நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு – சிறு தொகுப்பு (Bio Control Agents)
வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.
தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும்.
தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்
.பழங்காலங்களில் விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தியதால், அது தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தியது. இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள், பூச்சிக்கொல்லியை பயன்படுத்துகின்றனர்.
பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை அடிக்கும்போது, முதலில் அழிவது நன்மை செய்யும் பூச்சிகள் தான். இதனால், நோய்களும் அதிகம் தாக்குகிறது; விளைச்சலும் குறைகிறது.
பூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் மட்டுமல்லாமல், வயலில் வாழும் பல நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து விட்டன. இன்றைய நிலத்தடி நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்வற்றிற்கு பூச்சிக்கொல்லிகளும் காரணம்.
வரப்புகளில் தட்டைப் பயிரை பயிர் செய்தால், அஸ்வினிப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். இவற்றை உண்ண, நன்மை செய்யும் பூச்சிகள் வருவதால், இது தடுப்பரண் போல, வயலில் செயல்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
அதேபோல், மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் பூச்செடிகளை பயிரிட வேண்டும்.
எடுத்துக்காட்டாக செண்டிப்பூ, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புகளில் நட்டு வைத்தால், அது நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும்.
வரப்புகளில், மக்காச்சோளத்தை ஆங்காங்கே நட்டு வைக்கலாம். இது, ‘லைவ் ஸ்டாண்ட்’ போல செயல்பட்டு, பறவைகள், ஆந்தைகள் அமர்ந்து, தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன உதவும்.
வரப்புகளில் பொறிப்பயிராக ஆமணக்கு செடியை, எட்டு அடிக்கு ஒன்றாக நட்டு வைக்கும் போது, இந்தச் செடியின் மூலமாக, வயலில் எந்தப் பூச்சி உள்ளது எனக் கண்டுப்பிடிக்கலாம்.
மேலும், வயலை கசப்பாக மாற்ற வேப்பங்கொட்டையை அரைத்து, பயிர்களில் தெளிக்கலாம். இந்தக் கசப்பானது தீமை செய்யும் பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை, பக்கவாதம் போன்ற நோய்களை உண்டு பண்ணி, பூச்சிகளை அழித்துவிடும்.
1. *வண்டினங்களை அதன் புழுப்பருவத்திலேயே அழிக்க*: மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae) பூஞ்சானம்
2. *வெர்ட்டிசீலியம் லெக்கானி (Verticillium Lecanii):* – சாறு உறிஞ்சும் பூச்சிகள், மெல்லிய தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு.
3. *பெவேரியா பேசியானா (Beauveria Bassiana):* – தடித்த தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு. (இலைப்புழு, காய்ப்புழு போன்றவை)
மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae):
இது, வண்டுகளை அழிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. பச்சைப் பூஞ்சணம் எனவும் அழைக்கப்படுகிற இது, தண்டுத்துளைப்பான், வைரமுதுகுப்பூச்சி, காண்டாமிருக வண்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணைகளில் உள்ள ஈக்களைக் கட்டுப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். வேர்ப் பூச்சிகள், தத்துப்பூச்சிகள், கருவண்டு, வெள்ளை ஈக்கள்; கொடிவகைப் பயிர்களைத் தாக்கும் வண்டுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பணியையும் செய்கிறது.
இதன் மூலம் காண்டாமிருக வண்டை, அதன் புழுப்பருவத்திலேயே கட்டுப்படுத்தலாம்.எருக்குழிகளிலிருந்து இந்த வண்டு வளர்கிறது. எருக்குழிகளில் கடப்பாறையால் குழியெடுத்து, இந்தப் பூஞ்சணத்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து ஊற்ற வேண்டும். இந்தப் பூஞ்சணம் வண்டுகள் மற்றும் பூச்சிகளின் தோல் மீது படர்ந்து, வளர்ந்து உள்ளே ஊடுருவிச் செல்லும். பூச்சிகளின் உடம்பில் இருக்கும் திரவத்தை, இந்தப் பூஞ்சணம் மெள்ள மெள்ள உறிஞ்சத் தொடங்கும். இதனால் பூச்சிகள், வண்டுகள் ஒருவித தள்ளாட்டத்துடன் வாழ்ந்து, ஒரு கட்டத்தில் இறந்துவிடும்.
இந்தப் பூஞ்சணம் தானியங்கள், பயறுவகைப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், பருத்தி போன்றவற்றைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. இதை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்துக்கொண்டு, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மண்ணில் இடுவதாக இருந்தால், ஏக்கருக்கு ஒரு கிலோ மெட்டாரைசியம் பூஞ்சணத்துடன், 50 கிலோ தொழுவுரத்தைக் கலந்து நிலத்தில் தூவலாம். மாதம் ஒருமுறை இந்தப் பூஞ்சணத்தைத் தெளித்துவந்தால், மேலே சொன்ன பெரும்பாலான பூச்சிகள், வண்டுகள் பாதிப்பிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கலாம்.
வெர்ட்டிசீலியம் லெக்கானி (Verticillium Lecanii):
இந்தப் பூஞ்சணம் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, செதில்பூச்சி, தத்துப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.
காய்கறிகள், பூக்கள், பப்பாளி போன்ற பயிர்களில் இதைப் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு ஒரு கிலோ வெர்ட்டிசீலியம் பூஞ்சணத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகக் கொடுக்க நினைப்பவர்கள், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம். சொட்டுநீரில் கொடுக்கும்போது கரைசலை நன்றாகக் கரைத்து, வடிகட்டிக் கொடுக்க வேண்டும்.
பெவேரியா பேசியானா (Beauveria Bassiana):
பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் பூச்சிகளில் நோயை உண்டாக்கி, அழிக்கும் திறன் வாய்ந்தது, இந்த நுண்ணுயிர். இதை அனைத்துவகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். கரும்பில் தண்டுத் துளைப்பான், வாழையில் தண்டுகூன்வண்டு, கிழங்கு கூன்வண்டு ஆகியவற்றை அழிக்கிறது. நெற்பயிரைத் தாக்கும் புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, இலைச்சுருட்டுப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

தக்காளியைத் தாக்கும் பழத்துளைப்பான்; பருத்தி, மிளகாய், நிலக்கடலை, சூரியகாந்தி, கனகாம்பரம் போன்ற பயிர்களைத் தாக்கும் பச்சைப்புழு, புரோடீனியாப்புழு; தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு போன்றவற்றுக்கு எதிராக இது செயல்படும்.
கத்திரி, தக்காளி, அவரை, பீன்ஸ், வெண்டை போன்ற பயிர்களைத் தாக்கும் காய்ப்புழுக்களையும் இது கட்டுப்படுத்தும். குறிப்பாக, பெவேரியா பேசியானா பயிர்களின் இலையைத் தின்னும் புழுக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. இதை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.