“விவசாயம் செய்கிறாயா? என்ன போட்டிருக்கிறாய் ?” என்று பார்ப்பவர் எல்லோரும் கேட்பார்கள். மனதிற்குள் திட்டி கொள்வேன்
“உன் வயசென்ன?” என்று பெண்களை கேட்பதும், “உன் சம்பளமென்ன” என்று ஆண்களை கேட்பதும், “இந்த வீடு என்ன விலை” என்று வீட்டுக்காரனை கேட்பதும் என்னை பொறுத்தவரை கேட்ககூடாத கேள்விகள். ஏனென்றால் பதில் சொல்லும்போது அதன் மறுபக்கத்தை எவரும் அவதானிப்பதில்லை.
கடுமையான சுட்டெரிக்கும் வெள்ளை வெயிலில், நிலத்தடி தண்ணீரெல்லாம் வறண்டு போன இடத்தில் பயிரைப்பற்றி யோசிக்கவா நேரம் ? ஏற்கனவே இருக்கும் மரங்களை காப்பாற்றுவதே பிரம்ம பிரயத்தனமாகும். தொடர்ந்து வெப்பக்காற்று அடிக்கும்போது 5 நிமிடத்துக்கொருமுறை தண்ணீர் குடித்து நிழலில் மல்லாக்க படுக்கத்தோன்றும். தண்ணீரே இல்லாத இடத்தில் புல் கூட கருகிவிடும். அப்படி தண்ணீர் இருந்தாலும் இறைப்பது எங்கனம் ?
தோட்டத்தில் எதுவும் தாமாக நடக்காது. ஒவ்வொரு துரும்பை நகர்த்தவும் முயற்சி, பணம் மற்றும் உழைப்பு அவசியம்.
ஒவ்வொரு பயிர் போடும்முன்பும் அதன் ஆயுட்காலம் முழுவதும் எப்படி தண்ணீர் பாய்ச்சுவது, பராமரிப்பது என்று திட்டமிட்டுதான் பிறகு போட முடியும். நிலம் எப்போதும் உங்களுக்காக தயாராக இராது. அதை பண்படுத்த வேண்டும். வேண்டிய நாற்றங்காலை கொண்டுவருவதே ஒரு வாரமாகும். மாதம் கூட ஆகலாம். இப்படியே ஒருமித்த சிந்தனையுடன் பல மாதங்கள் பயிரோடு கழித்துவிட்டு கடைசியில் விற்கும்/வாங்கும் உரிமை மட்டும் நம் கையிலிருக்காது.
Continue reading →