குழந்தைகளுக்கான ‘இயற்கைச்சூழல் அறிதல் முகாம்’ , காட்டுப்பள்ளி நிலத்தில் கழிந்த இருதினங்களாக நிகழ்ந்தேறியது.
இயற்கையென்பதன் பேரங்கமாக நிலவுகிற சூழலமைப்பே காடுகள். மனத்தரை திடம்கொள்ளத் துவங்கும் சிறுவயதிலேயே, காட்டைப்பற்றி தெரிந்துகொள்வது ஒருவித மனோபலத்தை தருகிறது. காடுகளை அறிந்துகொள்வதற்கான அறிமுகக் கதவுகளாக பறவைகள் இருக்கின்றன. அப்பறவைகளையும், அவை வாழும் காடுகளையும், இன்னபிற சுற்றுப்புற சிற்றுயிர்களையும் அறிந்துகொள்ளச் செய்யும் முதல்வெளிச்சமாகவே இப்பயில்முகாம் தன்வழியமைந்தது.
சிறார்களுக்கானதாக மட்டுமில்லாமல், சிற்சில தருணங்களில் அவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து பங்கெடுக்கும் பகுதிகள் சூழலறிதலின் புத்தனுபவத்தை உண்டாக்கியது.

காடுளுக்குள் உலா போதல், பறவை பார்த்தல், பேரமைதிக்குள் ஆழ்ந்துபோதல், காதால் பார்த்து கண்ணால் கேட்டல், பறவையழைப்புகளை உணர்தல், தரையூறும் சிற்றுயிர்களையும் பட்டாம்பூச்சிகளையும் குணமறிதல்… இப்படி கானகத்துக்கு உள்ளமைந்த பயணமும், அவைகளை மையமிட்டு நிகழந்த உரையாடல், உருவம் வரைதல், மண்பொம்மையாக்கம், விதை-இறகு-உதிர் இலை சேகரித்தல், பல்லுயிர் பற்றின திரையிடல்… இப்படி வனத்துக்கு புறமமைந்த நகர்வுகள் எல்லாம் ஒன்றிணைந்து தன்னுணர்வின் அடிப்படையிலான பயிலுதலை சாத்தியப்படுத்தியது.
பறவைகள் பார்த்தறிதல், அதன் ஒலிகளை வைத்தே இனங்கண்டறிதல், தனித்தன்மையான குணாதிசியங்கள் என காடுவாழ் பறவைகள் பற்றிய முழுத்தோற்றத்தையும்… மழலையின் எளிமையோடு மனசுபதித்த ரவீந்திரன் அண்ணனின் அன்புழைப்பும் ஈடுபாடும்… வார்த்தைப்படுத்தலுக்கும் அப்பாற்பட்டது.

” இருட்டான அறை ஒரு குழந்தைக்கு பயத்தை தருகிறது. ஆனால், அங்கு வெளிச்சம் வந்துவிட்டால் பயம் போய்விடுகிறது. காரணம், அந்த அறைக்குள் என்ன இருக்கிறதென்பதை அவ்வெளிச்சம் குழந்தைக்கு காட்டிவிடுகிறது. அதேபோலத்தான் காடும், காடுகளுக்குள் என்ன இருக்கிறது என்பதனை வெளிச்சமிட்டு காட்டிவிட்டால் போதும், காட்டைப்பற்றிய பயமே குழந்தைக்கு இல்லாமல் போய்விடும் ”

ரவீந்திரன் அண்ணன் Raveendran Natarajan இதைச்சொன்ன போது உண்டான மனவிரிவு, காடுகளை காண்கிற பார்வைக்குள் கூடுதல் குவியம் கொடுத்திருக்கிறது.
இந்த பல்லுயிர் அறிதல் முகாமைத் தொடர்ந்து, இளம்பருவத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்கான சூழல்சந்திப்பு பயில்வுகளை நிகழ்ந்த முழுமையானதொரு திட்டமிடுதல் துவங்கியுள்ளது. உடனிருந்து உழைப்பை பகிர்ந்த அத்தனை மனதுக்கும் அன்பின் நன்றிகள்.
உதிர்ந்துகிடக்கும் இறகை
கையிலெடுக்கும் சிறுமி
ஒரு காடளவு பச்சையத்தை கண்களுக்குள் வைத்திருக்கிறாள்.
From : https://www.facebook.com/cuckoochildren/?hc_ref=ARR-SjjcUrEYsql3iFRYgxbLg5xSRkr5G-v91_WcejArTUfZbFsMaujoNzKHkCmKHc0