகிறது.

இதிலுள்ள குறைபாடு 80 அடி வரை மட்டுமே திறமையாக செயல்படும். அதே நேரம் அதிகபட்சம் 200 அடிவரை மட்டுமே இதனால் செயல்பட முடியும். மற்றும் குறைந்தளவு நீர் வருவதால் மின்சார விரயம் மிக அதிகம். அது மட்டுமல்ல அடிக்கடி புட்வால்வில் உள்ள நாசில் பழுதடைவது, NRV எனப்படும் நான் ரிட்டன் வால்வு ஒழுகி விடுவது என்று இதன் சில பராமரிப்பு தொந்தரவுகளால் அதற்கு அடுத்து வந்த கம்ப்ரசர் அமைப்புக்கு மக்கள் மாறத் தொடங்கினர்.

இன்றும் சில இடங்களில் அதாவது 100 அடிக்கும் குறைவான ஆழம் உள்ள போர்வெல்களில் இவை இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மின் சிக்கனம் என்று பார்த்தால் இது நமக்கு ஒத்துவராது. இதன் இயங்கும் சப்தமும் சற்று அதிகமே.

கம்ப்ரசர் பம்புகள் (Compressor Pumps)

இது இரண்டாம் தலைமுறை போர்வெல் பம்ப் என்றே சொல்லலாம். இதில் அழுத்தப்பட்ட காற்று ஆழத்தில் உள்ள புட்வால்விற்கு சென்று வெளியேறும்போது நீர்குமிழிகளை உருவாக்குவதால் அதிலுள்ள நீரின் அடர்த்தி குறைந்து அது மேல்நோக்கி குழாயினுள் உயர் அழுத்தத்தில் வெளியேறுகிறது. இது ஜெட்பம்பை விட சற்று மேம்பட்டதே. இது அதிகபட்சம் 300 அடிவரை 2HP மோட்டாரின் திறனை கொண்டு நீரை இறைக்கும்.

சிலர் தங்கள் போர்வெல் 600 அடிவரை போட்டுள்ளதகாவும் அதில் 500 அடிவரை குழாயை இறக்கியுள்ளதாகவும் கூறுவார்கள். இது முற்றிலும் தவறானது. 1 1/2 HP கம்ப்ரசர் 275 அடிவரை அதிகபட்சமாக நீரை இறைக்கும். அதற்கும் கீழ விட்டுள்ள குழாய் வெறுமனே தண்ணீர் மற்றும் காற்றை தடுத்துக் கொண்டு அதிகபடியான உராய்வை (Friction Loss) கொடுத்து தண்ணீரை வெளியேற்ற தடையாக இருகுமேயன்றி 500 அடி ஆழம் வரை நீரை எடுக்காது.

இதை ஓடும் போது ஒரு நைலான் கயிற்றில் மணல் நிரப்பிய பிளாஸ்டிக் குப்பியை விட்டு நீங்களே எத்தனை அடிவரை உங்கள் கம்ப்ரசர்கள் வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் இரும்பை கட்டி பார்க்காதீர்கள் அது போர்வெல்லுக்கு ஆபத்து.

உங்கள் போர்வெல்லில் 50 அடிக்குள் நீர் தெரிந்தால் 250 அடிக்குள் குழாயை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த ஆழத்திற்கு மேல் குழாயை விடாதீர்கள். விட்டாலும் பிரயோசனம் இல்லை.

கம்ப்ரசர் இயங்கும் போது உருவாகும் சப்தம் சற்று கூடுதலாகவே இருப்பதால் குழந்தைகள் படிப்பதற்கும், அருகில் வசிப்பவர்களுக்கும் சற்று சிரமமான விசயமாக இருக்கும். அடுத்து கம்ப்ரசரில் உள்ள பிஸ்டன் தேய்மானம் அடையும் போது ஆயில் ரிங் (Oil Ring) பளுதடைந்து ஆயில் நாம் குடிக்கும் தண்ணீரில் கலக்க வாய்ப்புள்ளது. எனவே சரியாக பராமரிப்பது மிக அவசியம்.

நீர்மூழ்கி போர்வெல் பம்புகள் : (Bore well Submersible Pump sets)

இவை நவீன மின்- இயந்திரவியல்( Electro-Mechanical) தயாரிப்புகள். அதாவது குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி மிக அதிக நீரை இறைப்பதோடு எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக இயங்குவது மற்றும் மிக அதிக ஆழம் வரை 1000 அடிக்கும் கீழிருந்து நடைமுறையில் நீரை இறைக்கும் ஒரே தொழில்நுட்ப பம்புகள் இவை மட்டுமே. இவை 1990 க்கு பின் சற்று பிரபலமாகி இன்று அனைத்து இடங்களிலும் திறம்பட செயலாற்றி வருகின்றன.

தேர்ந்தெடுக்கும் முறைகள்

250 அடியில் நீர் கிடைக்கும் போர்வெல்லில் 500 அடி ஆழம் வரை வேலை செய்யும் பம்புகளை பொருத்தி விடுகின்றனர். நடைமுறையில் இது விற்பனையாளர்கள் செய்யும் தவறேயன்றி வாங்குபவர் தவறல்ல . இதனால் பாதியளவு நீரை மட்டுமே பெற முடியும். மின்சாரமும் விரயம், அதிக தொடக்க முதலீடும் தேவையற்ற விரயம். யாருக்கும் இது சம்பந்தமான தொழில்நுட்ப அறிவு இன்னும் மேம்படவில்லை.

சரியான மோட்டாரை தேவையான ஆழத்தில் நிறுத்தி நீரை இறைக்கும் போது இரு மடங்கு மின்சாரம், நேரம், மிச்சமாகும்.

சமீபத்தில் நவீன தொழில்நுட்பத்தில் ஒரு ஹச். பி. (1 HP) மோட்டார் ஒன்றை நான் வடிவமைத்துள்ளேன். அது 200 அடி உயரம் வரை வேலை செய்வதோடு நிமிடத்திற்கு 100 லிட்டர் நீரை இறைத்து விடும். அதே போர்வெல்லில் தவறாக 1.5 HP யில் 500 அடி வரை வேலை செய்யும் மோட்டார் பொருத்தி 350 அடிக்கு கீழ் மோட்டார் இருந்தாலும் நிமிடத்திற்கு வெறும் 45 லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கும். இந்த மோட்டார் விலையும் இரண்டு மடங்கு அதிகம் . அதிக விலை கொடுத்து மோட்டார் வாங்கி குறைந்த நீரை இறைப்பது எந்த விதத்தில் புத்திசாலித்தனம்?

வீடுகளுக்கான போர்வெல் மோட்டார்கள் ஒவ்வொரு குதிரைத் திறனிலும் 120-க்கும் அதிகமான மாடல்கள் உள்ளதால் தேர்வு செய்யும் போது இந்த துறையில் தேர்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற வேண்டியது மிகவும் அவசியம்.

சப்மர்சிபில் மோட்டார் அமைக்கும் முறை

சரியான ஆழம் வேலை செய்யும் மோட்டாரை தேர்வு செய்து U PVC பைப் சரியான கிரேடு ( A,B,C Grades ) வலுவுள்ளதை வாங்கி தகுதியான ஆட்களை கொண்டு நிறுவ வேண்டும். மிக முக்கியமாக காற்று வால்வையும், NRV எனப்படும் ஒரு வழி வால்வுகளையும் சரியான இடத்தில் பொருத்த வேண்டும். இல்லையென்றால் மோட்டார் ஓடி நிற்கும்போது நீர் திரும்ப வந்து மோட்டார் பம்பை ரிவர்ஸில் சுழற்றுவதால் த்ரஸ்ட் பேரிங் (Thrust Bearing) பழுதடைந்து மோட்டாரின் ஆயுள் குறைவதோடு தேவையில்லாத பராமரிப்பு செலவையும் கொடுத்து விடும்.

நீர்மூழ்கி மோட்டரை பயன்படுத்தும் முறை

நிலத்தடி நீர் மட்டம் சில இடங்களில் அதல பாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் 1000 அடிக்கும் கீழே மோட்டாரை பொருத்தி தண்ணீரை 1000 அடி வரை இறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஆதாரம் : காற்றாலை மின் தொழில்நுட்ப மையம், சென்னை
வேளாண்மை செய்திகள் R.அன்பரசு.