Month: May 2018

பினைப்பூட்டப்பட்ட செங்கற்கள் – Interlocking Bricks

வீடு கட்டும் போது நாம் செலவு குறைவாக சுவரின் அமைப்பை கட்டுமானம் செய்ய மிக சிறந்த மற்றும் அனைவாலும் சுலபமாக செய்யக்கூடிய தொழில் நுட்பம் தான் இந்த INTERLOCKING BRICKS என அழைக்கப்படும் பினைப்பூட்டப்பட்ட செங்கற்கள் ஆகும்.

((((நிறைய நண்பகள் இந்த இண்டர்லாக்கிங் பிரிக்ஸ் பற்றி எழுத கேட்டிருந்ததால் இந்த முழு தகவல் அடங்கிய பதிவு)))))))

அதாவது இநேர்லோக்கிங் பிரிக்ஸ் பற்றி நாம் பார்ப்பதற்கு முன்பு இந்த INTERLOCKING என்றால் என்ன என்பதை முதலில் அறிவது அவசியம்.

அதாவது இந்த LOCKING சிஸ்டம் கட்டுமான துறையிலேயே பல இடங்களில் பயன்படுகிறது.அதாவது நாம் வீடு கட்ட ஜன்னல்கள் கதவுகள் செய்யும் போது ஆசாரி இந்த locking system கொண்டு தான் மர சட்டங்களை பிணைக்கிறார்.

அதே போல இந்த locking systems பயன்படுத்தி தான் தற்போது மேம்பாலங்களில் தடுப்பு சுவர்கள் மற்றும் retaining walls போன்றவை அமைக்கப்படுகிறது.
மேம்பாலங்களின் அடி பகுதியில் தேன் கூடு போல hectogone அமைப்பில் இருப்பதை பார்க்கலாம்.

மற்றும் பல துறைகளில் இந்த INTERLOCKING system பயன்படுகிறது.

சரி இப்போது செங்கல்லுக்கு வருவோம் ….

நாம் சாதாரன முறையில் வீடு கட்டும் போது செங்கலுக்கும் செங்கல்லுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த சிமெண்ட்டும் மணலும் பயன்படுகிறது.

இந்த இண்டர்லோக்கிங் ப்ரிக்சுக்கு தொழிற்சாலைகளில் செய்யும் போதே அதன் அமைப்பில் இந்த பிணைப்பை ஏற்படுத்த locking அமைப்பு கொடுக்கப்படுகிறது.இதன் மூலம் செங்கற்க்கள் ஒன்றுடன் ஒன்று அதில் உள்ள locking அமைப்பு மூலமே பிணைந்து கொள்கிறது.இதற்க்கு சிமெண்ட் மணல் தேவை இல்லை.

((((படத்தில் பார்க்கவும் செங்கல்லில் சில பகுதிகள் உயரமாகவும் பள்ளமாகவும் இருப்பதை காணலாம் அவைதான் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிணைப்பிற்கு உதவும் locking system.))))

இந்த இண்டர்லோக்கிங் bricks hydraulic compression முறையில் மண்ணை,சிமெண்ட்ஐ கொண்டும் ,
மற்றும் சிமெண்ட் மணலை கொண்டும் இரண்டு முறையில் தயாரிக்கப்படுகிறது. ((படத்தில் பார்க்கவும் ஒன்று சிவப்பாகவும் ஒன்று சிமெண்ட் நிறத்திலும் காணலாம்…)))


compressed செய்து செய்யப்படுவதால் செங்கல் நல்ல surface finishing உடன் இருப்பதால் பூச்சு வேலை தேவை இல்லை.பூசாமலே பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்.மற்றும் மண்ணால் செய்யப்பட்ட கற்களை கொண்டு கட்டி பூசாமல் விடுவதால் வெயில் காலங்களில் கொஞ்சம் குளுமையாக இருக்கும்.

மற்றும் இந்த கற்கள் இரண்டு விதமான அளவுகளில் கிடைக்கிறது. 9 inch soil bricks costs Rs.29 and 6 inch costs Rs.22

அதாவது இந்த கற்கள் அதிக எடை தாங்கும் சக்தி கொண்டுள்ளதால் இதனை load bearing structure முறையில் கட்டிடம் அமைக்க முடியும் .
column structure தேவை இல்லை.

இந்த கற்களை கொண்டு சுவரை கட்டும் போது வெளிப்புறத்தில் sunshade அமைப்பு மிக முக்கியம்.கல்லுக்கு இடையில் கலவை இல்லாததால் சுவரின் மீது மழை நீர் படும் போது உள் பக்கம் கசிய வைப்பு உள்ளது.இதனை sunshade அமைப்பு மூலம் தடுக்கலாம்.

மற்றும் இது laying பண்ணும்போது முதல் வரிசை சரியாக நேராகவும் ,தூக்குக்காகவும் அமைக்க வேண்டும்.இது மிக வேகமாக சுவரை கட்டக்கூடிய முறை என்பதால் கட்டிடம் கட்ட தேவைப்படும் காலம் மிகவும் குறைவு …செலவும் குறைவு.

ஈரோடு நசியனூரில் இயங்கி வரும் Green Grandiose Eco Bricks Doing.  Call for details on 9486392544

மற்றும் இது கட்டப்படும் முறையையும்,கட்டப்பட்ட வீட்டின் அமைப்பையும் கானொளியில் இணைத்துள்ளேன்.

Bricks laying and fixing

இந்த முறையில் சுவரின் அமைப்பு கட்டப்பட்ட வீடு

மறக்காம ஷேர் பண்ணிருங்க ….
((எலோருக்கும் தெரியட்டும் புரிஞ்சவங்க பயன் அடையட்டும்)).. ….

தொடரும்….
உங்களுடன் நான் ஹரி..

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மலைக்க வைக்கும் மலைவேம்பு!

மலை வேம்பு! இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு. விதையில்லா இனப்பெருக்கத்தின் மூலம் இந்தக் கன்றுகளை நாங்கள் உற்பத்தி செய்துள்ளோம். இம்மரத்தின் தேவை மிகஅதிகம். பிளைவுட் கம்பெனிகள் இவற்றை வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கின்றன.

உவர் மற்றும் களர் நிலத்தைத் தவிர, வடிகால் வசதியுள்ள எந்த நிலத்திலும் வளரக்கூடிய தன்மை படைத்தது இந்த மலைவேம்பு. இந்த மரத்துக்கும் நீர்ப்பாசனம் தேவையில்லை. எந்த வகை மரமாக இருந்தாலும் அது மாதந்தோறும் ஒரு செ.மீ. உயரம் வளர்ந்தால் சிறந்த மரம் என்று சொல்வார்கள். ஆனால், இந்த மலைவேம்புவோ… 2 செ.மீ. வரை வளர்வதால்… சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த மரத்தை வளர்ப்பதிலும் ஒரு புதிய முறையினை புகுத்தியுள்ளேன். நமக்குக் கிடைக்கிற மழையளவு, மிகவும் குறைவு. அதுவும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வேகமாக கொட்டித் தீர்த்துவிடும். நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பதோடு, அதை வைத்தே இந்த மரத்தையும் வளர்க்கலாம் என்பதுதான் திட்டம். இதற்காக 3 மீட்டர் விட்டமும் 30 செ.மீ ஆழமும் கொண்ட டீ (கப்) சாசர் வடிவில் குழி தோண்டினேன். 6 மீட்டர் இடை வெளியில் வரிசையாக இப்படி பள்ளம் தோண்டி, அதன் இரண்டு பக்க கரைகளிலும் எதிரெதிரே இரண்டு மலைவேம்பு கன்றுகளை நடவு செய்தேன். ஒரு குழியில் 1,000 லிட்டர் மழைநீர் தேங்கும். ஏக்கருக்கு மொத்தம் 100 குழிகள் மூலம் மொத்தமாக ஒரு லட்சம் லிட்டர் நீர் சேமிக்கப்பட்டு, செடிகளுக்குக் கிடைக்கும். விதையில்லா இனப்பெ ருக்கம் மூலம் கிடைத்த மலைவேம்பு கன்றுகளை, இந்த முறையில் நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் வரைக்கும் நடமுடியும். 6-ம் ஆண்டே மரம் பெருத்து, ஒரு மரம் மூன்றாயிரம் ரூபாய் விலைபோகும். 200 மரங்களுக்கு 6 லட்ச ரூபாய் கிடைக்கும். இது உண்மை. நீங்கள் 24 மணி நேரமும் உழைத்தால் கூட வேறு எந்தப்பயிரிலும் இந்த அளவுக்கு வருமானத்தைப் பார்க்க முடியாது” என்று சொல்லி ஆச்சர்யப் படுத்திய குமாரவேலு,

”இதையெல்லாம் படித்துவிட்டு மரங்களை மட்டுமே எல்லோரும் பயிர் செய்ய ஆரம்பித் தால், உணவுக்கு என்ன செய்வது… உணவுப் பஞ்சம் வந்துவிடுமே… என்று நீங்கள் நினைக் கலாம். ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நிகழ்ந்துவிடாது. ஒரு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் உணவுக்காக பயிரிட்ட கம்பு, கேழ்வரகு, திணை போன்ற சிறுதானியங்கள் எல்லாமே மர நிழலில் வளரும் தன்மை கொண்டவைதான். இப்போது அவற்றைப் பயிர் செய்வது குறைந்துவிட்டது. மரப்பயிர்களுக்கு நடுவே இவற்றைப் பயிரிட்டால் உணவுப் பயிர்கள் கிடைத்துவிடப் போகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நெல்லும், கத்தரிக்காயும் கூட காடுகளில் உள்ள மரத்தின் அடியில்தான் வளர்ந்தன. அதை வெயிலுக்குக் கொண்டு வந்தது நாம்தான். மீண்டும் அவற்றை பழைய இடத்திலே வளர்த்தால் உணவுப் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காதே!

பெரும்பாலான மரங்கள் மழைநீரை மட்டுமே நம்பி வளர்க்கப்படுபவை. நீர்ப்பாசனம் செய்தால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும். இத்தகைய மரங்கள் தான் இனி விவசாயிகளை வாழவைக்க போகிறது. அவற்றில் பத்து மரங்களை நான் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். மலைவேம்பு, மூங்கில், பீதனக்கன், கடம்பு, குமிழ், கத்திசவுக்கு, வேங்கை, இந்தோனேஷிய சவுக்கு, ஏழிஇலைபாலை, புங்கன் ஆகியவைதான் அந்த பத்து மரங்கள். தமிழகத்துக்கு மிகவும் ஏற்ற இந்த பத்து மரங்களும் ஜெயிக்கக் கூடிய குதிரைகள் என்பதில் சந்தேகமில்லை. இவற்றைத் தமிழக விவசாயிகள் பயிரிட் டால் மரப்பயிரில் புதிய புரட்சி தொடங்கும்’’ என்று கட்டை விரலை உயர்த்திச் சொன்னவர்,

”எல்லா நிலத்திலும் மரம் வளரும் என்று சொன்னதுமே… பாறையில் கூட வளரும் என்று எண்ணிவிடக்கூடாது. மரப்பயிர்களை வளர்க்க மண்கண்டம் கண்டிப்பாக 6 அடி அளவுக்கு இருக்க வேண்டும். மண்ணே இல்லாத நிலத்தில் எப்படி மரத்தை வளர்க்க முடியும். எனவே நிலத்தையும் முக்கியமாக தேர்ந்தெடுக்கவேண்டும்.

மரக்கன்றுகள் கிடைக்குமா… எந்த மரம்போட்டால் லாபம் என்று வரிசை யாக தொலைபேசியில் விவசாயிகள் கேட்டவண்ணம் உள்ளனர். இப்படிப்பட்ட சந்தேகங்கள் கொண்ட விவசாயிகள் என்னுடைய சென்னை அலுவலகத்துக்கு (கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15. தொலைபேசி 044-24323343) கடிதம் எழுதினால் போதும், எல்லாவற் றுக்கும் தெளிவாக பதில் எழுதத் தயார்.

ஸ்ட்ராவில் சவுக்குக்கன்று தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் கடந்த இதழிலும் இந்த இதழிலும் நான் சொல்லியிருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் காப்புரிமை பெறுவதற்காக பதிவு செய்திருக்கிறேன். எனவே, போலியான வர்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம்.

கட்டுரையைப் படித்ததுமே மரக்கன்று களை வாங்கி நட்டுவிடவேண்டும் என்று எங்களிடமோ… தனியாரிடமோ போய் நிற்கத் தேவையில்லை. ஜூலை மாதத்தில் தான் மலைவேம்பு உள்ளிட்ட அனைத்து வகை கன்றுகளும் வனத்துறையிடம் கிடைக்கும். அது பருவமழை தொடங்கும் காலம் என்பதால், அப்போது நடவு செய்தால்தான் உரிய பலன் கிடைக்கும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. எனவே, அந்த சமயத்தில் வனத்துறையைத் தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை பெற்று பலனடைலாம்” என்று விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் சொன்ன குமாரவேலு,

”ஒவ்வொரு துளி நீரையும், ஒவ்வொரு பருக்கை மண்ணையும், ஒவ்வொரு சூரியக் கதிரையும் சரியாகப் பயன்படுத்தும் முறையை வளர்த்துக் கொண்டாலே ஒவ்வொருவரும் சாதனை படைக்கும் விவசாயிதான்!” என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார்.

‘மலைவேம்பு இருக்கா மலைவேம்பு!’

-என்றபடி தேடித்தேடி மலைவேம்பு மரத்தை விலைக்கு வாங்கிக் கொண்டி ருக்கிறது ‘யுனிபிளை பிளைவுட்’ நிறுவனம். இந்நிறுவனத்தின் கம்பெனி செகரட்டரி தாஸ் இதைப்பற்றிச் சொல்லும்போது, ‘‘100 செ.மீ. சுற்றளவும், 5 மீட்டர் உயரமும் கொண்ட மலைவேம்பு மரம் ஒன்றுக்கு இன்றைய மதிப்பின்படி மூன்றாயிரம் ரூபாய் கொடுக்கிறோம். நாளுக்கு நாள் மலைவேம்புவின் மதிப்பு கூடிக்கொண்டேதான் இருக்கிறது’’ என்றார்.

மலை வேம்பு மரமானது மெலிசைன் தாவர இனத்தை சேர்ந்தது. இதனுடைய இலைகள், இறகு போன்று நீளமாக இருக்கும்.

• இம்மரம் குளிர்காலத்திலும், வறட்சியான காலத்திலும் சில நேரங்களில் இலைகளை உதிர்க்கும் தன்மையுடையது.

• இம்மரமானது சீனாவிலும், ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது.

• வேகமாக வளரக்கூடிய மரம் ஆகும். குறைந்த அளவு தண்ணீர் போதுமானது.

• ஒரு ஏக்கருக்கு (6×6) 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம்.

3 – 4 ஆண்டுகளில் 600 மரங்களை அறுவடை செய்து விறகு தேவைக்கு,தீக்குச்சி தயாரிக்க,விறகு எரித்து மின்சாரம் தயாரிக்க மேலும் பேப்பர் கூல் தயாரிக்க பயன்படுத்தினால் கூட (600×1000) ரூ.6 இலட்சம் வருமானம்.

7 – 8 ஆண்டுகளில் அதில் பாதி (300) மரங்களை அறுவடை செய்து (300×6000) ரூ.18 இலட்சம் வருமானம் பெறலாம்.

12 – 14 ஆண்டுகளில் மீதி உள்ள 300 மரங்களை அறுவடை செய்து (300×10000) ரூ. 30 இலட்சம் வருமானம் பெறலாம்.

• மலைவேம்பு இலை, காய், விதை, பட்டை, கோந்து போன்ற அனைத்தும் பலவிதமான நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டவை.

• மலைவேம்பு மரமானது பாலீஷ் போட நன்றாக இருக்கும். ரீப்பர், சட்டம், பர்னீச்சர்கள், சோபா செட்டுகள், அலமாரிகள்,

ஸோகேஸ்கள் மற்றும் அனைத்து மரச்சாமான்களும் செய்யலாம். விறகு மின்சாரம், தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது.

• பிளைவுட் கம்பெனிகள் மலைவேம்பு மரத்தினை விரும்பி கேட்கிறார்கள்.

பிளைவுட், பிரஷ்டோர்கள் செய்ய பயன்படுகிறது.

பிளைவுட் கம்பெனியில் பிளைவுட்டின் மேல் இரு பக்கத்திலும் போர்த்தப்பட்டிருக்கும் பார்வை பிளேட்டிற்கும் பயன்படுகிறது.

மற்றும்பேப்பர் மில்களில் மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

• 1 டன் மலைவேம்பு மரம் ரூ.7000/- வரை விற்கப்படுகிறது.

• மலைவேம்பு மரம் வளர்ப்பிற்கு மத்திய அரசு 20% மானியம் வழங்குகிறது.

மலைவேம்பு :

கேள்வி – பதில் :

1. மலைவேம்பு மரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
மிலியா டுபியா என்பது தாவரவியல் பெயர்

2. மலைவேம்பு மரம் எதற்கு பயன்படுகிறது?
பிளைவுட் தயாரிப்பதற்கும், கனரக வாகனங்களுக்கு பாடி பில்ட்டர் செய்யவும், விறகின் ½ அங்குலம் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பேப்பர் மில்களில் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. பிளைவுட் கம்பெனியில் பிளைவுட்டின் மேல் போர்த்தப்பட்டிருக்கும் பார்வை பிளேட்டிற்கும் பயன்படுகிறது

3. மலைவேம்பு இந்தியாவை தாயகமாகக் கொண்டதா?
மலைவேம்பு மரத்தின் தாயகம் இந்தியா

4. மலைவேம்பு மரம் எத்தனை ஆண்டுகள் கழித்து பயன்தரும்?
மூன்று முதல் 14 ஆண்டுகள் வரை பயன் தரும்.

5. வேம்புமரம் ஒரு மூலிகை மரமா?
மலைவேம்பு மரம் ஒரு மூலிகை மரமே. மலைவேம்பு மரத்தின் இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் அனைத்தும் மூலிகை வைத்தியத்திற்கு பயன்படுகிறது.

6.ஒரு ஏக்கர் நிலத்தில் எத்தனை மலைவேம்பு மரங்களை நடவு செய்யலாம்?
1 ஏக்கர் நிலத்தில் 530 மரங்களை நடவு செய்யலாம்.
5 வருடம் கழித்து ஒருமரம் விட்டு ஒரு மரத்தை வெட்டி அதில் வருமானம் பெறலாம்.

7. மலைவேம்பு மரம் 1 ஏக்கரில் பயிர் இடும்போது எவ்வளவு இலாபம் கிடைக்கும்?
மலைவேம்பு மரம் அடர் நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு (6×6) 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம்.

* 3 – 4 ஆண்டுகளில் 600 மரங்களை அறுவடை செய்து விறகு தேவைக்கு,தீக்குச்சி தயாரிக்க,விறகு எரித்து மின்சாரம் தயாரிக்க மேலும் பேப்பர் கூல் தயாரிக்க பயன்படுத்தினால் கூட (600×1000) ரூ.6 இலட்சம் வருமானம்.

* 7 – 8 ஆண்டுகளில் அதில் பாதி (300) மரங்களை அறுவடை செய்து (300×6000) ரூ.18 இலட்சம் வருமானம் பெறலாம்.

* 12 – 14 ஆண்டுகளில் மீதி உள்ள 300 மரங்களை அறுவடை செய்து (300×10000) ரூ. 30 இலட்சம் வருமானம் பெறலாம்.

8. மலைவேம்பு மரம் எத்தனை அடி உயரம் வரை வளரும்?
மண்ணின் தன்மைக்கேற்ப குறைந்தபட்சம் 35 அடிமுதல் அதிகபட்சம் 60 அடி உயரம் வளரும் தன்மை கொண்டது

9. மலைவேம்பு மரம் வளர்க்கும் நிலத்தின் சந்தன மரத்தை இடைவெளியில் வளர்க்கலாமா?
மலைவேம்பு மரத்தின் வளர்ச்சி விரைவாக உயரச்செல்லக்கூடிய தன்மை கொண்டது.  சந்தனம் மெதுவாக வளரும் தன்மை கொண்டதால் தாராளமாக வளர்க்கலாம்.

10. மலைவேம்பு மரத்திற்கு அரசு மானியம் உண்டா?
மத்திய அரசு மூலிகை மர மானியம் ½ முதல் 20% கொடுக்கிறது.

11. மானாவாரி நிலத்தில் மலைவேம்பு மரம் வளருமா?
மானாவாரி நிலத்தில் மலைவேம்பு மரம் வளரக்கூடிய தன்மை கொண்டது.

12. மலைவேம்பு நட்ட தோட்டத்தில் ஊடுபயிர்கள் மற்றும் ஊடுமரம் வளர்க்கலமா?
வாழை, செடி வகைகள், கீரை வகைகள், மூலிகை செடி வகைகள், தானிய வகைகள், காய்கறி வகைகள் போன்றவற்றை மலைவேம்பு நட்ட தோட்டத்தில் 3 – 4 வருடங்களுக்கு ஊடு பயிர் செய்து கொள்ளலாம். சந்தனம்,அகர் மரங்களை ஊடுமரமாக வளர்க்கலாம்.

13. மலைவேம்பு மரத்தில்(டூப்ளிக்கெட்) துலக்க வேம்பு மரம் என்ற ரகம் உள்ளதா?
டூப்ளிகெட் மலைவேம்பு மரம் என்ற ரகம் உள்ளது. அது அதிகம் வளராது. 3 ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி நின்று போய்விடும்.

14. மலைவேம்பு மரத்தின் பக்க கிளைகள் வளருமா?
மலைவேம்பு மரத்தில் 6 – 8 அடிக்கு மேல் வளரும்போது பக்க கிளைகள் வளரும்.

15. மலைவேம்பு மரத்தில் நோய் தாக்கம் இருக்குமா?
மலைவேம்பிற்கு நோய் அதிகம் வருவதில்லை. சிறிய இருக்கும்போது வெட்டுக்கிளிகள் சேதப்படுத்துகிறது. சில இடங்களில் வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது.

16. எவ்வளவு ஆழம் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும்?
மண் தன்மையானது ஆழமாக உள்ள நிலத்தில் 1.5*1.5*1.5 அடி நீளம், அகலம், ஆழ குழி எடுத்தும் மண் தன்மை குறைவாக உள்ள இடங்களில் 2*2*2 அடி நீளம், அகலம், குழி எடுத்து நடவு செய்யலாம்.

17.மலைவேம்பு மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
மலைவேம்பு மரத்தின் ஆயுட்காலம் 40/50 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.

 

சிமெண்ட் இல்லாமல் மண் கற்கள்

சிமெண்ட் இல்லாமல் cossco தயாரித்த இறுக்கிய மண் கற்கள் 6 மாதம் கழித்து

0% cement mud blocks after 6 months.சிமெண்ட் இல்லாமல் cossco தயாரித்த இறுக்கிய மண் கற்கள் 6 மாதம் கழித்து.

Posted by மரபுசார் கட்டுமான மையம்- cossco on Wednesday, 23 August 2017

It’s fair to say that rammed earth, as a construction technique, has stood the test of time. It has been used to create buildings around the world whose beauty and robustness are still visible today, like the Alhambra in Spain and the Great Wall of China, both built more than 1,000 years ago.

Traditional rammed earth is made of a mix of clay-rich soil, water and a natural stabiliser such as animal urine, animal blood, plant fibres or bitumen. It is then compacted inside temporary formworks that are removed after the mix has dried and hardened. The resulting structure can withstand compressive forces of up to 2.5 megapascals (around 10% of the average compressive strength of modern bricks).

The walls can be reinforced using embedded timber beams or bamboo grids, and of course they need some architectural features to protect them from the rain and wind. Historical examples of buildings made of traditional rammed earth can be found in South America, China, India, the Middle East and North Africa.

Thanks Hari for the Mud bricks photo

சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை-லாரி பேக்கர்

சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை
ஹரி

வீடோ அல்லது நிறுவனக் கட்டிடமோ, எதுவாக இருந்தாலும், ‘சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’, அதில் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பியவர் லாரி பேக்கர்.
‘பணம் இருக்கிறது என்பதற்காக, அதிகப்படியான பொருட்செலவில் பிரம்மாண்ட கட்டிடங்களை எழுப்பக் கூடாது. அதுதான் சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை
என்று அவர் வரையறுத்தார்.

அவரின் கட்டிடங்கள் பெரும்பாலும் வட்டவடிவத்தில் இருப்பதைப் பலரும் கண்டிருக்கலாம். அப்படி அவர் கட்டியதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ஒரு கட்டிடம் வட்ட வடிவத்தில் இருந்தால், சுவர்களின் நீளம் குறைவானதாக இருக்கும். அதே கட்டிடம் செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ இருந்தால், சுவர்களின் நீளம் அதிகமாக இருக்கும். சுவர்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றனவோ அதற்கேற்ப கட்டுமானச் செலவுகளும் அதிகமாக இருக்கும். எனவே, வட்ட வடிவக் கட்டிடங்களைக் கட்டலாம். அது செலவைக் குறைக்கும் என்றார். சமூகப் பொறுப்புள்ள கலைக்கு இது ஒரு சான்று!

“இதனால்தான் அவர் பல நேரங்களில் அரசின் கட்டிடக் கலைக் கொள்கைகளை விமர்சித்தார். ஒரு முறை மத்திய அமைச்சர்கள் தலைமையில், நாட்டில் உள்ள வீடற்றவர்களின் நிலையைப் போக்க பல லட்சங்கள் செலவு செய்து வீடுகள் கட்டித் தருவதற்கான பத்து நாள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு லாரி பேக்கரும் அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அரசின் கட்டுமானக் கொள்கைகளின் மீது விமர்சனம் கொண்டிருந்த பேக்கரோ, அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தான் அங்கு வந்து திரும்புவதற்கான விமானப் பயணச் செலவு, அங்கு தங்கியிருக்க ஆகும் செலவு, உணவுச் செலவு ஆகியவற்றை எல்லாம் கணக்கிட்டால் ரூ. 30 ஆயிரம் செலவாகும் என்றும், எனவே அந்தப் பணத்தைத் தனக்கு அனுப்பிவைத்தால் இங்கிருக்கும் இரண்டு ஏழைகளுக்கு என்னால் வீடுகள் கட்டித் தந்துவிட முடியும் என்றும் என்று கூறி, அந்த ஏழைகளின் விவரங்களையும் இணைத்து எழுதியிருந்தார்.

இவ்வளவு குறைந்த பணத்தில், இரண்டு வீடுகள் கட்ட முடியும் என்பதை அரசு அதிகாரிகளால், ஒப்பந்தக்காரர்களால், சக கட்டிடக் கலைஞர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பேக்கர் பலரின் கிண்டலுக்கு ஆட்பட வேண்டியிருந்தது.

எகிப்தின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான ஹசன் ஃபாதியின் கட்டிடங்களோடு பேக்கரின் கட்டிடங்கள் ஒப்பிடப்படுவது வழக்கம். ஆனால், ஹசன் ஃபாதியின் சிந்தனைகளும் பணிகளும் சொந்த நாட்டு மக்களாலேயே கைவிடப்பட்டு வர, பேக்கரின் சிந்தனைகளோ இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்கவும் தற்போது முன்னெப்போதையும்விடப் பிரபலமாகி வருகின்றன” என்று லாரி பேக்கர் குறித்த தன் புத்தகத்தில் (Laurie Baker, life, work, writings) கவுதம் பாட்டியா எழுதுகிறார்.

தான் கட்டிக்கொடுக்கும் வீடுகளைத் தன் வீட்டைக் கட்டுவதுபோல அக்கறை எடுத்துக்கொண்டு கட்டினார் பேக்கர். இதனால் ‘தன் வாடிக்கையாளர்களின் கனவுகளைத் தன் கனவுகள் போல பாவித்தவர்’ என்று அவர் புகழப்படுகிறார். ஆம், அவர் கட்டிடங்களை, கனவாகக் கற்பனை செய்தார். அந்தக் கனவுகள், இன்று பலருக்கு நிஜமாகி இருக்கின்றன.

பேக்கரின் நுட்பத்தை அறிவியலாக்கியவர்!

பேக்கர் அறிமுகப்படுத்திய கட்டிடக் கலைத் தொழில்நுட்பங்களில் ‘ரேட் ட்ராப் பாண்ட்’ (Rat Trap Bond) மற்றும் ‘ஃபில்லர் ஸ்லாப்’ (Filler Slab) ஆகிய இரண்டு நுட்பங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த இரண்டு நுட்பங்களும், கட்டிடங்களுக்கு வலிமை சேர்க்கக்கூடியவை என்று பேக்கர் நம்பினாலும், அவரால் அதனை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

பேக்கரின் அந்த வருத்தத்தைப் போக்கியவர் பேராசிரியர் சாந்த குமார். அண்ணா பல்கலைக்கழக சிவில் இன்ஜினியரிங் துறை முதன்மையராகவும், சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், பேக்கர் தந்துவிட்டுச் சென்ற தொழில்நுட்பங்களைப் பற்றி நமக்கு விளக்குகிறார்.

“இன்றெல்லாம் கட்டிடங்கள் கட்டும்போது, பொதுவாக, ‘இங்கிலீஷ் பாண்ட்’ அல்லது ‘ஃப்ளெமிஷ் பாண்ட்’ எனும் தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதாவது, இந்த முறைகளில், செங்கலைப் படுக்க வைத்து, இடைவெளி இல்லாமல் சுவர் எழுப்புவார்கள். ஆனால் பேக்கரின் ‘ரேட் ட்ராப் பாண்ட்’ முறையில், செங்கலை நிற்க வைத்து, வெற்றிடங்கள் விட்டுக் கட்டப்படும். இந்த முறையில் கட்டும்போது, செங்கல் செலவும் குறையும், வேலை நேரமும் மிச்சமாகும். இதர முறைகளில் ஒரு சுவர் கட்ட ஆகும் நேரத்தில், இந்த முறையில் இரண்டு சுவர்களைக் கட்டிவிட முடியும். இந்தப் பொருளாதார மற்றும் நேரச் சிக்கத்தைக் கருத்தில் கொண்டுதான், பேக்கர் இந்த முறையை அறிமுகப்படுத்தினார்.

அதேபோல, இன்று கட்டிடம் கட்டும்போது கம்பி வைத்து கான்கிரீட் கூரைகள் போடுகிறோம். அப்போது கீழே உள்ள கான்கிரீட்டை நாம்பயன்படுத்துவதில்லை. அது தேவையற்ற பொருளாதாரச் செலவை ஏற்படுத்துகிறது. எனவே, கான்கிரீட்டுக்குப் பதிலாக மங்களூர் ஓடுகளை வைத்துக் கூரைகள் அமைத்தார் பேக்கர். ‘ஃபில்லர் ஸ்லாப்’ எனும் இந்த முறையில் அமைக்கப்படும் கூரைகள் எவ்வளவு அழுத்தம் தாங்குகின்றன என்பதைப் பரிசோதிக்க, மேலே அழுத்தம் கொடுத்தால் அந்த அழுத்தம் கீழே எப்படிப் பரவுகிறது என்பதை அறியும் ‘ஃபைனைட் எலிமென்ட் அனாலிசிஸ்’ எனும் பரிசோதனையை மேற்கொண்டோம். அதில் இந்த வகைக் கூரைகள், இன்று நாம் கட்டும் கூரைகளைவிட பலம் வாய்ந்தவை என்பதை அறிந்தோம்.

இந்தக் கண்டுபிடிப்புகளை எல்லாம் 1993-94-ம் ஆண்டில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தோம். அதை அறிந்த பேக்கர், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து எங்களைச் சந்தித்து, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அதன் பிறகு, 2004-ம் ஆண்டில் சுனாமி ஏற்பட்டபோது, அதில் பாதிக்கப்பட்ட வீடுகளை மறுகட்டமைப்புச் செய்தபோது, பேக்கரின் இந்த உத்திகளைப் பயன்படுத்தினோம்” என்கிறார் சாந்த குமார்.

பேக்கரின் உத்திகள், இப்போது சட்டங்கள்!

“பேக்கர் அறிமுகப்படுத்திய அந்த இரண்டு உத்திகளும், ‘இந்தியத் தரச் சான்றிதழ்’ அமைப்பு வெளியிட்டுள்ள ‘நேஷனல் பில்டிங் கோட், 2016’ எனும் தேசிய கட்டிட விதிகளில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பே, அந்த இரண்டு உத்திகளும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சட்ட ரீதியாக அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன. தற்போது இந்தக் கட்டிட விதிகளில், இவை சேர்க்கப்பட்டிருப்பதால், அந்த உத்திகளுக்குச் சட்ட ரீதியாகவும் அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்கிறார் சுரேஷ். புதுடெல்லியில் இயங்கி வந்த குடியிருப்பு மற்றும் நகர மேம்பாட்டுக் கழகத்தின் (ஹட்கோ) முதன்மை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். பேக்கர் கட்டிய கடைசி வீடு, இவருடையதுதான். அந்த வீட்டுக்கு ‘இசா வஸ்யம்’ என்று பெயர்.

“1995-97-ல் நாங்கள் இந்த வீட்டைக் கட்டினோம். இது மொத்தம் 3800 சதுர அடிகள் கொண்டது. அன்றைய தேதியில் ஒரு சதுர அடிக்கு ரூ. 1000 என்ற அடிப்படையில் பலர் வீட்டைக் கட்டினர். அதன்படி கட்டியிருந்தால், எங்களுக்கு ரூ.40 லட்சம் செலவாகியிருக்கும். ஆனால் லாரி பேக்கரோ, ஒரு சதுர அடிக்கு ரூ.300 என்ற அடிப்படையில் வீட்டைக் கட்ட முடியும் என்றார். அப்படியே கட்டவும் செய்தார். எங்களுக்கு ஆன செலவோ வெறும் ரூ.11 லட்சம்தான். என்றால், அவர் எந்த அளவுக்குக் கட்டுமானப் பொருட்களைச் சிக்கனமாகக் கையாண்டார் என்பதை நினைத்துப் பாருங்கள். அது மட்டுமல்ல, இயற்கையாகக் கிடைத்த பொருட்களை மட்டுமே வைத்து அவர் எங்கள் வீட்டின் பெரும்பகுதியைக் கட்டினார். அதனால்தான், எங்களுக்குக் குறைந்த செலவில், ஆனால் அதே சமயம் கலை நயத்துடன் கூடிய வீடு கிடைத்தது” என்கிறார் அவர்.

ஒரு கட்டிடம் வட்ட வடிவத்தில் இருந்தால், சுவர்களின் நீளம் குறைவானதாக இருக்கும். அதே கட்டிடம் செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ இருந்தால், சுவர்களின் நீளம் அதிகமாக இருக்கும். சுவர்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றனவோ அதற்கேற்ப கட்டுமானச் செலவுகளும் அதிகமாக இருக்கும். எனவே, வட்ட வடிவக் கட்டிடங்களைக் கட்டலாம். அது செலவைக் குறைக்கும் என்றார்.

தொடரும்…..
உங்கள் ஆதரவுடன் நான் ஹரி

சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் Part 2

#சுட்டெரிக்கும் வெயிலுக்கு யார் காரணம்??

பகுதி 2

நகரத்திலேயே பிறந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கிராமத்தில் பிறந்தவர்கள், பால்யத்தை செலவிட்டவர்கள், இரண்டொரு நிமிடம் கண்களை மூடி, கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுங்கள்… உங்களால் உங்களது கிராமத் தெருவின் புழுதி வாசனையை நுகர முடிகிறதா… ? உங்கள் முகத்தில் வீசிய இளந்தென்றல் காற்றை உணர முடிகிறதா…? கீற்றோ, பனை ஓலையோ அல்லது நாட்டு ஓடோ வேய்ந்த உங்கள் வீட்டில் காலையில் நுழையும் ஒளியை பார்க்க முடிகிறதா…?. வீடெனப்படுவது அதுதான்….

 

சரி… விழிகளை திறங்கள்… நிகழ்காலத்திற்கு வாருங்கள். அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார விளக்குகளை போடாமல் உங்களால் ஒளியை பெற முடிகிறதா, மின்விசிறி இல்லாமல் காற்று வருகிறதா…? இயற்கையின் அனைத்து பந்தமும் அறுபட்டிருக்கும் அந்த கான்கிரீட் குவியல் எப்படி வீடெனப்படும்?

கிராமத்திற்கு செல்ல சொல்லவில்லை, கிராமத்தை உருவாக்க சொல்கிறேன்:

கிராமத்திற்கு செல்ல சொல்கிறாயா… சும்மா பிதற்றாமல் நடைமுறையை பேசு என்கிறீர்களா…? ஆம் அனைவருக்கும் உகந்த நடைமுறையை முன்மொழிவதுதான் இந்த தொடரின் நோக்கம். நான் கிராமத்திற்கு திரும்பி செல்ல சொல்லவில்லை, நீங்கள் வசிக்கும் இடத்திலேயே கிராமச் சூழலை உருவாக்க சொல்கிறேன். ஓலை குடிசை வீட்டில் வாழச் சொல்வது இந்த தொடரின் நோக்கம் அல்ல. அது மாநகர நடைமுறைகளுக்கு சாத்தியமானதும் இல்லை. ஆனால், ஆரோக்கியமான, தரமான மாற்று வழிகளை காட்டுவது மட்டுமே நோக்கம்.

நாம் ஆசை ஆசையாக பெரும் பொருட்செலவில் கட்டிய வீட்டில், மின்சாரம் இல்லாமல், UPS இல்லாமல் ஒரு மணிநேரத்தை நம்மால் செலவிட முடிகிறதா. நம் நவீன கான்கிரீட் குவியல், நம்மை சந்தையை சார்ந்திருக்க வைக்கிறது. அதிக மின்விளக்குகளை வாங்க வைக்கிறது, அதிக மின்விசிறி மற்றும் ஏசி யூபிஎஸ் வாங்க வைக்கிறது. அதாவது, நம்மை மேலும் மேலும் சந்தையை நோக்கி சார்ந்து இருக்க செய்கிறது.

நம் வீடுகள் இப்படிதான் இருக்குமென்றால், நமக்கு அதிக மணல், அதிக ஜல்லி, அதிக மின்சாரம் தேவை. அதற்கு நாம் இயற்கையை சுரண்டதான் வேண்டும். வேறு வழியில்லை. ஆனால், வீடென்பது இதுவல்ல… வீடு நமக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், முழு விடுதலை பெற்றவனாக நம்மை உணர செய்ய வேண்டும், இயற்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அப்படிதான் வீடுகள் முன்பு இருந்தது.

30 கி.மீ சுற்றுவட்டத்தில் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்:

நாம் கட்டும் வீடு எப்போதும், ஒரு 30 கி.மீ வட்டத்தில் என்ன மூலப்பொருள் கிடைக்கிறதோ அதிலிருந்து கட்டியதாக இருக்க வேண்டும். நீங்கள் பழங்குடிகள் வசிப்பிடத்தையோ, நவீன குளிர்பானங்கள் நுழையாத ஒரு குக்கிராமத்தையோ பார்வையிடுங்கள். அங்கு மக்கள் இன்னும் அப்படிதான் வீடு கட்டுகிறார்கள். அவர்கள் இயற்கையை சுரண்டுவதில்லை, அருகில் என்ன மூலப்பொருள் கிடைக்கிறதோ அதைக்கொண்டே வீடு கட்டுகிறார்கள். அது உயிருள்ள வீடாக இருக்கிறது. நம் தமிழர் கட்டடக் கலை அத்தகையது தான். ஆனால், வழக்கம் போல நமக்கு நம் மரபு மீது உள்ள தாழ்வு மனபான்மையில், அடிப்படை தேவையான வீடு கட்டுவதற்கு கூட மேற்கத்திய நாடுகளின் வழியை பின்பற்றுகிறோம். ஆங்கிலேயர்கள் இங்கு வருவதற்கு முன்பு நாம் என்ன வெறும் வனாந்திரத்திலேயா வசித்தோம்…? ஆனால், இப்போது மேற்கத்திய நாடுகள் தெளிவாகிவிட்டன. நம் நிலைதான் புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்டதாக ஆகிவிட்டது.

மாநகரங்களுக்கு இது எப்படி பொருந்தும்?

சரி. புரிகிறது. இது எப்படி மாநகரங்களுக்கு பொருந்தும் என்கிறீர்களா…? நிச்சயம் பொருந்தும். நம் மக்களிடம் பழகி, நம்மிடமிருந்து வீடுகட்ட பாடம் படித்தவர் ‘லாரி பேக்கர்’ (Laurie Baker). அவர் சூழலியலை கெடுக்காத மரபு வீடுகள் குறித்து நிறைய ஆய்வு செய்து பல வீடுகளை கட்டி உள்ளார். அவர் சொல்கிறார், “வீடுகள், உள்ளூரின் தட்ப வெப்ப நிலைமைகள், நிலவியல், பிரதேசத்தின் இயல்புகள், கனிமபொருட்கள், தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், ஆகியவற்றை கருத்தில் கொண்டதாகாவும், இயற்கை இடர்பாடுகளுக்கு தாக்குபிடிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” என்று.

இவர் முன் மொழிந்து சென்ற வீடுகட்டும் முறை நவீனத்தையும் பழமையையும் இணைப்பது, இயற்கையை அதிகம் சுரண்டாதது, செலவு குறைவானது. காற்றும் வெளிச்சமும் இயல்பாக உள்ளே வரவல்லது.

லாரி பேக்கர் மட்டுமல்ல, நம் சமகாலத்திலேயே எத்தனையோ பொறியாளர்கள் இந்த வகை கட்டடங்களை கட்டிவருகிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்த, மெக்சிகோவில் படித்த வருண் இது போன்ற கட்டங்களை கட்டி வருகிறார். அவர், “இயற்கையோடு இயைந்து வாழ இதுவே சிறந்த வழி”என்கிறார்.

நாம் நம் அளவில் இயற்கையை சுரண்டுவதை குறைத்துக் கொள்ள, இது போன்ற மாற்று வீடுகளை முயற்சிக்க வேண்டும். இது இயற்கையை காப்பதற்கான வழி என்று பெருமிதம் கொள்ள வேண்டாம், இயற்கை தன்னை தானே காத்துக் கொள்ளும். இது நம்மை காத்து கொள்வதற்கான வழி.

இதைபோன்ற வழிகளில் செல்லாமல், இயற்கையின் கொடையான வெயிலையும், மழையும் நாம் சபித்து ஒரு பயனும் இல்லை.

(தொடரும்)

உங்கள் ஹரி

PART 1 of சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார்

#சுட்டெரிக்கும்_வெயிலுக்கு_காரணம்_யார்

நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை அரிசியிலும், வெயிலும் மழையும் கலந்து இருக்கிறது. அரிசியில் மட்டுமல்ல, காய்கறிகள், பழங்கள், நீர் என இயற்கையின் அனைத்து கொடையிலும் வெயில் இருக்கிறது; மழை இருக்கிறது. நாம் இதனைதான் அள்ளி பருகுகிறோம், உண்கிறோம். ஆனால், மோசமான அரசு நிர்வாகம் வெயிலையும், மழையையும் நமக்கு அந்நியமாக்கிவிட்டது, எதிரியாக்கிவிட்டது. மழையை, வெயிலை தூற்றத் துவங்கிவிட்டோம்.

“மழையும், வெயிலும் சரியான விகிதத்தில் இருந்தால் மகிழலாம், இரு கரம் நீட்டி வரவேற்கலாம். ஆனால், நிதர்சனம் அப்படி இல்லையே…” என்னும் சாமான்யனின் வாதத்தையும் புறம்தள்ளிவிட முடியாது. ஆம், காலநிலை மோசமாக மாறி இருக்கிறது. நாம் இயற்கையை வரம்பு மீறி சுரண்டிவிட்டோம். அது தன்னை புதுப்பித்துக் கொள்ள அதிக மழையையும், வெயிலையும் தருகிறது. பருவ நிலை மோசமாக ஆனதற்கு யார் காரணம் ? அரசுகள் மட்டும்தானா ? தனி மனிதனின் பொறுப்பின்மை, அலட்சியம் காரணம் இல்லையா ? சீரழிந்த சூழலுக்கு நாம் அரசுகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. அரசு நிர்வாகம் பிரதான காரணமென்றாலும், அரசு மட்டும் காரணமில்லை. ஒவ்வொரு தனி மனிதனின் கரங்களிலும் கறை இருக்கிறது.

நாம் ஒரு பக்கம் மணற் கொள்ளை, கனிம வளக் கொள்ளையை பற்றிப் பேசுகிறோம். இன்னொரு பக்கம், பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நம் தேவைக்கு அதிகமாக பல மாடி கட்டடங்கள் கட்டுகிறோம், கிரானைட் கல் பதிக்கிறோம். அதாவது ஒரு பக்கம், ஒரு குற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டே, நாம் இன்னொருவர் மீது பழி சுமத்துகிறோம். இது முரண் இல்லையா ? மணற் கொள்ளை, கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும். இதில் மாற்று கருத்தில்லை. ஆனால், அதே நேரம் நாமும் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் தங்கும் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம்.

 

வீடெனப்படுவது யாதெனில்…

நமக்கு வீடு என்றவுடன் உடனே நினவுக்கு வருவது என்ன…? அண்மையில், ஒரு தினசரியில் வந்த 2BHK house, starts from 35 lakhs, 3BHK house starts from 40 lakhs என்ற விளம்பரம் அல்லது சென்னைக்கு அருகே, மிக அருகில் 200 கி.மீ தொலைவில் என்று வீடு வாங்க பரிந்துரைக்கும் சின்னதிரை நடிகை. இவை நம் நினைவுக்கு வந்தால், நாம் உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்தவராய் இருக்கலாம் அல்லது கால சுழற்சியில் நமது வேர்களை தொலைத்தவராக இருக்கலாம். ஆனால், உலகமயமாக்கலுக்கு பிறந்த குழந்தைகள் கூட, வீடு வரைய சொன்னால் மரத்துடன்தான் வீடு வரைகின்றன. இந்த பண்பு, அதன் மரபில் படிந்து இருக்கிறது. ஆனால், வளர்ந்த நாம்தான் மரத்தை மறந்து விட்டோம். சரி விஷயத்திற்கு வருவோம்.

அகிலனின் வரிகளில், “வீடெனப்படுவது யாதெனில், பிரியம் சமைக்கிற கூடு…..”.

வீடு கட்டுவதற்கு வாங்கிய தவணை கடன் கழுத்தை நெரிக்கும்போது எப்படி பிரியம் சமைக்க முடியும் என்கிறீர்களா? ஆம் நிஜம்தான். கடன் என்பதையெல்லாம் தாண்டி, இப்போது எங்குமே வீடுகள் பிரியம் சமைக்கிற கூடுகளாக இல்லை. வெப்பம் கக்கும் கான்கரீட் சிலுவைகளாக மட்டுமே இருக்கிறது. வீடுகள் தன் பன்முகத் தன்மையை, நம் மண்ணிற்குரிய தன்மையை இழந்து, சுயத்தை இழந்து வெறும் கூடாக நிற்கிறது. இந்த வீடுகள் நம் சூழலை சிதைக்கிறது. மோசமான நம் உடல் உபாதைகளுக்கு நாம் தங்கி இருக்கும் வீடுகளும் ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நாம் வீட்டில் வசிக்கிறோமா அல்லது கல்லறையிலா…?

நாம் வசிப்பது நிச்சயம் வீட்டில் அல்ல… கல்லறையில். அதிர்ச்சியாக இருக்கிறதா… ஆம். பொக்கலைன்களின் இயந்திர கைகள், பெரும் வெறிகொண்டு பாறைகளை கொன்று ஜல்லி சமைத்து, சாத்தான் வண்டிகள் ஆற்றின் மடியை சுரண்டி, கோடரிகள் பெரும் வெறிகொண்டு மரங்களை வெட்டி எழுப்பிய வீடு எப்படி வீடெனப்படும், அது நிச்சயம் கல்லறைதான். மலைகளின், மரங்களின், ஆற்றின் கல்லறை.

முட்டாள் தனமாக யோசிக்காதே…. மண் அள்ளக் கூடாது, பாறையை வெட்டக்கூடாதென்றால் பிறகு எதைக்கொண்டு வீடு கட்டுவது… எங்குதான் வசிப்பது என்பது உங்கள் கேள்வியா? வீடு கட்ட மண் தேவை, கல் தேவை, மரம் தேவைதான். ஆனால் அது எந்த மண், எந்த கல், எந்த மரம் என்பதில்தான், சூழலியலுக்கான மொத்த விஷயமும் இருக்கிறது. நாம் எங்கு வசித்தோம் என்ற தேடலில்தான், நாம் எங்கு வசித்தல் நலம் என்ற பதிலும் இருக்கிறது.

தொடரும்….
ஹரி

சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் Part 2

நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு

நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு* – சிறு தொகுப்பு (Bio Control Agents)

வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.
தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும்.
தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்
.பழங்காலங்களில் விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தியதால், அது தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தியது. இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள், பூச்சிக்கொல்லியை பயன்படுத்துகின்றனர்.
பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை அடிக்கும்போது, முதலில் அழிவது நன்மை செய்யும் பூச்சிகள் தான்.
இதனால், நோய்களும் அதிகம் தாக்குகிறது; விளைச்சலும் குறைகிறது.

பூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் மட்டுமல்லாமல், வயலில் வாழும் பல நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து விட்டன. இன்றைய நிலத்தடி நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்வற்றிற்கு பூச்சிக்கொல்லிகளும் காரணம்.
வரப்புகளில் தட்டைப் பயிரை பயிர் செய்தால், அஸ்வினிப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். இவற்றை உண்ண, நன்மை செய்யும் பூச்சிகள் வருவதால், இது தடுப்பரண் போல, வயலில் செயல்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
அதேபோல், மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் பூச்செடிகளை பயிரிட வேண்டும். எடுத்துக்காட்டாக செண்டிப்பூ, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புகளில் நட்டு வைத்தால், அது நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும்.

வரப்புகளில், மக்காச்சோளத்தை ஆங்காங்கே நட்டு வைக்கலாம். இது, ‘லைவ் ஸ்டாண்ட்’ போல செயல்பட்டு, பறவைகள், ஆந்தைகள் அமர்ந்து, தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன உதவும்.

வரப்புகளில் பொறிப்பயிராக ஆமணக்கு செடியை, எட்டு அடிக்கு ஒன்றாக நட்டு வைக்கும் போது, இந்தச் செடியின் மூலமாக, வயலில் எந்தப் பூச்சி உள்ளது எனக் கண்டுப்பிடிக்கலாம்.
மேலும், வயலை கசப்பாக மாற்ற வேப்பங்கொட்டையை அரைத்து, பயிர்களில் தெளிக்கலாம். இந்தக் கசப்பானது தீமை செய்யும் பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை, பக்கவாதம் போன்ற நோய்களை உண்டு பண்ணி, பூச்சிகளை அழித்துவிடும்.

1. *வண்டினங்களை அதன் புழுப்பருவத்திலேயே அழிக்க*: மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae) பூஞ்சானம்

2. *வெர்ட்டிசீலியம் லெக்கானி (Verticillium Lecanii):* – சாறு உறிஞ்சும் பூச்சிகள், மெல்லிய தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு.

3. *பெவேரியா பேசியானா (Beauveria Bassiana):* – தடித்த தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு. (இலைப்புழு, காய்ப்புழு போன்றவை)

மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae): இது, வண்டுகளை அழிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. பச்சைப் பூஞ்சணம் எனவும் அழைக்கப்படுகிற இது, தண்டுத்துளைப்பான், வைரமுதுகுப்பூச்சி, காண்டாமிருக வண்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணைகளில் உள்ள ஈக்களைக் கட்டுப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். வேர்ப் பூச்சிகள், தத்துப்பூச்சிகள், கருவண்டு, வெள்ளை ஈக்கள்; கொடிவகைப் பயிர்களைத் தாக்கும் வண்டுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பணியையும் செய்கிறது.

இதன் மூலம் காண்டாமிருக வண்டை, அதன் புழுப்பருவத்திலேயே கட்டுப்படுத்தலாம்.எருக்குழிகளிலிருந்து இந்த வண்டு வளர்கிறது. எருக்குழிகளில் கடப்பாறையால் குழியெடுத்து, இந்தப் பூஞ்சணத்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து ஊற்ற வேண்டும். இந்தப் பூஞ்சணம் வண்டுகள் மற்றும் பூச்சிகளின் தோல் மீது படர்ந்து, வளர்ந்து உள்ளே ஊடுருவிச் செல்லும். பூச்சிகளின் உடம்பில் இருக்கும் திரவத்தை, இந்தப் பூஞ்சணம் மெள்ள மெள்ள உறிஞ்சத் தொடங்கும். இதனால் பூச்சிகள், வண்டுகள் ஒருவித தள்ளாட்டத்துடன் வாழ்ந்து, ஒரு கட்டத்தில் இறந்துவிடும்.

இந்தப் பூஞ்சணம் தானியங்கள், பயறுவகைப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், பருத்தி போன்றவற்றைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. இதை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்துக்கொண்டு, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மண்ணில் இடுவதாக இருந்தால், ஏக்கருக்கு ஒரு கிலோ மெட்டாரைசியம் பூஞ்சணத்துடன், 50 கிலோ தொழுவுரத்தைக் கலந்து நிலத்தில் தூவலாம். மாதம் ஒருமுறை இந்தப் பூஞ்சணத்தைத் தெளித்துவந்தால், மேலே சொன்ன பெரும்பாலான பூச்சிகள், வண்டுகள் பாதிப்பிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கலாம்.

வெர்ட்டிசீலியம் லெக்கானி (Verticillium Lecanii): இந்தப் பூஞ்சணம் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, செதில்பூச்சி, தத்துப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.

காய்கறிகள், பூக்கள், பப்பாளி போன்ற பயிர்களில் இதைப் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு ஒரு கிலோ வெர்ட்டிசீலியம் பூஞ்சணத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகக் கொடுக்க நினைப்பவர்கள், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம். சொட்டுநீரில் கொடுக்கும்போது கரைசலை நன்றாகக் கரைத்து, வடிகட்டிக் கொடுக்க வேண்டும்.
பெவேரியா பேசியானா (Beauveria Bassiana): பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் பூச்சிகளில் நோயை உண்டாக்கி, அழிக்கும் திறன் வாய்ந்தது, இந்த நுண்ணுயிர். இதை அனைத்துவகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். கரும்பில் தண்டுத் துளைப்பான், வாழையில் தண்டுகூன்வண்டு, கிழங்கு கூன்வண்டு ஆகியவற்றை அழிக்கிறது. நெற்பயிரைத் தாக்கும் புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, இலைச்சுருட்டுப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

Infection beauveria bassiana insects, zombie on plants in the wild

தக்காளியைத் தாக்கும் பழத்துளைப்பான்; பருத்தி, மிளகாய், நிலக்கடலை, சூரியகாந்தி, கனகாம்பரம் போன்ற பயிர்களைத் தாக்கும் பச்சைப்புழு, புரோடீனியாப்புழு; தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு போன்றவற்றுக்கு எதிராக இது செயல்படும்.

கத்திரி, தக்காளி, அவரை,  பீன்ஸ், வெண்டை போன்ற பயிர்களைத் தாக்கும் காய்ப்புழுக்களையும் இது கட்டுப்படுத்தும். குறிப்பாக, பெவேரியா பேசியானா பயிர்களின் இலையைத் தின்னும் புழுக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. இதை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.