Power of Arc Shape and Filler Slab
இன்றைக்கு வீடு கட்டும் செலவில் மிக அதிகமான செலவை உறிஞ்சகூடியதும் கட்டிடத்தின் மிக முக்கியமான கூரை அமைப்பை பற்றி லாரி பேக்கரின் தொழில்நுட்பத்தை இந்த பதிவிற்கு எடுத்து கொண்டிருக்கிறேன்.
உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட கூரையை வடிவமைத்து அந்த எடையை தாங்கும் அளவிற்கு சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் வடிமைப்பதின் மூலம் கட்டிடத்தின் செலவுகளை நாமாகவே கூட்டி கொண்டிருக்கிறோம்.
நான் சில கட்டிடத்தில் பழைய மெட்ராஸ் டெர்ரஸ் ரூப் ஐ இடித்து காங்கிரீட் ஸ்லாப் மாற்றும் வேலைகளை பார்த்திருக்கிறேன். அவ்வளவு உறுதி வாய்ந்த கூரையை இடிப்பதே கஷ்டமான வேலை. மேலும் அதில் உள்ள பொருள்கள் பலவும் வீணாகாமல் ரீயூஸ் செய்யமாறும் இருக்கும் (உதா.) உத்திரகட்டைகள், செங்கல், சுண்ணாம்பு. சொல்லப்போனால் 20% பொருள்கள் வேண்டுமானால் வீணாகும். ரீயூஸிங் மெட்டிரியல் (Reusing Material) இன்றைய சுற்றுசூழலுக்கு உகந்த கட்டிடங்களின் முதல் கோட்பாடு. நமது பழமையான கட்டிட முறைகளில் எப்படி பொருந்தி வருகிறது என்பதை நினைத்தால் நம் மூதாதையர்களின் மீது பெருமதிப்பும், அதையெல்லாம் நாகரீக பூச்சால் மறைத்துவிடுகிற நம் தலைமுறையின் மீது கோபமும் ஓரு சேர வருகிறது. இப்ப கூட பாருங்க சொல்ல வந்த விஷயத்த விட்டு ஆதங்கம் வேறு எங்கெங்கோ செல்கிறது.
மங்களூர் ஓடுகள்
லாரி பேக்கரின் ஃபில்லர் ஸ்லாப் (Filler Slab) முறையில் எடை குறைந்த பொருள்களை கம்பிகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் கூரையின் ஸெல்ப் வெயிட்டை குறைக்கலாம். இதற்காக இவர் பரிந்துரைப்பது மங்களூர் ஓடுகள்.
இரண்டு மங்களூர் ஓடுகளை படத்தில் குறிப்பிட்ட அமைப்பில் கம்பிகளுக்கு இடையில் வைப்பதின் மூலம் கூரையின் எடையை 30% வரை குறைக்கமுடியும் என லாரி பேக்கர் கூறுகிறார்.
Filler Slab
இது தாங்குமா என்ற கேள்விக்கு இது குறித்து லாரிபாக்கெர் சொல்லும் போது
”That is the power of arc shape”. அதாவது ஆர்க் அமைப்பில் சாதாரண அமைப்பை விட அதிக எடையை தாங்கும் என்பது ஸ்டரக்சுரல் அடிப்படை என்பதுதான் அவரின் அந்த வார்த்தைக்கு அர்த்தம். அதை நுட்பமாக தனது ஃபில்லர் ஸ்லாப் முறையில் இணைத்த லாரி பேக்கரின் திறமையை வியக்காமல் இருக்க முடிய வில்லை.
இந்த முறைப்படி கம்பிகளுக்கு இடையே 30 x 50 cm அளவில் இடைவெளி இருக்க வேண்டும். அந்த இடைவெளியில் இரண்டு மங்களூர் ஓடுகளை ஃபில்லராக பயன்படுத்த வேண்டும். பின்னர் இதன் மேல காங்கிரீட் போட வேண்டும். இதன் மூலம் காங்கிரீட்டின் அளவு குறைவதோடு, கட்டிடத்திற்கு குளுமையும் கிடைக்கிறது. இந்த கூரை அமைப்பில் வழக்கமாக கூரையின் மேல் போடப்படும் வெதரிங்கோர்ஸும் குறைந்த அளவே தேவைப்படும்.
இந்த தொடர்களில் பலரும் கேட்கும் சந்தேகம் இப்பிடி கட்டிய வீடுகள் உறுதியானதாக இருக்குமா என்பதும் பார்ப்பதற்கு அழகாக இருக்குமா என்பதும் முக்கிய கேள்விகளாக உள்ளது. அதற்காக நான் கட்டிய சில கட்டிட போட்டோக்களை இங்கு இணைத்துள்ளேன். மேலும் புகைப்படங்கள் லாரிபேக்கரின் தளத்தில் உள்ளது.
தொடரும்…
உங்களுடன் நான் ஹரி