Save rain water

Agriwiki.in- Learn Share Collaborate
Elango Kallanai

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பி அங்கேயும் நீர் இருக்கிறதா? உணவு உற்பத்தி சாத்தியமா என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே வேளாண்மையைப் பற்றி பேசுவதை விஞ்ஞானத்திற்கு வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாடாக நம்மாட்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

உணவு கார்ப்பரேட் சூதாட்டத்தின் ஒரு அங்கமாகிப் போனதைப் பற்றிய கவலை நமக்கு இருந்திருக்க வேண்டும். அதற்கு ஆதாரமான உற்பத்தியைப் பற்றி கவலை கொள்ளுதல் அவசியம். நிலமின்றி விவசாயம் ரோபோட்டுகளை வைத்து விவசாயம் என்பவை எல்லாம் கார்ப்பறேட்டுகளின் சித்து விளையாட்டுகள். அடிப்படையில் நீரும் நிலமும் மக்களிடம் இருத்தல் என்பதை ஒவ்வாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீரை நாம் விலைக்கு வாங்கிக் குடிக்கும் யுகத்திற்கு மெல்ல தள்ளபடுகிறோம். நீர் தனியார்மயமாவது நம்மை அறியாமல் நமது காலுக்கு கீழ் நடக்கிறது.

என்னுடைய மச்சினி ஒருத்தர் லண்டனில் தன்னுடைய வீட்டில் பூச்செடி வைக்க ஆசைப்பட்டாராம். அதற்கு மண் அவரிடம் கிடையாது. பணம் கொடுத்துத் தான் மண் வாங்கி வந்து வைத்தாராம்.

நீண்ட நாட்களாக ஊடகங்களில் ஒரு தீவிரப் பிரச்சாரம் நடக்கிறது. விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுப்பதால் நீரை கொடுப்பதால் தான் பொருளாதாரப் பிரச்சனை என்பதைப் போன்ற பரப்புரைகள். வேளாண்மையில் வெறும் ஆறு சதவீத நீர் மட்டுமே பாசனத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. அதைத் தான் சாய்நாத் எவ்வாறு செயற்கையாக இந்தியாவில் பஞ்சம் உணவுத் தட்டுப்பாடு கிராமப்புற மக்கள் வெளியேற்றம் எல்லாம் நடக்கிறது என்று சொல்லுகிறார்.

மகாராஸட்டிரத்தில் குடிக்க தண்ணீர் ஒரு லிட்டருக்கு மக்கள் நாற்பது பைசாவிற்கு வாங்குகிறார்கள். ஆனால் நாள் தோறும் பீர் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு லட்சக்கணக்கான லிட்டர் நீர் வெறும் பதினாலு பைசாவிற்கு கொடுக்கப்படுகிறது. முன்னர் அதுவும் வெறும் ஒரு பைசாவிற்கே வாங்கினர் முதலாளிகள். இத்தகைய சலுகைகளை அனுபவிக்கும் கார்ப்பரேட்டுகள் தங்களுடைய பணக்குவிப்பிற்காக மலிவான ஊழியர்கள் துவங்கி மலிவான வளங்கள் என்று இந்தியாவில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் உள்ளூர் வெளியூர் முதலாளிகள் என்கிற பேதமெல்லாம் கிடையாது.

தனியார் மயத்தின் உச்சம் நீர் தனியர்மயமானது. சில இடங்களில் நதிகளின் நீர் உரிமைகளை கம்பெனிகள் வாங்கிப் போட்டுள்ளன. நதிநீரின் உரிமை தமிழனுக்கா கன்னடனுக்கா என்றெல்லாம் இனி சண்டை அவசியமில்லை. தண்ணீர் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருப்பது இதுவரை மறைமுகமாக பாட்டில்கள் வழியே நமக்குத் தெரிந்தது. ஆனால் நேரடியாக இனி நடக்கப் போகிறது.

திருப்பூரில் L&T ஒரு விநயோக உரிமை பெற்றுள்ள கேஸ் ஸ்டடி இருக்கிறது. அது நமது காவேரியின் நீர் வினியோகத்தை தனியார் மயப்படுத்தல் என்று இருக்கிறது. நாட்டில் விவசாயம் என்பது மேசைக்கு வரும் உணவு மட்டுமல்ல. நீரின் மேல் உள்ள உரிமை நிலத்தின் மேல் உள்ள உரிமை என்று 360பாகையிலும் யோசிக்க வேண்டியதிருக்கிறது.

கடந்த ஆறு வருடங்களில் நாம் பெரும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது பல மாநிலங்களில் முன்னரே துவங்கிவிட்டது. இத்தகைய வறட்சி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்கிறார் சாய்நாத். ஏனென்று தேடித் படித்துப் பாருங்கள்.
நம்முடைய வளங்களின் மேல் இன்று பெட் கட்டியுள்ள ஆட்கள் சாதாரண ஆட்கள் கிடையாது. பில்கேட்ஸ் துவனி எல்லாப் பெருமுதலாலிகளும் இந்தப் பந்தயத்தில் இருக்கிறார்கள். நன்றாக கவனித்தால் அத்தியாவசியத் தேவைகளை வணிகத்தின் பிடிக்குள் கொண்டு வரும் முதலீடுகளை முன்னரே செய்துவிட்டனர். அதில் நீர் விதை உணவு உணவு பாதுகாப்பு என்று பல அம்சங்கள் இருக்கின்றன. எனவே விஞ்ஞானம் என்றெல்லாம் பொய் சொல்லி விவசாயிகளையும் மக்களையும் ஏமாற்ற ஊடகங்கள் தரகு செய்கிறார்கள்.

இந்த நன்னீர் போர் பற்றிய வரலாற்றுப் பார்வை இன்றைய முக்கியமான தேவை. அதைவிடுத்து அங்கே கடல் நீரை சுத்திகரிக்கலாம் இங்கே ஐஸ் கட்டிகளை கொண்டு வந்து வைக்கலாம் என்பது வளங்களின் சூழல் அமைப்புகளைத் திருடும் முயற்சி. வேளாண்மை என்பது உணவு மட்டுமல்ல. நீரை ஓடவிடச் செய்வதும் தான்.

நீரோட்டம் இல்லாத பஞ்சப்பராரிகளாக நகரங்களை நோக்கும் சமூகத்திற்கு இது தெரிய வாய்ப்பில்லை. தொடர்கிறேன்.